Monday, September 27, 2021
Home > சினிமா பாதிப்பு > அருவியின் சாரல்…

அருவியின் சாரல்…

அருவியின் சாரல்…

2017ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்படங்கள் எவை? என்று பட்டியலிட்டால் நிச்சயம் அருவி திரைப்படமும் அதில் இடம்பெறும். படத்தின் கரு, அருவியாக நடித்த அதிதி பாலன், திரைக்கதை, ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மனிதம் அடிப்பட்டு போவது பற்றிய காட்சிகள், குழந்தைப் பருவத்தின் அழகியலை காட்டிய விதம், இயக்கம், இசை, ஒளிப்பதிவு என பாராட்ட நிறைய அம்சங்கள் இருக்கின்றன. அருவி திரைப்படத்தைப் பற்றி ஏராளமான விமர்சனங்களும், பாராட்டுக்களும் வந்துவிட்டது. ஆகவே, படத்தில் என்னை கவர்ந்த காட்சியை மட்டும் இங்கே பதிவு செய்கிறேன்.

திரைப்படத்தில் வரும், ”சொல்வதெல்லாம் சத்தியம்” என்ற நிகழ்ச்சியில், கதாநாயகி அருவியை பாலியல் வேட்டையாடிதாக மூவர் மீது குற்றம் சாட்டப்பட்டு, அவர்களின் கருத்தைக் கேட்கவும், விசாரணை செய்து, பாதிக்கப்பட்ட அருவிக்கு நீதி(!) வழங்கவும், அந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருப்பார்கள்.

தந்தையின் இடத்தில் இருக்கக் கூடிய தோழியின் தந்தை, ஆன்மீக ஆறுதல் தேடி சென்ற அருவியை  வசியத்தால் வறட்சியாக்கிய சாமியார், வேலை செய்யும் இடத்தில் ஒரு அவசரத்திற்காக முதலாளியிடம் பணம் கேட்க, அதையே காரணமாக்கிய காமூக முதலாளி,  என மூன்றுபேர் குற்றம் சாட்டப்பட்டிருப்பர். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும், தொகுப்பாளர் வேடத்தில் மலையாள நடிகை லட்சுமி கோபாலசாமி நடித்திருந்தார்.

”மூன்றுமுறை கற்பிழந்தவள்” என்பதனை மையாக வைத்து, டிஆர்பி எகிறும் வகையில் பரபரப்பான ஒரு அத்தியாயத்தை உருவாக்க திட்டமிடுகிறார் இயக்குனர். நிகழ்ச்சியை எப்படி கொண்டுசெல்ல வேண்டும், எப்போது அருவியை பேசவிட வேண்டும், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் என்ன என்ன கேள்விகள் கேட்க வேண்டும் என இயக்குனர்  தொகுப்பாளருக்கு விளக்கமளிப்பார். அருவியின் நோக்கமோ தன்னை பாலியல் வேட்டையாடிய அந்த மூன்று பேரும் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது. இப்படிப்பட்ட கலவையான நிலையில் நிகழ்ச்சி துவங்கும்.

குற்றம் சாட்டப்பட்ட தோழியின் தந்தை, சாமியார், முதலாளி என மூன்று பேரும் குற்றத்தை மறுக்கின்றனர். தெய்வங்களை துணைக்கு அழைத்துக் கொண்டு நான் குற்றமற்றவன் என வாதடுகிறார் அந்த சாமியார். அழுதே, தான் எந்த தவறும் செய்யவில்லை என நம்பவைக்க முயற்சிக்கிறார், தோழியின் தந்தை. குரலை உயர்த்தி, தனது அரசியல் அதிகார பலத்தை தம்பட்டமடித்து, ஆண் என்ற ஆணவத்தில், தவறே நடக்கவில்லை என்கிறார் அந்த முதலாளி. இதனை கேட்ட தொகுப்பாளர், அந்த மூவரையும், வார்த்தைகளால் வசைபாடி, முன்முடிவோடு அவரே வழக்காடி, அவரே நீதிபதியாகி, அவர்களை குற்றவாளி என அறிவிக்கிறார்.

