Saturday, April 27, 2024
Home > பயண அனுபவம் > கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலையே… – #பயண அனுபவம் – 9

கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலையே… – #பயண அனுபவம் – 9

பாண்டிச்சேரி பீச்சில் நடந்த ஒரு சின்ன அனுபவமே இப்பதிவு. நாங்கள் நான்கு பேர் பாண்டிச்சேரி சென்றிருந்தோம். (தேவேந்திரன் (தேவ்) , திருமுருகன் (திரு), தமிழரசன் (தமிழ்) மற்றும் நான்)

பாண்டிச்சேரி கடற்கரையில் இருக்கும் காந்தி சிலைக்கு எதிரே காந்தி மைதானம் இருக்கிறது. அந்த மைதானததைக் கடந்து சாலைக்கு அந்தப் பக்கம் சென்றால் பாரதி பூங்க வரும். பாண்டிச்சேரி சுற்றுலா வரும் எல்லா பயணிகளும் அந்த பூங்காவிற்கு தவறாமல் சென்றுவிடுவர். அந்த அளவிற்கு வெளிநாட்டவர் மத்தியிலும் பிரசித்திப் பெற்ற பூங்கா. ஒரு மணி நேரத்தில் பூங்காவை இரண்டு முறை சுற்றி வந்துவிட்டோம். தமிழும், திருவும் ஏகத்திற்கு புகைப்படம் எடுத்தார்கள். நானும் தேவேந்திரனும் பூங்காவை ரசித்துக் கொண்டிருந்தோம். மேலும், பூங்காவிற்கு அருகாமையிலேயே பாண்டிச்சேரி அருங்காட்சியகமும், பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநரின் மாளிகையான ராஜ்பவனும் இருக்கிறது.

நாங்கள் மாளிகை வாயிலருகே சென்ற பொழுது, பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அவர்கள், ராஜ்பவனின் தோட்டத்தில் பச்சை வண்ண உடையில் பவணி வந்துக் கொண்டிருந்தார். முதலில் அவரை எங்களுக்கு அடையாளம் தெரியவில்லை. நாங்கள் முதலில் அவரை தோட்டக்காரி என்று தான் நினைத்தோம். ஆனால் அருகில் சென்று பார்த்தப் பொழுது தான், அவர் கிரண்பேடி என தெரியவந்தது. அவருடன் ஒரு செல்பி எடுக்கலாம் என்று முயன்றோம். ஆனால் அதற்குள் அங்கிருந்த காவலர்கள் எங்களை விரட்டினார்கள். காவலர்களின் சப்தத்தை கேட்டு கிரண்பேடி எங்களைப் பார்த்துக் கையசைத்தார். நாங்களும் பதிலுக்கு கையசைத்துவிட்டு, ராஜ்பவன் முன் செல்பீ எடுத்துக் கொண்டு அருகில் இருந்த அருங்காட்சியகத்திற்குள் புகுந்தோம். பிரஞ்சுக்காரர்களின் வாழ்வியலையும், பாண்டிச்சேரியின் தொன்மையையும் பறைச்சாற்றும் பல பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. சில பொருட்களை பார்க்கும் போது புல்லரித்தது. அதனை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

பாண்டிச்சேரி செல்வோர் கண்டிப்பாக காண வேண்டிய இடங்களாக பாரதி பூங்கா, ராஜ்பவன் மற்றும் அருங்காட்சியகம் இருக்கிறது. இந்த மூன்று இடங்களையும் சுற்றிவிட்டு அருகில் இருந்த ஒரு பிரபல உணவகத்தில் பல வகையான பிரஞ்சு உணவு வகைகளை ருசி பார்த்தோம் (அது எங்களின் பர்சை பதம் பார்த்தது என்பது ஒரு தனிக்கதை). நாங்கள் உணவருந்திவிட்டு வெளியில் வந்த பொழுது மணி 5.30ஐ தொட்டிருந்தது. நாங்கள் நால்வரும் கடற்கரையில் இருக்கும் ஒரு பிரஞ்சு கவர்னரின் சிலையருகே சிறிது ஓய்வேடுக்கலாம் என அருகில் இருந்த பெஞ்சில் உட்கார்ந்தோம்.

தேவேந்திரனும், திருவும் ஐஸ்கிரீம் கேட்டார்கள். நாங்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு எதிரேயே Gelateria Montecatini Terme (GMT) என்று ஒரு ஐஸ்கிரீம் கடை இருந்தது. கடையை நோக்கி நானும் தமிழும் நகர்ந்தோம். நான் பேசிக் கொண்டு வந்ததை கவனிக்காமல் தமிழ் யாரையோ பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனிடம், “யாரைப் பார்க்கிறாய்?” என்று கேட்டேன்.

எங்க ஆபீஸ்ல வேலைப் பார்க்கும் பெண்ணு மாதிரியே இருக்கு… ஆனால் அவளானு தெரியல” என்றான்.

