Friday, April 26, 2024
Home > பயண அனுபவம் > இறுக்கி அனைச்சு ஒரு உம்ம தரும் – #பயண அனுபவம் – 8

இறுக்கி அனைச்சு ஒரு உம்ம தரும் – #பயண அனுபவம் – 8

தலைப்பு சொல்வதைப் போல, இப்பதிவு முத்தம் சம்பந்தப்பட்டது தான். பாண்டிச்சேரி சென்றிருந்த பொழுது நடந்த ஒரு சம்பவமே இப்பதிவு எழுதக் காரணம். பொது தளத்தில் இருவர் முத்தம் கொடுத்துக் கொண்டிருப்பததை என் சம காலச் சமூகம் எப்படிப் பார்க்கிறது என்பதனை பதிவு செய்ய விரும்புகிறேன். சமூகத்தில் எல்லோரும் இப்படித் தான் இருக்கிறார்கள் என்று சொல்லவில்லை, ஆனால் சமூகத்தை குறுக்கு வெட்டாக ஒரு மாதிரியை எடுத்துப் பார்த்தோம் என்றால் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது விளங்கும்.

நம் நாட்டுச் சமூகம் முத்தங்களையும்,  இச்சைகளையும் பற்றி இன்னும் பொது வெளியில் விவாதிக்கவே துவங்கவில்லை. ஆனால், திரைப்படங்களில் அந்த மாதிரி காட்சிகள் வரும் பொழுது மட்டும் அதனை ரசிக்க மறப்பதில்லை. இப்படியான நிலையில், பொது வெளியில் இருவர் முத்தம் கொடுத்துக் கொண்டிருப்பதை மட்டும், எந்த கேள்வி இல்லாமல் நமது சமூகத்தை ஏற்றுக் கொள்ள சொன்னால் எப்படி? அதே சமயம், அப்படியே கடந்து போகாமல் அங்கு பிரச்சனை செய்வதும், நண்பர்கள் மத்தியில் கேளியும் கிண்டலுமாக அதனை பகிர்வதும் இன்னும் தொடந்துக் கொண்டுதான் இருக்கிறது.

இப்போது நான் முத்தம் சம்பந்தமான இந்தப் பதிவை எழுதியவுடன் என்னை வசைப் பாடுபவர்கள் தான் அதிகமாக இருப்பார்கள். இவனுக்கு எதுக்கு இந்த வேலை? என்பதில் துவங்கி, என் நடத்தையையே கேள்விக்கு உட்படுத்துபவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தான் இப்பதிவை ஆர்வமாகவும், எதேனும் உணர்வைத் தூண்டக்கூடிய சரக்கு இக்கட்டுரையில் இருக்கிறதா என்று தேடவும் செய்பவர்களாக இருப்பார்கள், இருக்கிறார்கள். அன்று நடந்த சம்பவம் உங்கள் முன்னே…

—-சம்பவம்—-

நானும் என் நண்பர்களும் பாண்டிச்சேரி கடற்கரையில் இருக்கும் காந்தி சிலையருகே இருக்கும் பாறைகள் மீது உட்கார்ந்து உரையாடிக் கொண்டிருந்தோம். எங்களின் வலது பக்கத்தில் இருக்கும் பாறைகளில் பாண்டிச்சேரிக்கு சுற்றுலா வந்த கல்லூரி மாணவிகள் அமர்ந்திருந்தார்கள். இடது  பக்கத்தில் பிரஞ்சு நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பாறைகள் மீது அமர்ந்திருந்தார்கள்.

இரவில் நட்சத்திரங்கள் மின்னுவதும், அவ்வப்பொழுது மீனவப் படகு தொலைவில் தென்படுவதும், இரவின் சர்வாதிகாரத்தைப் போக்க படைத்திரட்டி வருவது போல நிலவின் ஒளி பரவுவதும், குளிர்ந்த கடல் காற்றும், ஓயாமல் வரும் கடலலைகளும் என அந்த இடமே ரம்மியமாய் இருந்தது.

அருகில் அமர்ந்திருந்த கல்லூரி மாணவிகளின் சேட்டைகளை ரசித்துக் கொண்டும், அவர்களின் குரல்களுக்கு பதில் குரல் கொடுப்பதும், வித விதமான சபதங்களை எழுப்பிக் கொண்டிருப்பதுமாக அவர்களுக்கு நாங்கள் ‘கம்பனி’ கொடுத்துக் கொண்டிருந்தோம். அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த இடது பக்கத்தில் இருந்து ஒரு சப்தம். கல்லூரி மாணவிகளும், நாங்களும் திரும்பிப் பார்த்தோம்.

