Saturday, April 27, 2024
Home > கேள்விபதில் > என்ன விளையாடுறயா? – கேள்விபதில் – 10

என்ன விளையாடுறயா? – கேள்விபதில் – 10

கேள்வி:செலவில்லாமல் மனிதனால் கொண்டாட முடியுமா?

ஒரு நல்ல செய்தி…

இன்றைய சமூக வலைத்தள காலத்தில் வாழ்வைக் கொண்டாடும் இளைஞர் பட்டாளமும், முதிய இளைஞர்களும் அதிகமாகிக் கொண்டு வருகிறார்கள். எதற்கு எடுத்தாலும் கொண்டாட்டம். அதேசமயம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு நமது சமூதாயம் மன அழுத்தத்தினால் கடுமையாக பாதிக்கப் பட்டிருக்கிறது.  கொண்டாட்டமாக இருக்க வேண்டிய நமது வாழ்க்கை திண்டாட்டமாக இருப்பதற்கும் நாமும் ஒரு காரணமா? என்று ஆராய வேண்டிய கட்டத்தில் நாம் இருக்கிறோம்.

நெருங்கியவர்களின் நல்ல காரியங்களில் கலந்துக் கொள்ளாமல் கூட இருந்து விடலாம் ஆனால் கெட்ட காரியங்களில் நிச்சயமாக கலந்துக் கொள்ள வேண்டும் என்று நமது சமூகம் நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறது. அதுதான் உண்மையும் கூட. ஆனால் நாம் இன்றைக்கு எப்படி மாறி இருக்கிறோம் என்றால், நம்ம சந்தோஷத்தை நாம் கொண்டாடி தீர்க்கிறோம், ஆனால் மற்றவரின் கொண்டாட்டங்களை பெரிதாக எடுத்துக் கொள்ள தவறிவிடுகிறோம். நெருங்கிய சொந்த பந்தம், பள்ளி-கல்லூரி-அலுவலக வட்டம், அண்டை வீட்டார் என நாம் நமது வட்டத்தை சுருக்கிக் கொண்டே வருகிறோம். முகநூலில் 100 லைக்ஸ் விழவில்லை என்றால் பதறுகிறோம்.  ஆனால் முகத்துக்கு நேராக இருக்கும் ஒருவரின் கொண்டாட்டங்களுக்கு நாம் லைக் கொடுக்க மறக்கிறோம்.

மக்கள் சந்தோஷங்களை அதிகம் பகிர்கின்றனரா? அல்லது கஷ்டங்களை அதிகம் பகிர்கின்றனரா? என்று உளவியல் ரீதியாக மேலை நாடுகளில் ஒரு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் மக்கள் சந்தோஷங்களை விட கஷ்டங்களைத் தான் அதிகம் பகிர்ந்துக் கொள்கிறார்கள் என தெரியவந்தது. அந்த முடிவு, பரிசோதனை செய்த ஆசிரியர்களுக்கே மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது.

நாம் கஷ்டப்படும் சூழலில் ஒருவர் வந்து நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று சொன்னால் நமக்கு பல சமயங்களில் எரிச்சலே மிஞ்சுகிறது. மேலும் நாம் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தாலும் பெரும்பாண்மையான நேரங்களில் நமது கஷ்டங்களைத் தான் அவர்களிடம் உளறிக் கொண்டிருக்கிறோம். மனித மனம் பிறரின் கஷ்டங்களைத் தான் இரசித்துக் காதுக் கொடுத்துக் கேட்கிறதோ என சந்தேகமாக இருக்கிறது.

காரணமில்லாமல் ஆடிப் பாடிக் கொண்டாடிக் கொண்டிருந்த நாம் இன்று பல அல்ப காரணங்களைத் தேடி அலைந்து அதற்கு கொண்டாட்டம் என பெயர் சூட்டி மகிழ்கிறோம். ஆனால் உண்மையான கொண்டாட்டம் கும்மாளங்களில் இல்லை, அது அமைதியில் இருக்கிறது. அதனை நாம் பல நேரங்களில் பின்பற்ற மறுக்கிறோம். மது-மாது தான் கொண்டாட்டம் என்று யார் யாரோ தங்களின் பொருளாதார வளர்ச்சிக்காக சொல்லிக் கொடுப்பது கொண்டாட்டமே அல்ல. எந்த ஒரு மனிதனும் நான் காரணமில்லாமல் இன்பமாக இருக்கிறேன் என்று சொன்னால் அந்த மனிதன் ஒன்று ஞானியாக இருக்க வேண்டும் அல்லது பைத்தியமாக இருக்க வேண்டும் என்று நம் சமூகம் நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது.

செலவழிக்காமல் இன்று கொண்டாட்டம் என்று ஏதேனும் இருக்கிறதா? உண்மையில் கொண்டாட்டம் என்பது செலவழிப்பதில்லை. அது சேமிப்பதில் தான் இருக்கிறது. அந்த சேமிப்பு நாம் பிறரின் இன்பங்களைக் கொண்டாடுவதில் தான் அடங்கி இருக்கிறது.