அந்தக் கடையில் ஐஸ்கிரீமின் விலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் சுவை பிரமாதமாக இருக்கும் என எங்களுக்கு அருகில் இருந்த இருவர் பேசிக் கொண்டிருந்தனர். நான்கு வகையான சுவைகளை தேர்வு செய்ததும், கப்பா? கோனா? என்று கேட்டார்கள். கோன் என முடிவு செய்து வாங்கிக் கொண்டு கிளம்பினோம். முதலில் தயாரான இரண்டை வாங்கிக் கொண்டு திருவிற்கும், தேவிற்கும் கொடுத்துவிட்டு திரும்பினேன். அதற்குள் திரு, மீதம் இரண்டையும் வாங்கிக் கொண்டு வெளியே வந்திருந்தான். அவனிடமிருந்து ஐஸ்கிரீமை வாங்கி சுவைத்துப் பார்த்தேன். சுவை அமிர்தமாக இருந்தது.

திரு எனக்கு இடது பக்கமாக ஐஸ்கிரீமை சுவைத்தப்படி வந்துக் கொண்டிருந்தான். நான் கடற்கரையை ரசித்துக் கொண்டும், ஐஸ்கிரீமை சுவைத்துக் கொண்டும், ஒரு கையில் காற்றில் அசையும் என் தலை முடியை கொதிக் கொண்டும், கடலை நோக்கி நடந்தோன். எனக்கு இடது புறமாக எதிரில் இருந்த பெஞ்சில் கடலை பார்த்தப்படி ஒரு காதல் ஜோடி கைக் கோர்த்து அமர்ந்திருந்தது. அப்போது மனதிற்குள், நானும் ஒரு நாள் என் மனைவியுடன் இங்கு வந்து அமர்ந்து, கடலை பார்த்துக் கொண்டு, இதோ போல ஐஸ்கிரீமை சுவைத்து, இயற்கையை இரசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

மணல் பரப்பிலே நுழைந்து அவர்கள் அருகிலே சென்றோம். கையில் இருந்த ஐஸ்கிரீமை, ஜொல்லு வழியும் நாவிற்கு அருகே எடுத்து வரும் வரை அமைதியாக இருந்தவன், நாவும், ஐஸ்கிரீமும் முத்தமிடும் வேளையில், என் கையில் இருந்த ஐஸ்கிரீமை தட்டிவிட்டு எனக்கு இடது புரமாக இருந்த அந்த ஜோடியிடம்,

ஹாய் திவ்யா… எங்க இங்க?” என்று தன்னை அறிமுகப்படுத்தி பேசிக் கொண்டிருந்தான்.

இவரு என் லவ்வர். இவரும் நம்ம கம்பனி தான். ஆனா பக்கத்து பில்டிங். சும்மா பாண்டிச்சேரி வந்தோம்…” என்று திவ்யா திருவிடம் பேசிக் கொண்டிருந்தாள். அவள் முகத்திலும், அவளின் காதலர் முகத்திலும் ஒரு விதமான எரிச்சல் கலந்திருந்தது. எங்களின் இருப்பை அவர்கள் விரும்பவில்லை என புரிந்தது. திவ்யாவிடம் நான் எதுவும் பேசவில்லை. (எனக்கும் அவளைக் கொஞ்சம் தெரியும்).

அடேய்… ஆசையா வாங்குன ஐஸ்கிரீமை கீழ தள்ளிவிட்டுடயே…” என்ற ஆத்திரத்தில் நான் திருவையே பார்த்துக் கொண்டிருந்தேன். திவ்யாவின் காதலரும் கோபமாக திருவையே பார்த்துக் கொண்டிருந்தார்.

ஒரு பொது இடத்தில் நமக்கு தெரிந்த ஒருவரோ, ஒரு ஜோடியே தென்பட்டால், அவர்களை விட்டு விலகிச் செல்வதே உசிதம். பார்த்தும் பார்க்காத மாதிரி விலகி விட வேண்டும். இது எங்கே நம் மக்களுக்கு விளங்கப் போகிறது. மற்றவரின் தனிமைக்கும், அது பொது இடமாகவே இருந்தாலும், நாம் மதிப்பளிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் நாகரிகமுள்ள சமுதாயமாக மாற்றம் காணுவோம்.

ஐஸ்கிரீம் உருகுது…  வாடா சீக்கிரம் போகலாம்….” என்று திருவை அழைத்துச் சென்றேன். தமிழும், தேவும் தூரத்தில் இருந்து எங்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

கைக்கு எட்டினது, வாய்க்கு எட்டலையே” என கீழே விழுந்த ஐஸ்கிரீமை பார்த்துக் கொண்டிருந்தேன்.

திவ்யாவின் காதலரும், கைக்கு எட்டினது, வாய்க்கு எட்டலையே” என நினைத்திருப்பாரோ?

மீண்டும் அதே கடைக்குச் சென்று, திருவின் செலவில் இரண்டும் கோன் ஐஸ்கிரீம் சாப்பிட்டது வேறு கதை.

– க க க போ…

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Vijay
7 years ago

எனக்கு இந்த பிரச்னைலாம் வராது… ஏனா நமக்கு தான் லவும் இல்ல ஐஸ் க்ரீம் சாப்புட்ற பழக்கமும் இல்லையே