Saturday, October 1, 2022
Home > சிறுகதை > இன்று அவளுக்குப் பிறந்தநாள்…

இன்று அவளுக்குப் பிறந்தநாள்…

”நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் அப்டினா என்ன மாமா? கெட்ட தொடுதல் அப்டினா கற்பழிக்கிறதா மாமா?” என்று என் அக்கா மகள் என்னிடம் கேட்டாள்.

என் அக்கா மகள், தேவிகாவின் மூன்றாவது பிறந்தநாள் விழாவிற்குக்காக நெருங்கிய நலம் விரும்பிகளை மாமா அழைத்திருந்தார். அப்போது பலர் வருவார்கள் என்பதால், என் அக்கா அவளுக்கு குட் டச், பேட் டச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவர்களுக்கு அருகிலேயே நான் தோரணம் கட்டிக்கொண்டிருந்தேன். விருந்தினர் வருவதற்குள் அக்கா அவளுக்குச் சோறு ஊட்டிவிடப் போராட்டிக் கொண்டிருந்தாள். அக்கா சொன்னதை கேட்டபடியே தலையாட்டிக் கொண்டே அங்கிருந்து ஓட முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

தோரணம் கட்டி முடித்து, வரும் விருந்தினர்களுக்கான விருந்து எற்பாடுகளை மேற்பார்வை பார்த்து பின், கேக், சாக்லேட் முதலியவை சரியாக இருக்கிறதா உறுதி செய்துக்கொண்டு, களைப்பாக சோஃபாவில் அமர்ந்தேன். அக்காவும், அவளும் அடிக்கின்ற லூட்டிகளை தூர இருந்து நான் ரசித்துக் கொண்டிருந்தேன்.

என் அக்கா மகள், வெள்ளை நிற கவுனில் குட்டி தேவதை மாதிரி அங்கும் இங்கும் துள்ளிக் கொண்டிருந்தாள்.

சட்டென்று, அவள் நேராக ஓடி வந்து என் மடியில் அமர்ந்துக் கொண்டாள்.

“அப்பா. வந்துட்டியா. இந்தா. நீ இவளுக்கு சோறு ஊட்டு, நான் போயி ரெடி ஆகிட்டு வந்துடரேன்” என்று தட்டை என் கையில் திணித்துவிட்டு என் அக்கா கிளம்பிவிட்டாள்.

நான் அவளுக்குச் சோறு ஊட்ட முயற்சித்தபொழுது தான் அந்தக் கேள்விக் கேட்டாள்.

”நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் அப்டினா என்ன மாமா. கெட்ட தொடுதல் அப்டினா கற்பழிக்கிறதா மாமா” என்று என் அக்கா மகள் என்னிடம் கேட்டாள்.

நான் அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று யோசிப்பதற்குள், அவளே தொடர்ந்தாள், “முந்தா நாள் டிவில காமிச்சாங்க மாமா. சென்னைல யாரோ ஒரு அக்காவ, 17 பேரு கற்பழிச்சிடாங்களாம் மாமா. அடிதடிலாம் நடந்துச்சாம் மாமா” என்றாள் மழலை மொழியில்.

“அம்மாகிட்ட கேட்டேன். குட் டச், பேட் டச், என்னானு, அந்த அக்காவுக்கு சொல்லிக் கொடுக்கல, அதனால அப்பிடி ஆயிடுச்சுனு அம்மா சொல்லுச்சி” என்றாள்.

”சொல்லு மாமா” என்று சினுங்கினாள்.

அதெல்லாம் ஒன்னுமில்லடா செல்லம் என்று அவள் கேட்ட கேள்விக்கு, அவள் திருப்திப்படும் பதில் சொல்லி சமாளிப்பதற்குள் எனக்கு போதும் போதும் என்றாகிவிட்டது. பேசிக் கொண்டே அவளுக்கு சோறு ஊட்டி முடித்துவிட்டேன்.

”நீ போயி, அவங்க எல்லாம் வர்றதுக்குள்ள ரெடி ஆவுடா” என் அக்கா வந்து அவளை தூக்கிக் கொண்டாள்.

நலம் விரும்பிகளும், வருந்தினர்களும் பரிசுப்பொருட்களுடன் வர ஆரம்பித்திருந்தனர்.

