Saturday, April 27, 2024
Home > ஒண்ணுமில்ல > ஒண்ணுமில்ல… பகுதி 13

ஒண்ணுமில்ல… பகுதி 13

பன்னிரெண்டாவது பகுதியின் லிங்க்…

எனது அப்பாவும் அம்மாவும் இப்போது சில நேரங்களில் ஒரு விசயத்திற்காக ஒன்று கூடுகிறார்கள். ஆனால் அது அவர்களது அன்பு மகளுக்காக அல்ல. அவர்கள் ஒன்று கூடுவது எதற்காக என்றால் அது ஒரு சொத்திற்காக. அந்த சொத்து டி.என்.நகர் என்று அழைக்கப்படும் தாதாபாய் நோவ்ரோஜி நகரில் இருக்கிறது.

அக்காலத்தில் தாத்தா பெயரில் வாங்கியது. தாத்தாவின் அப்பா ஊரிலிருந்த மிச்ச சொச்ச சொத்தை விற்றுக் கொஞ்சம் பணம் கொண்டு வந்திருந்தார். தாத்தாவிற்கும் காய்கறி தொழில் நன்றாக போகவே அவரும் கொஞ்சம் பணம் சேர்த்து வைத்திருந்தார். மீதித் பணத் தேவையை அங்கும் இங்குமாக புரட்டி அதில் தான் அந்த நிலம் 1970களில் வாங்கப்பட்டது.

அந்த நிலம் வாங்கிய சில மாதங்களில் தாத்தாவிற்கு திருமணம் ஆனது. அடுத்த சில மாதங்களில் தாத்தாவின் அப்பாவும், அம்மாவும் அடுத்து அடுத்து இறந்து போயினர். அதனால் அவர் வாங்கிய அந்த நிலத்தில் வீடு கட்டலாம் என்ற போட்ட திட்டததை கிடப்பில் போட்டுவிட்டார் என் தாத்தா. 1990களின் ஆரம்ப காலம் வரை பல வருடங்களுக்கு அந்த இடம் அப்படியே தான் இருந்தது. தாத்தா அந்த இடத்தை சுற்றி சுவர் எழுப்பி ஒரு கேட் போட்டு வைத்திருந்தாராம். எப்போதாவது நேரம் கிடைக்கும் போது அவர் மட்டும் போய் அந்த இடத்தைப் பார்த்துவிட்டு வருவார். 4800 சதுர அடியில் செவ்வக வடிவிலான இடம். 120அடிக்கு 40அடி என்ற அளவில் இருந்தது அந்த இடம். பிரதான சாலையில் இருந்து பிரியும் கிளைச் சாலையில் இடது பக்கத்தில் இரண்டாவது பிளாட்டாக அமைந்திருந்தது.

இப்போது அந்த இடத்திலிருந்து நடந்துப்போகும் தூரத்திலேயே மும்பை மெட்ரோ ஸ்டேஷ்னே வந்துவிட்டது. அதனால் அந்த இடம் இப்போது பல கோடி மார்கெட் மதிப்பைப் பெற்றுவிட்டது.

1991ஆம் பொருளாதார சீர் திருத்தத்திற்குப் பிறகு ரியல் எஸ்டேட் அதீத வளர்ச்சியடைந்தது. டி.என்.நகரில் இருக்கும் அந்த இடத்திற்கும் நிறைய கிராக்கி ஏற்பட்டது. ஆனால் தாத்தா அந்த இடத்தை விற்கத் தயாராக இல்லை. மாறாக ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனியுடன் சேர்ந்து அந்த இடத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்போ அல்லது வணிக வளாகமோ கட்டலாம் என்று தான் நினைத்திருந்தார். ஆனால், அவருக்கு நிறைய கம்பெனிகள் ஆபர் கொடுத்ததால், அவர் கொஞ்சம் குழம்பிப்போய் விட்டார். அப்போது அப்பா கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். அதனால் அவரது தலையீடு ஏதும் இல்லாமல் தாத்தா சுயமாகவும், சரியாகவும் ஒரு முடிவெடுத்தார்.

பதினான்கு மாடி கட்டிடம் கட்ட ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டார் என் தாத்தா. இரண்டு மாடிகள் நிலப்பரப்பிற்குக் கீழே வண்டி நிறுத்த, மூன்று மாடிகள் வணிகக்கடைகள். அதனை அப்பா வேலை செய்யும் நிறுவனமே 33 வருட லீசுக்கு எடுத்துக்கொண்டது. நான்காவது மாடி முதல் எட்டாவது மாடி வரை 10 வீடுகள். இதில் தாத்தா ஐந்தாவது மாடி முழுவதுமாக வீட்டிற்காக எடுத்துக்கொண்டார். மீதமிருந்த 9 வீடுகளையும் விற்று, அவரது பங்காக அந்த பில்டருக்குக் கொடுத்துவிடுவதாகவும், ஒன்பதாவது முதல் பதினான்காவது மாடி வரை பில்டரே ஓட்டல் கட்டி 33 வருட லீசுக்கு எடுத்துக்கொள்வது என்றும் ஒப்பந்தம் போடப்பட்டது. மிக வேகமாக வேலை நடந்து அந்தக் கட்டிடம் 1995ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.

