Wednesday, April 24, 2024
Home > பெண் > கண்ணம்மா… போயிட்டியே என்னிடம் சொல்லாமல்…

கண்ணம்மா… போயிட்டியே என்னிடம் சொல்லாமல்…

நெடுநாட்களாக மனதை வருடிக்கொண்டிருந்த ஒரு அநீதியைப் பற்றியே இக்கட்டுரை. இந்த அநீதி நிகழும் பொழுது, என்னால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. அதனை நினைத்து நினைத்து, என் தலையனையில், பல நாட்கள் கண்ணீர் சிந்தியிருக்கிறேன். என்னை மிகவும் பாதித்த அந்த சம்பவம் இதோ,

ஒரு நாள் என் பெரியப்பா, மிகவும் பதற்றமாக என் தந்தையைக் காண வந்திருந்தார். அவர் வீட்டில் இல்லாததால், என்னிடம் சிறிது நேரம் நாட்டு நடப்புகளைப் பேசிவிட்டுச் சென்றார்.

மாலையில் வந்த என் தந்தையும் மிகவும் பதற்றமாக இருந்தார். பெரியப்பாவிற்கும், அவரது சம்பந்திக்கும் ஏதோ வாக்குவாதம் என்றும், அதனால் பெரியப்பா, அக்காவை தமது வீட்டிற்கு அழைத்துக் கொண்டுவந்துவிட்டார் என்றும், வரும் வழியில் பெரியப்பாவை சந்தித்துவிட்டு வந்த பொழுது அவர் இதனைச் சொன்னதாக அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

ஏதோ பிரச்சனை என்பது மட்டும் எனக்குப் புரிந்தது. அம்மா, பாட்டி என யாரிடம் கேட்டாலும், பிரச்சனை சரியாகிவிட்டது. இப்போது ஒன்றுமில்லை என்றார்கள்.

ஒரு வாரம் கழித்து, மாமா வந்து சில நாட்கள் தங்கி அக்காவையும், பெரியப்பாவையும் சமாதனம் செய்தார். அக்கா-மாமாவிற்கு மோனிகா என்று இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். அக்கா மீண்டும் கருவுற்று இருந்தாள்.

சில மருத்துவப் பரிசோதனைகள் செய்ய வேண்டியிருப்பதாக கூறிவிட்டு, மோனிகாவை பெரியப்பா வீட்டிலேயே விட்டுவிட்டு அக்காவை மட்டும் மாமா மருத்துவமனையிற்கு அழைத்துச் சொன்றார்.

மாமா, அக்காவை அழைத்துச் சொன்ற மறுநாள் மாலை மோனிக்காவை காண நான் பெரியப்பா வீட்டிற்குச் சென்றிருந்தேன்.

நான் வந்திருந்ததைக் கூட கவனிக்காமல், பெரியப்பா ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் ஹாலில் இருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார். நான் மோனிகாவைத் தேடினேன். என் செல்லம்மா, மோனிகா, தூங்கிக் கொண்டிருந்தாள். பெரியம்மா, வீட்டிற்கு பின் புறம் இருந்த மாட்டுக் கொட்டகை அருகே இருக்கும் மரத்தடியில் அமர்ந்திருந்தார். அவரது அருகில் சென்று அமர்ந்தேன். அவரது கண்களில் கண்ணீர் வழிந்தது. ஏன் என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை. பெரியப்பா ஏதேனும் திட்டியிருப்பார் என்றே நினைத்திருந்தேன்.

பெரியம்மாவும் எதுவும் சொல்லவில்லை. நானும் எதுவும் கேட்கவில்லை. இருள் சூழ்ந்தது. அமைதி எங்களை ஆட்கொண்டது.

சில நிமிடங்களுக்குப்பின் அவராகவே சொன்னார், “கண்ணு, மாமா அக்காவ வந்து கூட்டிக்கிட்டு, வயித்துல இருக்கிற கருவ கலைக்க போயிருக்காங்க. அவ வவுத்துல இருக்கிறது பொட்ட புள்ளையாம்” என்று சொல்லிவிட்டு ஓவென அழத்துவங்கினார்.

ஒரு நிமிடம் எனக்கு தூக்கிவாரிப்போட்டது. மேலும் தொடர்ந்தார்,

ஏற்கனவே முத்த மவனுக்கும் இரண்டும் பொட்டச்சியா போச்சி, இரண்டாவது மவனுக்கு ஒரு பொட்ட புள்ள இருக்கு, மூத்த மருமவளுக்கு அப்ரேஷன் பண்ணியாச்சி, இனி கொழந்த இல்ல, சின்னவளுக்கு ஸ்கேன் எடுத்ததுல இதுவும் பொட்ட புள்ளயா போச்சு, இப்ப ஆசைக்கு மூனு இருக்கு, சொத்துக்கு ஓன்னாச்சி வேனும், அதனால, களைச்சுடலம்னு, சம்பந்தி ,பெரியப்பாவ கூப்பிட்டு சொல்லிட்டாங்க, அவரு கோவத்துல அக்காவ கூட்டியாந்துட்டாரு, இப்ப மருமவன் வந்து அக்காவ வவுத்துல இருக்கிற சிசுவ கலைக்க கூட்டிபோயிருக்காரு. எங்களால, ஒன்னும் செய்ய முடியல. அவளுக்கு கலைக்க விருப்பமேயில்ல, ஆன அந்த வூட்டு ஆளுங்க அவள கூட்டிட்டி போயிட்டாங்க” என்று மனம் வெதும்பி அழுதுக்கொண்டேயிருந்தார்.

எனக்கு தலையே வெடித்துப்போல இருந்தது.

நடந்ததைக் கேட்டு, அக்காவின் பூகுந்தவீட்டாரின் மேல் கோபம் கோபமாக வந்தது. அக்கா எப்படி கருகலைப்பிற்கு ஒப்புக்கொள்ளலாம் என்ற கேள்வி என் மனதை உறுத்திக்கொண்டே இருந்தது.

சட்ட ரீதியாக, ஸ்கேனில் தெரிவது, ஆணா, பெண்ணா என்பதனைச் சொல்லக் கூடாது. அக்காவின் புகுந்தவீட்டார், ஒரு பெண் சிசுவைக் கொலை செய்துவிட்டார்கள் என்பதனை என்னால், இந்த நிமிடம் வரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அந்த நிகழ்விற்குப்பிறகு அக்கா விடாபடியாக மற்றொரு குழந்தைப் பெற்றுக் கொள்ளவேயில்லை. வருடங்கள் ஓடிவிட்டாலும், அக்கா இன்னும் மாமாவின் இந்த காரியத்தை மட்டும் மன்னிக்கவேயில்லை.

சட்டங்கள் கடுமையாக இருந்தாலும், அது சரியாக செயல்படுத்தப் படாததனால், இங்கு சட்டத்திற்கு புறம்பாக பல கருக்கலைப்புகள் நடந்துக் கொண்டுதான் இருக்கின்றன. மக்களின் மனங்களில் மாற்றம் வராமல், சட்டத்தினால் ஒன்றும் செய்ய முடியாது. ஆண் வாரிசு மோகம், இன்னும் இருந்துக்கொண்டு தான் இருக்கிறது. இதுவே இன்றைய கசப்பான உண்மை.

எல்லாம் சரியாக இருந்திருந்தால்,

என் ஆசை செல்லம்மாவிற்கு துணையாக, ஒரு கண்ணம்மா வந்திருப்பாளே…

கண்ணம்மா… போயிட்டியே என்னிடம் சொல்லாமல்…