*****

செலவில்லாமல் மனிதனால் கொண்டாட முடியுமா? என்று எனக்குள் வினா எழுந்தது.

அதற்காக ஒரு பரிசோதனை செய்துப் பார்க்கலாம் என தோன்றியது. உடனே என் அலைப்பேசியை எடுத்தேன். வாட்ஸ்ஆப்பை திறந்து ஒரு செய்தியை பதிவு செய்து அதனை என்னிடம் தொடர்பில் இருக்கும் பலருக்கு அனுப்பி வைத்தேன். அந்தச் செய்தி இதோ…

(என்னுடைய செலவு)

“ஹய்யா… ஜாலி…

ஒரு நல்ல செய்தி…

அது என்னானு சொல்ல மாட்டேன்…

ஆனா…

நான் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன்…

ஆதலால்…

என்னுடைய மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்…

சியர்ஸ்…”

அதற்கு வந்த சில பதில்கள் இதோ…

(என்னுடைய  வரவு)

“புதுசா வண்டி எதும் வாங்கி இருக்கியா? இல்ல வண்டி ஏதும் புக் பண்ணி இருக்கியா?”

“என்ன… உனக்கு கல்யாணமா? எப்போ? எங்கே?”

“உன் லவ்வு புட்டுகிச்சா… சீவீட் எடு கொண்டாடு…”

“புது வேலைக் கிடைச்சிருக்கா… என்ன வேலை… சென்னைலயா? பெங்களுருலயா?”

“என்ன ஹச்ஆர்கிட்ட உன் லவ்வ சொல்லிட்டயா?”

“தெரியல… ஒழுங்கா நீயே சொல்லிடு… கடுப்பேத்தாத…”

“நீ என்னைக்கு தான் சொல்லி இருக்க உன்னேட சந்தோஷத்த… இன்னைக்கு செல்ல”

“என்னானு சொல்லாட்டியும் பரவாயில்ல… உன் சந்தோஷம் எனக்கும் சந்தோஷம்”

“என்கிட்ட கூட என்னானு சொல்ல மாட்டியா?”

“என்னையும் என் நட்பையும் மதிச்சா சொல்லிடு… ப்ளிஸ்…”

“வெளி நாட்டுல வேலை ஏதும் கிடைச்சிருக்கா”

“என்னா ப்ரொமோசனா?”

“அது என்னவேன இருக்கட்டும்… எப்போ டீரிட்”

“இந்த தங்கச்சிய மதிச்சா என்னானு சொல்லு”

“அக்கா கிட்ட கூட சொல்ல மாட்டயா?”

“தம்பி பாவம்ல… சஸ்பென்ஸ் வேணாமே…?”

“அண்ணன் கேட்கிறேன்ல சொல்லுடா”

“நீ யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்… இந்த மாமா கிட்ட மட்டும் செல்லிடேன்…”

“என்ன உங்க வீட்டு நாய் குட்டி போட்டு இருக்கா?”

“புதுசா வீடு ஏதும் கட்டி இருக்கியா?”

“வேலைய விட்டுடியா?”

“என்ன புது ஆளு செட் பண்ணிடயா?”

“என்னானு சொல்ல மாட்டல பேசாதா…”

“திரும்பவும் ஆரம்பிச்சிட்டியா… இப்ப என்ன வேணும் உனக்கு..”

“அதுக்கு இப்ப என்ன பண்ணலாம்”

“நானே என் மேனேஜர்ட திட்டு வாங்கி கடுப்பாயி இருக்கேன்… என்னை வேறுப்பேத்தாத”

“என்னானு சொல்லல… உன்னய கொல்ல போறேன் பாரு…”

நான் பதில் வரும் என்று எதிர்பார்த்த பலரிடம் இருந்து பதிலே வரவில்லை. ஆனால் எதிர்பார்க்காத பலரிடம் இருந்து, என்னவா இருந்தாலும் எனக்கும் சந்தோஷம் என பதில் வந்திருந்தது. கொண்டாட பெரிய பெரிய காரணங்கள் எதுவும் தேவையில்லை. கொண்டாட வேண்டும் என்ற ஒரு எண்ணமே போதும். நாம் பிறருக்காக கொண்டாட ஆரம்பித்துவிட்டால் நமது வாழ்க்கையே கொண்டாட்டமானதாக மாறிவிடுகிறது. ஒருவரின் துக்கத்தினை நாம் பங்கு போட முடிவதில்லை அப்படியே முயற்சித்தாலும் அது துக்கத்தினை மேலும் அதிகரிக்கவே செய்கிறது ஆனால் ஒருவரின் இன்பத்தினை எவ்வளவு பங்குப் போட்டாலும் அது மேலும் இன்பத்தையே கொடுக்கிறது. ஆக. இன்பத்தினை அளவில்லாமல் பகிர முடிகிறது. நாம் நமக்காக கொண்டாடுவதை விடவும், நம்மை மற்றவர்கள் கொண்டாடுவது மிக மிக அவசியம். அதற்கு செலவு தேவையில்லை. மனம் மட்டுமே போதும். என்ன  நான் சொல்றது?

– விளையாடுவோமா?