அதே வருடத்திலே தான் என் அப்பா, அம்மாவிற்கு திருமணமானது. தாத்தா அந்த சொத்தை தனது மகனுக்கும், மருமகளுக்கும் அவர்களது திருமணத்திற்கான பரிசான இருவரின் பெயரிலும் தானசெட்டில்மெண்ட் செய்து வைத்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவர்களது திருமணம் விவாகரத்தில் முடிய, அவர் தானசெட்டில்மெண்ட் செய்தது மிகப் பெரிய தவறாகிப்போனது. அந்த சொத்தை விற்று வரும் பணத்தில் இருவரும் சரிசமமாக பங்கிட்டுக்கொள்வது என்று அதற்கு மட்டும் கூட்டணி போட்டுவிட்டனர். விலையும் பேசிவிட்டனர். தங்க முட்டையிடம் வாத்தை ஆறுக்கப் பார்த்தனர்.

ஆனால், தாத்தாவும், அந்த பில்டரும் அந்த சொத்தை விற்கவிடவில்லை. அவர் தன் சொந்த சம்பாத்தியத்தில் வாங்கியது என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, அதில் வெற்றியும் கண்டுவிட்டார். தானசெட்டில்மெண்ட் பத்திரத்தில் அனுபவிக்க மட்டுமே அனுமதியளித்திருந்ததால் எளிதாக அந்த சொத்தை என் தாத்தா மீட்டுவிட்டார். என் அப்பாவும் அம்மாவும் உச்ச நீதிமன்றம் வரை சென்றும் அந்த சொத்தை என் தாத்தாவிடமிருந்து பறிக்க முடியவில்லை.

சில வருடங்களுக்கும் முன், அதனை என் பெயரில் உயில் எழுதி வைத்துவிட்டார். அந்த உயிலை எப்படியாவது உடைக்கவேண்டியே என் அப்பாவும் அம்மாவும் இப்போது தீவிரமாக முயற்சி செய்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. அதன் முடிவும் தாத்தாவிற்குச் சாதகமாவே வரும்.

ஒருவேளை எதிராக வந்தாலும், அவர் என் மீது அந்த சொத்தை தானசெட்டில்மெண்ட் செய்துவிட்டால் அந்த தீர்ப்பு எங்களை எந்தவிதத்திலும் பாதிக்காது என்று எங்களின் வக்கீல் சொல்லியிருக்கிறார். என் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் நான் வேண்டாம். ஆனால் தாத்தாவின் சொத்து மட்டும் வேண்டும் என்று தெரிந்திலிருது நான் அவர்களை மிகவும் வெறுக்க ஆரம்பித்துவிட்டேன்.

இப்போது நான் இருக்கும் விடுதியிலிருந்து அந்த டி.என்.நகர் ஐந்தாவது மாடி வீட்டிற்கு தான் நான் குடியேறப்போகிறேன். தாத்தா என்னை அங்கே தனியே இருந்துப் பழகிக்கொள்ள சொல்லியிருக்கிறார். பெரிய வீடு என்பதனால், வீட்டின் ஒரு பகுதியை, கூட நிறுவனத்தில் வேலைப் பார்க்கும் தோழிகள் யாருக்காவது உள் வாடகைக்கு விட்டுவிடும்படி சொல்லியிருக்கிறார். எப்படியும் என் சம்பளம் போக தாத்தா மாதம் ஐம்பதாயிரத்தை என் கணக்கில் கட்டிவிடுவார். நானும் ஐடி நிறுவனத்தில் கை நிறைய சம்பாதிக்கிறேன்.

பாட்டி கேன்சரில் இறந்ததிலிருந்து அவர் வருமானத்தில் பெரும் பகுதியை கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காகக் கொடுத்து வருகிறார்.

தாத்தாவின் அப்பா ஏற்கனவே மலாட் பகுதியில் சிறிய வீடு ஒன்றை வாங்கியிருந்தார். அந்த வீட்டிற்குத் தான் அவர் பாட்டியுடன் நான் இரண்டு வயது இருக்கும் போது என்னைக் கூட்டிக்கொண்டு வந்தார். இப்போதும் தாத்தா அந்த வீட்டில் தான் இருக்கிறார். அவருக்கு அந்த வீட்டை விட்டு வர மனமில்லை. கடைசி காலம் வரை அங்கேயே இருந்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டார்.

நெடுநேரமாக என் கதையை நான் நினைத்துக்கொண்டிந்ததில் இரயிலைப் பிடிக்க நேரமாகிவிட்டது, அதனால், கோரேகான் புறநகர் இரயில் நிலையத்தை நோக்கி விரைந்தேன்.

நான் உள்ளே சென்றதும் ஒரு ரயில் பிளாட்பாரத்திலிருந்து கிளம்பியது.

அப்போது நான்…

பதினான்காவது பகுதியின் லிங்க்…

– மீண்டும் சந்திப்போம் நாளை இரவு 08.00 மணிக்கு…

எழுத்து – பட்டிக்காடு