அப்போது  இந்திய ஆடவரும், ஒரு பிரஞ்சு பெண்மணியும் ‘பிரஞ்ச் கிஸ்’ ஸ்டைலில் முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் நண்பர்கள் குழாமில் ஒரே ஆரவாரம். சிலருக்கு நமக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற வயிற்றெரிச்சல், சிலருக்கு அடக்க முடியாமல் உணர்ச்சிப் பெறுக்கொடுத்து ஓடுகிறது. நான் எல்லோர் முகத்தையும் பார்த்தேன். வைத்த கண் வாங்காமல் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் அருகில் இருந்த கல்லூரி மாணவிகளில் சிலரும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார்கள், சில நோடிகளில் சில மாணவிகள் மட்டும் முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தவர்களை தவிர்த்து கடலை பார்க்க ஆரம்பித்தார்கள். மேலும் எங்களுக்கு அருகில் இருந்த சிலரும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

சில நிமிடங்களுக்குப் பிறகு அந்த இந்திய ஆடவர் முத்தம் கொடுப்பதை நிறுத்திவிட்டு, அந்த பிரஞ்சு பெண் முன்பு மண்டியிட்டு ஒரு மோதிரம் கொடுத்து என்னை திருமணம் செய்து கொள்கிறாயா? என்று கேட்கிறான். அந்த பெண்ணின் கண்களில் ஆனந்தக் கண்ணீர். அதனுடனே அவளும் மண்டியிட்டு அவனை முத்தமிட துவங்குகிறாள். அந்த பிரஞ்சு பெண்மணி தன் முத்தத்தாலே காதலை உறுதி செய்கிறாள். அவர்களுடன் வந்திருந்த நண்பர்கள் எல்லோரும் கைத் தட்டி ஆரவாரம் செய்கிறார்கள். கொண்டாடுகிறார்கள். தலைகால் புரியாமல் ஓடுகிறார்கள், ஒடியாருகிறார்கள். அத்தனைப்பேர் முகத்திலும் அப்படி ஒரு ஆனந்தம். அப்படி ஒரு பரவச நிலை. ஒரு பிரஞ்சுக்காரர் ஆர்வம் தாளாமல் என்னிடம் வந்து கைக் குலுக்கிவிட்டுச் செல்கிறார். தன் நண்பர்களின் காதல் வெற்றியை அப்படிக் கொண்டாடுகிறார்கள்.

நான் என்னைச் சுற்றி இருப்பவர்களைப் பார்த்தேன். பெரும்பாலனவர்கள் அந்த ஜோடி முத்தம் கொடுத்துக் கொண்டிருப்பதையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்தக் கல்லூரி மாணவிகளும் தங்களுக்குள் அவர்களைப் பற்றிப் சப்தமாக பேசி சிரித்துக் கொண்டிருந்தது என் காதுகளில் கேட்டது. அந்த இடத்தைவிட்டு காந்தி சிலைப் பக்கமாக வந்து நின்றுக் கொண்டேன். சற்று தொலைவில் இருந்து கவனித்தேன்.

இரண்டு நபர்கள் முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய நண்பர்கள் அதனை புகைப்படும் எடுத்துக் கொண்டும், கையில் இருக்கும் டின் பீரைக் குடித்துக் கொண்டும் இருக்கிறார்கள். அதனை முப்பது, நாற்பது பேர் சுற்றி இருந்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் வந்த சில நிமிடங்களில் கல்லூரி மாணவிகளும் அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிட்டார்கள். மற்றவர்கள் அந்த ஜோடி முத்தம் கொடுப்பதை நிறுத்தும் வரை சிலையாக மாறி அங்கேயே நின்றுக் கொண்டிருந்தார்கள். அந்த ஜோடி சுற்றமும் முற்றும் நம்மைப் பார்க்கிறார்கள் என்று உணர்ந்து எல்லோரையும் பதிலுக்குப் பார்த்தவுடம், எதையுமே பார்க்காத மாதிரி கண்டும், காணமலும் எல்லோரும் கலைந்துச் சென்றார்கள்.

—-சம்பவம் முடிந்தது—-

இந்த இடத்தில் நான் யாரையும் குற்றம் சாட்டவில்லை. இந்தப் பதிவு எழுதியதன் நோக்கமும் அதுவல்ல.  ஆனால் இருவர் முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தாலும், நம் மனம் கவனம் சிதறாமல் அதனைக் கடந்துப் போகும் பக்குவம் நமக்கு என்றைக்கு வருகிறதோ, அப்போது தான் நம் சமூகம் தனி மனித நாகரிகத்தை நோக்கிப் பயணிக்கிறது என்று அர்த்தம்.

பின்குறிப்பு: தலைப்பைப் பார்த்து வேறு ஏதேனும் எதிர்பார்த்து இந்தப் பக்கத்திற்கு வந்து ஏமாற்றம் அடைந்திருந்தால், அதற்கு பட்டிக்காடு தளம் பொறுப்பாகாது என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.

– பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா…