Friday, April 26, 2024
Home > பயண அனுபவம் > என்னைத் தாலாட்ட வருவாளா…? – #பயண அனுபவம் – 7

என்னைத் தாலாட்ட வருவாளா…? – #பயண அனுபவம் – 7

மெத்தையில் கவிழ்ந்துப் படுத்திருந்தேன். தூக்கம் தெளிந்திருந்தது. ஆனால் எழுந்திருக்கவில்லை. அறையில் இருந்த வெளிச்சமும், சாலையில் இருந்து வரும் வண்டி சப்தங்களும்  வெகு நேரமாகிவிட்டதை உணர்த்தின. எழுந்து மணி பார்த்தேன். 8.30 ஆகியிருந்தது. காலைக்கடன்களை முடித்து, சோம்பல் முறித்து, அப்படியே ஒரு நகர் வலம் சென்று டீ குடித்துவிட்டு,  பேப்பர் வாங்கி வரலாம் என கிளம்பினேன்.

அன்றைக்கு வேலூர்  அரசு மருத்துவமனை அருகில் அறை எடுத்துத் தங்கியிருந்தேன். எப்போழுது வேலூர் வந்திருந்தாலும் அந்த லாட்ஜ் தான், கட்டணம் குறைவு என்பது தான் முக்கியக்காரணம். வேலூர் ஊராட்சி ஓன்றிய அலுவலகத்திற்கு எதிரே இருக்கும் சித்ரா காபி பாரில் டீ குடிப்பது என் வழக்கம். அங்கு காபி தான் நன்றாக இருக்கும், இருந்தாலும், எனக்கு அந்த கடையின் டீ பிடிக்கும். டபரா செட்டில் தரும் காபியை விட கண்ணாடி குவளையில் தரும் டீயை கையில் பிடித்துக் கொண்டு அருகில் இருக்கும் பேருந்து நிறுதத்தை வேடிக்கைப் பார்ப்பதில் ஒருவிதம் சுகம் ஒளிந்திருக்கிறது. (சைட் அடிக்கிறது எவ்வளவு நாசுக்காக சொல்றத பாருனு நீங்க சொல்றது காதுல கேட்குது… நான் அவன் இல்லையிங்க…)

ஜனவரி மாதம், காலை வேலை, வெயில் அவ்வளவாக இல்லை. இதமான காற்று வீசிக் கொண்டிருந்தது.நான் குடிக்கும் டீ எனக்கு கொடுத்த புத்துணர்ச்சியை விட அந்த சூழல் எனக்குள் ஒரு வித புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. (அங்… ). அந்த காபி கடை அருகே இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் பள்ளி, கல்லூரிக்குச் செல்ல பேருந்துக்காக மாணவிகள் காத்திருப்பது வழக்கம்!!! ( மாணவர்களும் தான்…)

டீயை குடித்துவிட்டு அருகில் இருந்த கடையில் தினமலர் செய்தித்தாள் வாங்கி படித்துக் கொண்டிருந்தேன். “இன்றைய ராசிப்பலன்” பகுதியில் எனக்கான ராசிப் பலனைத் தேடினேன். அதில், “தாங்கள் இன்று முக்கியமான ஒரு பெண்ணை சந்திக்க நேரிடும்” என்றிருந்தது.

அதுவரை செய்தித்தாளில் முழுகியிருந்த நான், சற்றே நிமிர்ந்து, என் சுற்றத்தைப் பார்த்தேன். கல்லூரிப் பேருந்துகளும், பள்ளி பேருந்துகளும் தங்களின் கடமையை நிறைவேற்றிக் கொண்டிருந்தன. அலுவலகம் செல்வோரும், இன்னும் பிற பணிகளுக்காக செல்வோரும் இரு சக்கர வாகனங்களிலும், மகிழிந்துவிலும் (கார்) சென்றுக் கொண்டிருந்தார்கள். வேலூர் நகரம் அன்றைய நாளை கனிவுடன் வரவேற்றுக் கொண்டிருந்தது. ஆனால் ஒரு பெண்ணின் குரல் மட்டும் என் காதுகளில் எதிரோலித்துக் கொண்டேயிருந்தது.

எனதருகில் இருந்த பூவிற்கும் பெண்ணிடம் ஒரு கல்லூரி மாணவி பேரம் பேசிக் கொண்டிருந்தாள். அவள் குரல் மட்டும் தான் எனக்கு கேட்டது. அவள் முதுகில் மாட்டியிருந்த பை தான் என் கண்களுக்குத் தெரிந்தது, முகம் தெரியவில்லை. அவளின் குரலில் ஒரு வித முதிர்ச்சி இருந்தது. ஒரு வழியாக பேரம் முடிந்து அவள் மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடினாள். நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் சூடியிருந்த மல்லிகைப்பூவின் மனம் என்னைச் சுண்டி இழுத்தது.

அவள் என் பக்கம் திரும்பினாள். அந்த நெடியில் அவள் கண்களுடன் என் கண்கள் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டன.

”என்ன?” என்று கேட்க புருவம் உயர்த்தி கேட்டாள்.

“ஒன்னுமில்லை…” என்று நான் கண் சிமிட்டி, தலையாட்டினேன்.

ஒரு சிறு புன்னகையை பதிலாக தந்துவிட்டு சாலையை கடக்க துவங்கியிருந்தாள்.

அந்த வேளையில் மீண்டும் நான் செய்தித்தாளை பார்த்தேன். “தாங்கள் இன்று முக்கியமான ஒரு பெண்ணை சந்திக்க நேரிடும்” என்பதனை மீண்டும் படித்தேன்.

அவளை மீண்டும் பார்த்தேன். அவள் பின்னாளே என்னையறியாமல் நடக்க துவங்கியிருந்தேன். இல்லையில்லை, அவள் சூடிய பூவின் வாசம் என்னை அவள் பின்னால் ஈர்த்தது. அவள் சாலையின் நடுவிலே இருக்கும் மீடியன் வரை சென்றிருந்தாள். சுற்றும் முற்றும் பார்த்தாள். நானும் அவளருகே வந்து சேர்ந்தேன்.

அவள் என்னைப் பார்த்தாள். நானும் அவளைப் பார்த்தேன். மெல்லியதாய் புன்னகைத்தேன். அவளுக்கு எதிர் திசையில் இருந்து ஒரு மாணவன் வந்தான். அவன் அவள் கைகளை இறுக்கிப் பற்றிக் கொண்டான். இது நடந்தது, நட்ட நடு ரோட்டில். அவர்கள் இருவரும் சாலையின் மறு பக்கத்தைக் கடக்க ஆயத்தமானார்கள். நானும் வந்த வேலையைப் பார்ப்போம் என்று என் அறைக்கு திரும்ப முற்ப்பட்டேன்.

அந்த நேரத்திலும், அவள் சாலையைக் கடக்கும் முன், “ஐ யம் கமிடட்” என்று என் காதுகளுக்கு மட்டும் கேட்குமாறு சொல்லிவிட்டு கிளம்பினாள்.

– நடு ரோட்டில் சிரித்துக் கொண்டிருந்தேன்… தனியாய்…