Saturday, October 1, 2022
Home > அரசியல் > ரஜினி ஏன் அரசியலுக்கு வர வேண்டும்? – #கேள்விபதில்-20

ரஜினி ஏன் அரசியலுக்கு வர வேண்டும்? – #கேள்விபதில்-20

கேள்வி: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக செய்திகள் வருகிறதே? அவர் ஏன் அரசியலுக்கு வர வேண்டும்?

பதில்:

இந்திய குடிமக்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினிகாந்த் ஒரு இந்திய குடிமகன். ஆக இந்திய அரசியலுக்கு அவர் தாராளமாக வரலாம். ஆனால் அவர் அரசியலுக்கு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டதே? என்ன குழப்பமாக இருக்கிறதா? நான் சொல்வது அவரது “கருத்து அரசியலைப் பற்றியது”. இதோ விளங்கச் சொல்கிறேன்.

1996ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்தது. ஆனால், மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், அதிமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பியது. இதனால் கோபமடைந்த மூப்பனார், தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கினார். அவர் ரஜினியிடம் நேரடியாகச் சென்று தமிழ் மாநில காங்கிரஸுக்கு ஆதரவு தர வேண்டினார். எப்போதும் போல ரஜினி நழுவினார். மக்களும் மாற்றத்தை விரும்பினர். ஆனால், ரஜினி நேரடி அரசியலுக்கு வராமல், கருத்து அரசியல் செய்தார். ஜெயலலிதா அம்மையாரின் ஆட்சி தொடர்ந்தால், இனி தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று “வாய்ஸ்” கொடுத்தார். மூப்பனாரும் வேறு வழியின்றி, திமுகழத்துடன் கூட்டணி உடன்படிக்கை செய்து, 41 இடங்களில் போட்டியிட்டார், அதில் 39ல் வெற்றியும் பெற்றார். அந்த தேர்தலில் தான், ஜெயலலிதா அம்மையார் பர்கூர் தொகுதியில் நின்று சுகவனம் என்ற திமுகழகத்தின் வேட்பாளரிடம் தோற்றுப்போனார். அதற்கு பிறகு ரஜினியின் ஒவ்வொரு திரைப்பட வெளியீட்டின் போதும், அவர் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்து அடக்கும். ஒவ்வொரு முறையும், ரஜினி எதாவது பஞ்ச் வசனம் பேசி எல்லோரையும் குழப்பத்திலேயே வைத்திருப்பார். ஆனால், படம் தவறாமல், அரசியல் வசனங்களும், நையாண்டிகளும் இடம் பெறும். 1996ற்கு பிறகு நடைப்பெற்ற தேர்தலில் அவர் கொடுத்த எந்த வாய்ஸும் பெரியதாக எடுபடவில்லை.

ரஜினிகாந்த் அவர்கள், கருத்து அரசியலில் பல காலமாக ஈடுபட்டுடிருந்தாலும், அவர் நேரடி அரசியலுக்கு வர தயங்கியதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி மீது ரஜினி வைத்திருந்த மரியாதையும், பாசமும். திமுக மீது ரஜினிக்கு சில மன வருத்தங்கள் இருந்தாலும், அதனை பல சமயங்களில் அவரே வெளிப்படுத்தியிருந்தாலும், கலைஞர் அழைத்தால், ரஜினி தவறாமல் கலைஞரை சந்திக்கச் சென்றுவருவார். கலைஞரிடமே  ரஜினி தனது விமர்சனங்களை வைத்திருக்கிறார் என்று சில ஆதரமற்ற தகவல்கள் உலாவருகின்றன. அரசியலுக்கு வந்தால் கலைஞரை எதிர்க்க வேண்டி வருமே என்பதை தவிர்ப்பதற்காக ரஜினி தேர்தல் அரசியலுக்கு வர தயங்கி இருக்கலாம்.

இரண்டாவது, அரசியல்வாதிகளால் தனது குடும்பத்திற்கும், தன்னை நம்பி இருப்பவர்களுக்கும் எந்த பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்று எண்ணியிருக்கலாம். இது, எனது தனிப்பட்ட அனுமானம் தான். ஆனால், இரு குழந்தைகளின் தகப்பன் என்கின்ற முறையில் ரஜினி தனது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி நிச்சயம் கவலைக் கொண்டிருப்பார். இதனை அவரது பயம் என்று எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை, அவரின் எச்சரிக்கை உணர்வாகக் கூட இருந்திருக்கலாம்.

இவையெல்லாம் வரலாறு. இனி நிகழ்காலத்திற்கு வருவோம்.

2016ஆம் ஆண்டு தமிழக அரசியல் வரலாற்றில் இரண்டு மாபெரும் வெற்றிடத்தை உருவாக்கிவிட்டது. அதிமுகவின் முகமாக, மூன்று தசாப்தங்களாக இருந்த ஜெயலலிதா அம்மையார் மறைந்துவிட்டார். திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி, வயது மூப்பு காரணமாக முடங்கிவிட்டார். திமுகவின் அடுத்த தலைவர் ஸ்டாலின் என்பதனை கலைஞரே வழிகாட்டிவிட்டதால், திமுகவின் கூடாரம் இன்னும் அப்படியே இருக்கிறது. ஆனால், அதிமுகவோ, மன்னார்குடி கோஷ்டி, எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டி, ஓ.பன்னீர்செல்வம் கோஷ்டி என மூன்றாக பிரிந்துகிடக்கிறது. ஓ.பன்னீர்செல்வத்தை தவிர மக்கள் மதிப்பு பெற்ற தலைவர்கள் அதிமுகவில் இல்லை. அதிலும் மன்னார்குடி கோஷ்டியில், சசிகலா-திவாகரன்-தினகரன் என்று மூன்று உட்பிரிவுகள் இருக்கின்றது. இது எங்கே போய் முடியுமோ என்று தெரியவில்லை.