அதன் பிறகு தான், அருவியின் வாதத்தை தொகுப்பாளர் கேட்பார். குற்றம்சாட்டப்பட்ட மூவரும், தாங்கள் செய்த குற்றத்தினை ஏற்றுக் கொண்டு தன்னிடம் மன்னிப்பு கோரினால் போதும், நான் அவர்களை மன்னிக்க தயாராக இருப்பதாக சொல்வாள் அருவி. குற்றம்சாட்டப்பட்ட மூவரும், தாங்கள் குற்றமே செய்யவில்லை என கூச்சலிடுவர். நிகழ்ச்சியின் இயக்குனரோ இப்ப என்ன செய்வது என குழப்பத்திலிருப்பார். தொகுப்பாளரோ, அருவியின் வாதம் தவறானது என கத்திக் கொண்டிருப்பார். திரையரங்கின் நுனியில், திரையில் நடக்கும் எதுவும் புரியாமல் எல்லோரும் அமைதியாக இருந்தனர். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதனை அறிய திரையறங்கே ஆவலுடன் காத்திருந்தது.

அருவி அப்போது உணர்ச்சிமிக்க குரலில், நான் ஹச்ஐவியால் பாதிக்கப்பட்ட எய்ட்ஸ் நோயாளி என்பாள். அடுத்த விநாடியே, குற்றம் சாட்டப்பட்ட மூவரின் முகத்திலும் தாங்களும் பாதிக்கப்பட்டிருப்பமோ என்ற பதற்றம் தெரியும். அந்த நொடியே குற்றம் சாட்டப்பட்டவர்கள், குற்றவாளிகள் என நிரூபணமாகும். இந்த இடத்தில் அருவியை ”அடுத்த சண்டே பீச் ஹவுஸிற்கு வா” என்று சொன்ன அந்த நிகழ்ச்சியின் இயக்குனரும் குற்றவாளியாகிறார். திரையரங்கில் இருக்கும் பெரும்பாலானவர்களுக்கு அப்போது தான் படத்தின் கதை புரியத் துவங்குகிறது. பிறகு அதகளம் தான்.

இதனை இப்பக்கத்தில் விவரிக்க ஒரு காரணமிருக்கிறது. எப்போதும் பெண் உடல் மீதான ஆதிக்கத்தை நிலைநாட்டவே இந்த ஆண் சமூகம் நினைக்கின்றது. ஓடும் பேருந்தில் பலியான நிர்பயா என்னும் ஜோதிசிங், சிறுசேரியில் உமா மகேஸ்வரி, சென்னையில் சுவாதி, சில நாட்களுக்கு முன் தெலுங்கானாவில் சந்தியா ராணி, கணக்கற்ற பாலியல் வன்கொடுமைகள், பாலியல் தூண்டுதல்கள், சீண்டல்கள், அநாகரிக செய்கைகள், உரசல்கள், இரட்டை அர்த்த வார்த்தைகள், வேறு நோக்கங்களோடு தொடுதல் என ஆண் சமூகம் பெண்ணின் உடல் மீதான ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொள்ள பார்க்கிறது. இதனை பாலியல் வறட்சி என்று சில அறிஞர்கள் சொல்கிறார்கள், ஆனால், அவர்களின் வீட்டில் இது போல நடந்தால், அப்போதும் அதே சொல்வார்களா?

