Friday, March 29, 2024
Home > கேள்விபதில் > சபரிமலையும் பெண்களும்

சபரிமலையும் பெண்களும்

“மாதவிடாய் காலங்களில் எங்களது நாப்கினை பயன்படுத்தினால்,

நீளம் தாண்டலாம், உயரம் தாண்டலாம்,

நேடுந்தூரம் ஓடலாம், ஆடிப்பாடி விளையாடலாம்

என்று விளம்பரப்படுத்தும் நிறுவனங்கள்….

சுத்தமான எங்கள் நாப்கினை பயன்படுத்தினால்,

கோவில்களில் விளக்கேற்றலாம்…

திருமணங்களுக்குச் செல்லலாம்…

பிற மங்கல காரியங்களில் ஈடுபடலாம்…

பிறர் வீட்டிற்கு சுக, துக்கங்களுக்குச் செல்லலாம்…

என்று விளம்பரம் தருவார்களா?”

என்று ஒரு பெண் கவிஞர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வினா எழுப்பியிருந்தார். ஆழமான கேள்வி, இந்தக்கேள்விக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல கருத்துக்களை நாம் சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது.

அதில் ஒன்று இதோ, ”ஒரு கிறிஸ்தவ நாட்டிலோ, ஒரு முஸ்லிம் நாட்டிலோ ஒரு பெண்ணால், இப்படி கேள்வி கேட்க முடியுமா? எல்லாம் இந்த கிறிஸ்தவ மிசினரிகளும், முஸ்லிம் முல்லாகளும் கிளப்பிவிடும் கேள்விகள் தான், அதேசமயம், ஒரு இந்துப் பெண்ணாவது இப்படி கேள்வி கேட்பார்களா?” என்று ஒரு இந்து வெறியர் பதிவிட்டிருந்தார்.

ஒரு தீப்பொறி காட்டுத் தீயானது போல், இந்த வினா எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது. ஏன்? ஏன்? ஏன்? என்று விரிந்த துணைக்கேள்விகளை என்னால் கணக்கு வைக்க முடியவில்லை. இரவெல்லாம் தூக்கமில்லாமல், இந்த கேள்விகளுக்கு பதில் தேடி சிந்தித்தேன், பல புத்தகங்களை புரட்டினேன், இணையம் முழுவதிலும் உலாவினேன்.

எங்கு தேடியும், என் கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை. ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது. ”மாதவிடாய் காலங்களில் பெண்கள் தங்களது உடல் வலியைக் கூட தாங்கிவிட முடியும், ஆனால், இந்தச் சமூகம் வைக்கும் பல முரண்பாடான கட்டுப்பாடுகளால் ஏற்படும் மன வலியை தாங்கிவிட முடியாது” என்று.

சிந்தித்துக் கொண்டே, மேட்டூர் அணையில் நீர்மட்டம் என்னவென்று பார்க்க, தொலைக்காட்சியை பார்க்க முற்பட்ட பொழுது, எல்லா தொலைக்காட்சிகளிலும், சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி, உச்சநீதிமன்றம் உத்தரவு… என்று தலைப்புச்செய்திகள் வாசித்தன.

கவிஞரின் கேள்வி நினைவிற்கு வந்தது.

முதலில் சபரிமலையில் அனுமதி… பின்பு… எல்லா நாட்களிலும், அது மாதவிடாய் காலமானாலும், எல்லா கோவிலிலும் அனுமதி என்றானால், நாப்கின் தயாரிப்பு நிறுவனமும், எங்களின் சுத்தமான நாப்கின் அணிந்தால், விளையாட மட்டுமல்ல, கோவிலுக்கும் செல்லலாம் என்று விளம்பரப்படுத்துவார்கள் என கனவு கண்டேன். ஆனால், கனவு சில நிமிடங்களில் சிதைந்தது.

ஆங்கில செய்தி தொலைக்காட்சிகளில் என்ன சொல்கிறார்கள் என்று பார்த்த பொழுது தான் உண்மை புரிந்தது, உச்ச நீதிமன்றம், உத்தரவு எதுவும் போடவில்லையென்று. உச்ச நீதிமன்றம்,”பெண்ணுக்கும், ஆணைப்போலவே கடவுளை வழிபட சம உரிமையுள்ளது” என்று தன் கருத்தை மட்டுமே முன்வைத்தது. ஆங்கிலத்தில் சொல்வதென்றால், “Women`s Right to Pray is equal to that of men, Observed Supreme Court bench headed by Chief Justice Deepak Mishra.”

800 வருடமாக பெண்களுக்கு (12-50 வயது பெண்களுக்கு) இருந்துவரும் தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இந்தக் கருத்து மிக முக்கியத்துவம் பெறுகிறது. ஏற்கனவே, நாகரிகம் வளர வளர நாம் அதற்கு மாறுவதுப்போல, சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டால், அதனை நிறைவேற்றுவோம் என்று கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கோவில் நிர்வாகமும் உச்ச நீதிமன்றம் ஆனையிட்டால், அடிபனிவோம் என்று உறுதி கொடுத்துள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எப்படி இருந்தாலும், அது சமூகத்தில் மாபெரும் ஒரு விவாதத்தை எழுப்பும். ஆக, ஆண் பெண் சமத்துவ கருத்தாக்கத்திற்கு, இந்த வழக்கின் தீர்ப்பு வழிவகுக்கும்.

கவிஞரின் கேள்விக்கும், எனது கேள்விகளுக்கும் அப்போது விடை கிடைக்கலாம்.

அந்த காலத்தில், மனிதன் சுத்தமில்லாமல் இருந்திருக்கலாம், உடையில்லாமல் இருந்திருக்கலாம், அதனால், மாதவிடாய் காலங்களில் இரத்தம் வடிவதும், ஓழுகுவதும் கூச்சமாகவும், ஏன் அருவருப்பாகக் கூட இருந்திருக்கலாம், கோவில், மங்கள நிகழ்வுகள் போன்ற பொது இடங்களில் பெண்கள் அவர்களாகவே வரத் தயங்கியிருக்கலாம் அல்லது அறிவுறுத்தப்பட்டிருக்கலாம். ஆனால், தனி மனித ஓழுக்கமும், நாகரீக வளர்ச்சியும், நாப்கின், மென்ஸுரல் கேப்ஸ், டாம்டன்ஸ் போன்ற என்னற்ற வசதிகளை நம் சமகால பெண்களுக்கு வழங்கியிருக்கிறது. அதனால், பெண்கள் எல்லா காலங்களிலும், கோவில்களுக்குச் செல்லலாம், ஏன் சபரிமலைக்குக்கூட அவர்கள் சுதந்திரமாக செல்லலாம்.

அந்த குதர்க்க கேள்விகாரனுக்கு என் பதில் என்னவென்றால், ”எந்த தேவாலயமும், எந்த மசுதியும் மாதவிடாய் காலங்களில் பெண்கள் இங்கே வாரக்கூடாது என்று நடைமுறையை வைத்திருக்கவில்லை. புரிந்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள் மூடர்களே”. இங்கே நான், மதத்தை எதிர்க்கவில்லை, என் சக பெண்களுக்கான உரிமையை நிலைநாட்ட விழைகிறேன்.

இன்றைக்கு இது சாத்தியமாகவிட்டாலும், இன்னும் ஓரிரு தசாப்தங்களில், இந்த மாற்றங்கள் நிச்சயம் நடந்தே தீரும், என்பதே என் இறுதிக்கருத்து.

– நடக்கத்தான் போகிறது.