அவள் கேட்ட கேள்வி என் மனதை துறுத்திக் கொண்டே இருந்தது.

என்னால் அதற்கு மேல் எந்த நிகழ்வுகளிலும் முழுமனதாக கலந்துக் கொள்ள முடியவில்லை. நான் மொட்டை மாடிக்குச் சென்று, மேலே இருந்தே கீழே நடந்துக் கொண்டிருந்தவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என் சிந்தனையெல்லாம் அவளின் கேள்வியைச் சுற்றியே இருந்தது.

அது இந்தச் சமூகத்திடம் அவள் கேட்கும் கேள்வி. ஏன் எல்லா பெண்களும் கேட்டும் கேள்வி.

ஒரு பெண்ணின் பாதுகாப்பைவிட ஒரு பசு தான் முக்கியம் என மார்தட்டிக் கொண்டிருக்கும் இந்த நல்ல(!) ஆட்சியில், பெண் சமூகத்தின் முன் இன்று ஆண் சமூகம் தலைக்குனித்து நிற்க வேண்டும்.

எந்த வயது பெண்ணாய் இருந்தாலும்…

எந்த உடை உடுத்தியிருந்தாலும்…

எந்த ஊரில் இருந்தாலும்…

எந்த வேளையில் இருந்தாலும்…

எந்த உயரத்தில் இருந்தாலும்…

ஒரு பெண் பாலியல் ரீதியாக தீண்டப்படுகிறாள்…

இங்கு பாதிக்கப்படுவதும் பெண்ணே…

சமூகத்தின் முன் குற்றம் சுமப்பவளும் பெண்ணே…

கடந்த சில வருடங்களாக நடந்த மிக முக்கிய சம்பவங்களை அலசிப்பார்த்தால், பிரச்சனையின் வீரியம் புரியும். இங்கு சாதியத் தீண்டாமைக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை விட பெண் தீண்டாமையை வலியுறுத்தியே அதிமுக்கியத்துவம் கொடுக்க வேண்டியுள்ளது. சமூகம் என்றைக்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் பின்னால் நிற்கிறதோ. அப்போது தான் பெண்கள் சம உரிமையைப் பற்றி சிந்திக்கத் துவங்க முடியும்.

பச்சிளம் குழந்தை முதல் பல்லுப்போன கிழவி வரை எல்லோரும் இரையாக்கப்படுகிறார்கள். குற்றம் நடந்தப்பின் குற்றவாளிகளை பிடிப்பதைவிட, குற்றமே நடக்காமல் இருக்க இங்கே நடவடிக்கைத் தேவை.

பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல் எது, கெட்ட தொடுதல் எது என சொல்லிக் கொடுத்து வளருங்கள் என்று சொல்லும் இந்த ஆணாதிக்க சமூகம், எப்போது தான் ஆண் குழந்தைகளுக்கு, பெண் குழந்தைகளைத் தொடக்கூடாது என சொல்லிக் கொடுத்து வளருங்கள் என்று சொல்லுமோ.

தலைகுனிகிறேன் ஆணாக இருப்பதற்கு…

“தம்பி கீழ வாடா… எவ்வளவு நேரமாக கூப்பிடுறேன் கீழ வாயேன் டா… அப்படி மேலே என்ன தான் செஞ்சிட்டு இருக்கியோ…” என அக்கா கூப்பிட்டவுடன் அவசரமாக கீழே வந்தேன்.

ஒரு சிலரைத் தவிர எல்லா விருந்தினர்களும் கிளம்பிவிட்டிருந்தனர்.

அக்கா-மாமாவுடம் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு வருவதற்குள் அவள் தூங்கிவிட்டிருந்தாள்.

என் அக்கா மகளின் பிறந்தநாள் பரிசாக நான் கொண்டுவந்திருந்த தங்க சங்கலியை அவள் கழுத்தில் அணிவித்து,”பிறந்தநாள் வாழ்த்துக்கள்! தேவிகா!!” என்று அவள் காதில் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினேன், பல யோசனைகளோடு, இந்த ஆணாதிக்கச் சமூகத்தை நினைத்து அவமானமாய்.

– இன்று அவளுக்குப் பிறந்தநாள்…