இங்கே பதிவு செய்யப்படாத நிலையிலே பெரும்பாலான நிகழ்வுகள் இருக்கின்றன. கௌரவம் தன் இங்கே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. இது காதல் துவங்கி காமம் வரை நீள்கிறது. காட்சி ஊடகங்களும், பத்திரிக்கை ஊடகங்களும் ஒரு சில நிகழ்வுகளை தட்டிக்கேட்க முயல்கின்றன. ஆனால், அவை பெரும்பாலும் பக்கங்களை நிறப்புவதோடு முடிந்துவிடுகின்றன. அப்படியான நிகழ்வுகளில் பெரும்பாலும், பாதிக்கப்பட்டவர்களே மீண்டும் மீண்டும்  பாதிப்புக்குள்ளாகின்றனர். உலகம் முழுவதும் இது போன்ற அத்துமீறல்கள் இருக்கின்றன, ஆனால் அங்கே அத்துமீறியவன் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் தண்டிக்கப்படுகிறான், தூக்கியேறியப்படுகிறான். இங்கே மட்டும் தான், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பமே சின்னாபின்னமாகிறது. இது போன்ற சரிவுகளில் இருந்து மீண்ட குடும்பங்களைப் பார்ப்பது மிக அரிது.

முதலில் ஆண்களும், பெண்களும் தங்கள் உடலின் மீதான அதிகாரம் மட்டும் தான் தங்களிடம்  உள்ளது என்பதனை உணர வேண்டும். எதிர்பாலினத்தவரை நெருங்க வேண்டுமானாலும் அனுமதி பெற வேண்டும் என்பதனை சிறு வயது முதலே போதிக்க வேண்டும். குறிப்பாக பெண்கள், காதலனாக, கணவனாக, கணவனாகப் போறவனாக என யாராக இருந்தாலும், ஆண்களை அத்துமீற விடக்கூடாது. காதல் முதல் காமம் வரை இருவரது சம்மதம் வேண்டும் என்பதனை எல்லோரும் உணர வேண்டும். அதுவே குற்றங்களை குறைக்கும். ஆண்மை என்பது பிடிக்காத பெண்ணிடம் தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டி துன்புறுத்துவதில்லில்லை, மாறாக, பெண்ணை மதித்து, பெண்மையை உணர்ந்து, காத்திருப்பதில் உள்ளது தான் ஆண்மை.

இங்கே, மத்தியிலும், மாநிலத்திலும் அமர்ந்திருக்கும் ஆட்சியருக்கு, ஆட்சி நிலைக்கவும், மீண்டும் ஆட்சிக்கு வரவும், மதமும், சாதியமும் தேவைப்படுகிறது. இவர்கள் எதாவது செய்வார்கள் என்கின்ற நம்பிக்கை யாருக்குமேயில்லை. மேலும், அவர்களுக்கு ஆணாதிக்க சமூதாயம் தேவைப்படுகிறது. காந்திகள் போய், மோடிகள் வந்தால் மாயாஜாலம் நிகழும் என்றார்கள், ஆனால், வலிகளே மிஞ்சுகின்றன. இதிலிருந்து தப்பிக்க வழிதான் யாருக்கும் தெரியவில்லை.

இப்படியான சமூக, பொருளாதார, ஆணதிக்க சூழலில் ஒரு பெண்ணை அதுவும் சமூகம் ஒதுக்கி வைத்திருக்கும் பெண்ணை கதாபாத்திரமாகக் கொண்டு வந்திருக்கும் அருவி திரைப்படத்தினை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அநீதியை எதிர்க்கொள்ளும் எல்லா பெண்களுக்கு இத்திரைப்படம் புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. எல்லா திரையரங்கிலும் பள்ளி, கல்லூரி, குடும்பப் பெண்களைக் காண முடிகிறது. இதேபோல எல்லா பெண்களும் தங்களுக்கு எதிராக நடக்கும் அநீதிக்கு எதிர்த்து கிளர்ந்தெழும் நாள் வெகு தொலைவில்லில்லை. ஆகவே, அருவிக்கு மீண்டும் எனது மனமார்ந்த நன்றி…

– அருவி – வலியின் சாரலில் நினைய வைக்கிறாள்

Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Preethi
Preethi
3 years ago

அருவி – வலியின் சாரலில் நினைய வைக்கிறாள் அழகு… அருமையான பதிவு….

1
0
Would love your thoughts, please comment.x
()
x