Friday, April 26, 2024
Home > பயண அனுபவம் > அவள் என்னைப் பார்த்துச் சிரித்தாள்!!! – பயண அனுபவம்-2

அவள் என்னைப் பார்த்துச் சிரித்தாள்!!! – பயண அனுபவம்-2

நாமக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சிக்குச் செல்ல அரசாங்க பேருந்திற்காக காத்திருந்தேன். அதற்கு முன்னே, இரண்டு தனியார் பேருந்துகள் அடுத்தடுத்து திருச்சிக்குச் செல்ல காத்திருந்தன. முதல் பேருந்தின் அருகே நின்றுக் கொண்டு, என் கைபேசியில் அடுத்து என்ன பாடல் கேட்கலாம் என நொண்டிக் கொண்டிருந்தேன். அப்போது அந்தப் பேருந்தின் நடத்துனர்,

“திருச்சி… திருச்சி…”

“திருச்சி…”

“திருச்சி.. திருச்சி…”

என ரைமிங்காக டையமிங்காக கத்திக் கொண்டிருந்தார். அதாவது அவரது வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்.

அருகில் இருந்த என்னைப் பார்த்து, “திருச்சியா?” என்று கேட்டார்.

நான் காதில் இருந்த ஹெட்போனைக் கழற்றிவிட்டு, “ஆமாம்” என்று தலையாட்டினேன்.

“அப்படினா சீக்கிரம் ஏறுங்க இடம் கம்மியா தான் இருக்கு” என்று சொன்னார்.

அவரிடம், “அண்ணா, நான் அரசு பேருந்திற்காக காத்திருக்கிறேன்” என்று சொன்னேன். அவர் என்னை மேலும் கீழும் பார்த்தார். அந்த பார்வைக்கு ஆயிரம் அர்ந்தங்கள் இருந்திருக்கும்.

இதற்கு மேலும் அந்த பேருந்தின் அருகில் நின்றுக் கொண்டிருந்தால், அதன் நடத்துனரிடம் இருந்து எதேனும் வசவு வாங்க வேண்டி இருக்கும் என்ற காரணத்தால் டீ குடிக்கலாம் என்று அருகில் இருந்த கடைக்குச் சென்றேன். அருமையான ஒர் இஞ்சி டீ குடித்தேன்.

அப்போது அடுத்த தனியார் பேருந்தின் நடத்தினரிடம் இன்னும் 5 நிமிடங்கள் இருக்கிறதே, அதற்குள்ளாக ஏன் உன்னுடைய பேருந்தில் ஆட்களை ஏற்றுகிறாய் என வாக்குவாதத்தில் இறங்கி இருந்தார் அந்த நடத்துனர். நல்ல வேலையாக அந்த கூச்சல் குழப்பத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டோம் என நினைத்தேன்.

என் மேலிருந்த கோபத்தையும் அடுத்த பேருந்தின் நடத்துவரிடம் அவர் காட்டிவிட்டதாக நினைத்துக் கொண்டேன். ஜீன்சும், டி-சர்டும் போட்டுக் கொண்டு அரசு பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்த என்னைப் பார்த்து, அவருக்கு கோபம் வராமல் இருந்திருந்தால் தான் அது அதிசயமாக இருந்திருக்கும். என்ன இப்படி சொல்கிறேன் என்று ஆச்சரியமாக இருக்கிறதா? சமூகம் இப்படித்தானே மாறி இருக்கிறது.

ஒரு வழியாக அந்த முதல் பேருந்து கிளம்பிய பிறகு அரசு பேருந்து வந்து சேர்ந்தது. முதல் ஆளாக ஏறி, முன்னே படியில் இருந்து மூன்றாவது சீட்டில், ஜன்னல் ஒரத்தில் அமர்ந்துக் கொண்டேன். கையில் ஒரு சிறு பை இருந்தது அதனை என் சீட்டின் அடியில் வைத்துக் கொண்டேன்.

மெல்ல மெல்ல பேருந்தில் மக்கள் எற ஆரம்பித்தார்கள். பேருந்து முழுவதுமாக நிறைந்திருக்கும் என்று சொல்ல முடியாது இருந்தாலும் நேரமாகிவிட்ட படியால், மெதுவாக பேருந்து ஊர்ந்து நாமக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி நோக்கி பயணமாக தயாராகிக் கொண்டிருந்தது. எனக்கு என்னவோ, விமான நிலையத்தில் இருந்து பறப்பதற்கு தயாராக இருக்கும் விமானம் போல, பேருந்து உறுமிக் கொண்டிருந்ததுப் போல் இருந்தது. பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேறுவதற்குள் பேருந்து முழுவதுமாக நிறைந்திருந்தது.