தமிழக நலன்களை விட்டுக்கொடுத்துவிட்டு, நம் தன்மானத்தையும் காட்டிக்கொடுத்துவிட்டு, கூவாத்தூர் கூத்துகளால் நம் தமிழர்களை தலை குனியவைத்துவிட்டு, டில்லி சொல்கிற படி கேட்டு தலையாட்டி பொம்மைகளாகவும், எட்டப்பர்களாகவும், அடிமைகளாகவும் இருக்கிறார்கள் நம் ஆட்சியாளர்கள். இது குறித்து தமிழக மக்கள் அனைவரும் மனம் நொந்துப்போய் இருக்கிறார்கள். இது மட்டுமின்றி பாஜகவும் புறவாசல் வழியாக தமிழகத்தில் காலூன்ற தன்னால் இயன்ற எல்லா வழிகளிலும் முயன்றுக் கொண்டிருக்கிறது. இங்கே கவனிக்க வேண்டியே ஒரு அம்சம் இருக்கிறது. பாஜக தமிழகத்தில் வளர நினைப்பதை யாரும் விமர்சிக்கவில்லை, ஆனால் பாஜக கையாளுகின்ற யுக்திகளை தான் மக்கள் எதிர்கிறார்கள். இது பாஜகவிற்கும் நன்றாக புரிகிறது. அதனால் தான், எப்படியாவது ரஜினியை தங்களது முதல்வர் வேட்பாளராக முன்னிருத்த முயல்கிறது. வழக்கம் போல், ரஜினி நழுவிக் கொண்டிருக்கிறார்.

தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகளைக் கொண்டு, ஆட்சியைக் கலைக்க பாஜகவிற்கும் ஆசை தான். ஆனால் அப்படி நடந்து மீண்டும் தேர்தல் வந்தால், பலமான எதிர்கட்சியாக இருக்கும் திமுக, அசுர பலத்துடன் ஆட்சியைப் பிடிக்கும் சூழல் தமிழகத்தில் இருக்கிறது. இது 2018ல் நடக்கும் ராஜசபா தேர்தலில் பாஜகவிற்கு எதிராக அமையும். அவ்வளவு ஏன், 2004ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் தனிப்பெரும் கட்சியாக இருந்த பாஜகவால் ஆட்சியை பிடிக்கமுடியாமல் போனதற்கு மிக முக்கிய காரணம், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 40 தொகுதிகளையும் திமுக பிடித்தது தான். அது போன்று, அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் நடக்காமல் இருக்க பாஜக மிகுந்த கவனமாக இருக்கிறது.

இப்போது, பாஜகவிற்கு முன்னால் இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன. ஒன்று, ரஜினியை எப்பாடுபட்டாவது பாஜகவில் சேர்த்து அவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது. ரஜினி பாஜகவில் சேர்வதாக இருந்தால், உடனே, அதிமுக ஆட்சி களையும், மீண்டும் தேர்தல் வரும். ஆனால் இன்னுமும் ரஜினி பிடிகொடுக்காததால் இந்த வாய்ப்பு சாத்தியமாவதற்கு வாய்ப்பு குறைவு தான்.

இரண்டாவது வாய்ப்பு, ரஜினியை தனிக்கட்சி துவக்க வைத்து, தமிழகத்திலுள்ள ஜாதிக் கட்சிகளை சேர்த்துக் கொண்டு, பாஜக தலைமையில் ஒரு கூட்டணி அமையலாம். இதில் ஓ.பன்னீர்செல்வம் சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. இது சாத்தியமானால், 2018ஆம் ஆண்டு நடக்கப்போகும் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலோடு தமிழக சட்டமன்றத்திற்கும் தேர்தல் வரலாம். மோடியின் ஆசைப்படி அது நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலோடு சேர்ந்ததாகவும் அமையலாம்.

இப்போது பத்தியின் நோக்கமான, ரஜினி ஏன் அரசியலுக்கு வரவேண்டும், என்பதற்கு வருவோம். இன்றைய நிலையில், தமிழகத்தில் அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டுமெனில், ரஜினி தேர்தல் அரசியலுக்கு, அதுவும் பாஜக துணையுடன், வந்தால் மட்டுமே சாத்தியம். இப்போதய அதிமுக ஆட்சியை கலைக்கும் அதிகாரம் ரஜினியின் முடிவைப் பொறுத்திருக்கிறது. இது ரஜினி எதிர்பாராததாக இருக்கலாம், மக்கள் எதிர்பாராததாக இருக்கலாம், ஆனால் மக்களுக்கு நல்லது நடக்க வேண்டுமெனில் வேறு வழியில்லை. இதனை ரஜினியும் உணர்ந்திருப்பார். யாரும் கணிக்க முடியாத , எதிர்பார்க்காத திருப்பங்கள் நமக்கு காத்திருக்கிறது மக்களே.

ரஜினி தேர்தல் அரசியலுக்கு வர வேண்டும். அராஜக அதிமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்.