Sunday, June 26, 2022
Home > பயண அனுபவம் > செல்வி அக்கா… – பயண அனுபவம்-4

செல்வி அக்கா… – பயண அனுபவம்-4

”திருச்சிக்கு பஸ் எறிட்டேன் டா… இன்னும் மூனு மணி நேரத்துல அங்க வந்துடுவேன். பஸ் புடிச்சி வீட்டுக்கே வந்துடரேன் டா” என என் புகழுக்கு தகவல் கொடுத்துக் கொண்டே பேருந்தில் ஏறி அமர்ந்தேன்.

“அது எல்லாம் ஒன்னும் வேணாம் டா அன்பு… நான் பால் பண்ணையில நிற்கிறேன்… நீ… அங்கயே இறங்கிடு” அன்று சொல்லிவிட்டு போனைத் துண்டித்தான்.

இந்தப் பயணம் எனது நண்பனின் திருமண நிச்சயத்திற்காக. நான் அன்பு, அவன் புகழ். நாங்கள் இருவரும் திருச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் விடுதி அறைத் தோழர்கள். ஒரே கல்லூரி, ஒரே விடுதி, ஒரே அறை தான். ஆனால் பிரிவு தான் வேறு. அவனின் சொந்த ஊர் திருச்சி தான். ஆனால் மத்திய அரசு வேலையில் இருக்கும் அவன் பெற்றோர் அப்போது சென்னையில் இருந்ததாலும், திருச்சியில் இருக்கும் சொந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்ததாலும் அதனைப் பார்த்துக் கொள்ளவதற்காகவே இவன் திருச்சியில் முன்னனியில் இருந்த தனியார் பொறியியல் கல்லூரியிலேயே சேர்ந்துவிட்டான்.

அப்படி, இப்படி என எங்கள் கல்லூரி காலத்தில் நடந்த எல்லா நிகழ்வுகளையும் அசைப் போட்டுக் கொண்டிருந்ததில் திருச்சி வந்ததே தெரியவில்லை.

“ஏன்டா… உன் வீடு எனக்கு தெரியாதா? நானே வந்திருப்பேனே…” என அவனைப் போலியாக முறைத்தேன். ஆனால் உண்மையில் அவனை பால் பண்ணைக்கு வரச் சொன்னால் வரமாட்டான். என் வீடு உனக்கு தெரியாத, நீயே பஸ் புடிச்சி வீட்டுக்கு வந்துவிடு என்று சொல்வான். அதனால் தான் நான் பஸ்ஸில் வருவதாகச் சொன்னேன். உடனே வண்டி எடுத்துக் கொண்டு வந்துவிட்டான். அவன் கூட நான்கு வருடங்கள் ஒரே அறையில் இருந்தேனே, எனக்கு அவனைப் பற்றி கொஞ்சம் கூடவா தெரியாமலிருக்கும்.

“வீட்டுல செம விருந்து ரெடியா இருக்கு… வா ஜமாச்சிடலாம்” என அவன் வீட்டில் எல்லோரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என சொல்லிக் கொண்டே வந்தான்.

எனக்கு அசதியாக இருந்ததால் நான் அவன் வீட்டிற்கு போன உடனே குளித்திவிட்டு கொஞ்ச நேரம் படுத்துவிட்டேன். சிறிது நேரத்தில் எழுந்து உணவருந்திவிட்டு மொட்டை மாடிக்கு நாற்காலியைத் துக்கிக் கொண்டு போனோம். அங்க அவன் தன் வருங்கால மனைவியிடம் பேச ஆரம்பித்தான்.

திருச்சி தான் என்றாலும், அவன் வீடு இருந்த பகுதி கொஞ்சம் காடுகள் நிறைந்ததாகத் தான் இருந்தது. அவன் கொஞ்சம் கூட நேரத்தைப் பற்றிக் கவலைப் படாமல் பேசிக்கொண்டிருந்தான். எனக்கு கொட்டாவியாய் வந்துக் கொண்டிருந்தது. மொட்டை மாடியில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருந்தேன். இருபது நட்சத்திரங்களைக் கூட எண்ணி முடித்திருக்க மாட்டேன். அப்படியே உறங்கிக் போனேன்.

“டேய்… எழுந்திரு டா… மணி 1.30… சீக்கிரம் எழுந்துரு காலையில நிறைய வேலை இருக்கு” என என்னை எழுப்பினான்.

”தூங்கிட்டு தானே டா இருக்கேன். காலையில இருக்கிற வேலைக்கு ஏன்டா இரத்திரி 1.30 மணிக்கு எழுப்புற” என எதோ உளறிக் கொண்டே கீழே இருக்கும் அவனது அறைக்குச் சென்று படுத்தோம்.

காலையில் அவன் எனக்கு முன்னால் எழுந்து மீண்டும் தன் வருங்கால மனைவியிடம் பேச ஆரம்பித்திருந்தான்.

“சாமி… ஆளவிடு டா…” என நான் எழுந்து குளித்து, அவன் அம்மா செய்து வைத்திருந்த சப்பாத்திகளை விழுங்கி விட்டு அவனுக்காக காத்திருந்தேன்.

ஒருவழியாக எல்லாம் முடிந்து நிச்சயம் நடக்கும் மண்டபத்திற்கு எல்லோரும் கிளம்பினோம். மண்டபமும் பயணியர் விடுதியும் ஒன்றாக அமைந்திருந்தது. அங்கே மண்டபம் இலவசம். ஆனால் சாப்பாடு அவர்களிடம் தான் வாங்க வேண்டும். எல்லாம் நன்றாக இருந்தது. அங்கே இருந்த வேலைகளைப் பார்த்துக் கொண்டு, அவனையும் வம்பிழுத்துக் கொண்டு, விழாவை நன்றாக சிறப்பித்துக் கொடுத்துவிட்டு நானும் அவனும் அறைக்குத் திரும்பினோம்.

அப்போது உணவு பரிமாறுமிடத்தில் இருந்து ஒரு அக்கா எங்களை நோக்கி ஓடி வந்தது. அவரை எங்கயோ பார்த்த மாதிரி இருந்தது. புகழுக்கு அந்த அக்காவை சட்டென்று அடையாளம் தெரியவில்லை. ஆனால், அவர், நாங்கள் கல்லூரி விடுதியில் படிக்கும் பொழுது அங்கே உணவு பரிமாறிய அக்கா என்று எனக்குத் தெரிந்தது. உடனே புகழுக்கு புரிய வைத்தேன். அவனும் அக்காவை யார் எனக் கண்டுக் கொண்டான்.

அந்த அக்கா எங்களுக்காக எவ்வளவோ செய்திருக்கிறார். விடுதி நாட்களில், நானும் புகழும் காலை 9.00 மணிக்குத் தான் சில நாட்களில் எழுவோம். ஆனால் 9.00 மணிக்குள் விடுதியில் காலை உணவு கொடுத்து முடித்துவிடுவார்கள். அந்த சமையங்களில், அந்த வேலை செய்பவர்களுக்காக எடுத்து வைத்திருந்த உணவில் கொஞ்சம் எடுத்து வைத்திருப்பார். இது முதலாமாண்டு நடந்தது. நாளாக நாளாக அவர் எங்களுக்கென்று தனியாக உணவு எடுத்து வைக்க ஆரம்பித்துவிட்டார். மூன்றாமாண்டு மற்றும் இறுதி ஆண்டுகளில் புகழ் காலை உணவை அவன் வகுப்பு நண்பர்களுடன் உண்ண ஆரம்பித்ததால், விடுதியில் சாப்பிடுவதில்லை. ஆகவே, அவனுக்கு அந்த அக்கா பற்றி பெரிதாக அபிப்பிராயமில்லை. ஆனால் எனக்கு அப்படியா? அந்த அக்கா கையில் எவ்வளவு சாப்பிட்டிருப்பேன்.

அவர் பக்கத்து ஊரில் இருந்து தான் வருவார். ஆகவே சில நேரங்களில் விடுதி மாணவர்களுக்காக எதேனும் வாங்கி வரச் சொல்லுவோம். அவரும் வாங்கி வருவார். சில சமயங்களில் மொபைல்களுக்கும் ரீசார்ச் செய்து விட சொன்னாலும் செய்துவிடுவார். விடுதியில் நடக்கும் ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டுவருவதற்கும் அவர் உறுதுனையாக இருந்திருக்கிறார். மேலும், சப்பாத்தி உணவுப் பட்டியலில் இருக்கும் அன்றைக்கு எங்களுக்காக தனியாக ஒரு 20 சப்பாத்திகளையாவது எடுத்து வைத்திருப்பார். எல்லோரும் தூங்கிய உடன், நான் சென்று அதனை எடுத்து வருவேன். நானும், புகழும் மற்றும் பக்கத்து அறை நண்பர்களும் சேர்ந்து விடிய விடிய எதேனும் பேசிக் கொண்டிருப்போம். அப்போது சப்பாத்தியும், புகழ் வீட்டு ஊறுகாயும் சேர்த்து, ஒரு பிடி பிடிப்போம். கூடவே பிரட், ஜாம், பிஸ்கட், பழங்கள் என விடிய விடிய வயிற்றிற்குள்ளே தள்ளுவது தான் எங்கள் பிரதான பணியாக இருக்கும். ஆனால் அந்த நாட்களில் நாங்கள் பேசாத தலைப்புகளில்லை. அந்த நாட்கள் மீண்டும் கிடைக்கவா போகிறது? இரவு விழித்திருக்கும் பொழுது அந்த அக்கா எடுத்து வைத்த சப்பாத்திகள் தான் எங்களுக்கு மேலும் பசி எடுக்காமல் இருக்க உதவின. விடுதி நாட்களைப் பற்றி இன்னும் எவ்வளவோ சொல்லலாம்.

கல்லூரி இறுதி நாள், அன்று தான் அந்த அக்காவைக் கடைசியாக சந்தித்தோம். அதன் பிறகு அங்கே சென்ற பொழுது அவர் வேலையை விட்டுச் சென்றுவிட்டதாகச் சென்னார்கள். அத்துடன் அவருடனான உறவு முடிந்துவிட்டது என நினைத்திருந்தேன். ஆனால் புகழின் நிச்சய நாளன்று அவரைப் பார்த்ததும் ஒரு இனம் புரியாத சந்தோஷம். அறைக்கு வந்து நான் கிளம்புவதனைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.

”அந்த அக்கா பேரு…? என்ன டா…? ” என்று அப்போது புகழ் கேட்டான்.

“அட… இவ்வளவு பேசுனோம். பெயரைக் கேட்க மறந்துடனே…” என உள்ளுக்குள் புளுங்கிக் கொண்டேன்.

“நியாபகமில்லை டா”னு சொன்னேன்.

“சரி, நேரமாச்சி வா… பஸ் போயிட போகுதுனு” சொல்லி நடக்கும் தூரத்தில் இருந்த மத்தியப் பேருந்து நிலையத்திற்கு புகழ் என்னைக் கூட்டிச் சென்றான். ஆனால் அரை மணி நேரம் நடந்தோம்.

“நம்மள இன்னும் அந்த அக்கா நியாபகம் வச்சு… நம்ம கிட்ட பேசுறாங்க… எனக்கு முதல்ல அவங்கள அடையாளம் தெரியாம போச்சே… அவங்க வயசுக்கு நம்ம கிட்ட வந்து பேசனும்னு அவசியமேயில்ல… ஆனாலும் வந்து பேசுறாங்க… அந்த அக்கா நல்ல அக்கா” என புகழ் அந்த அக்காவைப் பற்றி பேசிக் கொண்டே நடந்தான்.

நான் பேருந்தில் ஏறி அமர்ந்தவுடன், “சரி… வீட்டுக்குப் போயிட்டு போன் பண்ணு” என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.

“புகழ்” என்று கூப்பிட்டேன்.

சட்டென்று திருப்பியவன், “என்ன டா… அன்பு…” என்று களைப்புடன் கேட்டான்.

”ஒன்னு… சொல்ல மறந்துட்டேன்…” என்று சொல்லிக் கொண்டிருந்த பொழுதே பேருந்து மெல்ல நகரத் துவங்கியிருந்தது.

“சீக்கிரம் சொல்லு டா… பஸ் கிளம்பிடுச்சு… ” என்றவுடன், நான் சென்னேன்…

“அந்த அக்கா பேரு… செல்வி.. ஆமா செல்வி அக்கா…!”

 – வாழ்க பல்லாண்டு