என் முன் சீட்டில் 25 வயது மிக்க ஒரு வாலிபன் அமர்ந்திருந்தான். அவன் தன்னுடைய பையை தலைக்கு மேலே இருந்த சரக்கு பகுதியில் வைத்துவிட்டு, கையில் இரண்டு பாட்டில் தண்ணீருடன் தன்னுடைய சீட்டில் வந்தமர்ந்தான். அவன் அருகில் ஒரு பெரியவர் உட்கார்ந்திருந்தார். பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து கிளப்பியவுடன், அவன் காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு பாட்டு கேட்க ஆரம்பித்திருந்தான்.

நடத்துனர் எல்லா பயணிகளிடமும் பயணச்சீட்டைக் கொடுத்து முடித்திருந்தார். பேருந்து, நாமக்கல் இரயில்வே பாலத்தை தாண்டி சென்றுக் கொண்டிருந்தது. நான் வழக்கம் போல வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது பேருந்து நாமக்கல் அரசு கலைக்கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் நின்று ஆட்களை எற்றிக் கொண்டு கிளம்பியது. வண்டி முழுவதுமாக கல்லூரி மாணவ, மாணவிகள் ஆக்கிரமித்திருந்தார்கள். எல்லோரும் அருகில் இருக்கும் வலையப்பட்டி என்னும் ஊரில் இருந்து, இந்த அரசுக் கலைக் கல்லூரிக்கு வந்து படிப்பவர்கள் என்பதனை அவர்கள் நடத்துனரிடம் பயணச்சீட்டு வாங்குவதை வைத்து தெரிந்துக் கொண்டேன். ( ஆமா, இப்ப இது ரொம்ப முக்கியம் என நீங்கள் மனதில் நினைப்பது புரிகிறது. சரி சரி… விசியத்திற்கு வருகிறேன். )

அரசு கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் பல மாணவ, மாணவிகள் பேருந்தில் ஏறினார்கள். அதில் இரு மாணவிகள் அந்த வாலிபன் அமர்ந்திருந்த சீட்டிற்குப் பக்கவாட்டிலும், என் சீட்டிற்கு எதிரேயும் இருப்பது போல நின்றுக் கொண்டார்கள். அவர்களை முதலில் நான் சரியாக கவனிக்கவில்லை. ஆனால் அவர்கள் என்ன பேசினாலும் என் காதிற்கும் கேட்டும் தூரத்தில் தான் இருந்தார்கள். எனதருகில் ஒரு 10 வயது சிறுவன் அமர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். ( ஆ… விசயத்திற்கு வந்துட்டான்-யானு நினைக்கறீர்கள்… அதுவும் சரி தான். )

அந்த இரு மாணவிகளையும் கொஞ்சம் நிமிர்ந்துப் பார்த்தேன். அவர்களுள், ஒரு மாணவி சற்றே மார்டனாகவும், இன்னொருவர் கொஞ்சம் கிராமத்து வாசனையுடனும் இருந்தார்கள். ஆனால் இருவரும் ஒரே மாதிரி உடையணிந்திருந்தார்கள். அது சீருடையாகக் கூட இருக்கலாம். அவர்களுள் ஒரு மாணவியை என் முன் சீட்டில் அமர்ந்திருந்த வாலிபன் ஒரு மார்க்கமாக பார்க்க துவங்கியிருந்தான். அதனை நான் கவனிக்கவில்லை. அவன் அந்த மாணவினைப் பார்பதனைப் பற்றி அந்த மாணவிகள் இருவரும் பேசி சிரித்துக் கொண்டார்கள். முதலில் அந்த வாலிபனை அந்த மாணவிகள் விளையாட்டாகத் தான் எடுத்துக் கொண்டார்கள். ஆனால் அவன் மீண்டும் மீண்டும் அவர்களைப் பார்ப்பது அவர்களுக்கு ஒரு விதமான எரிச்சலைத் தந்துக் கொண்டிருந்தது.

அப்போது இன்னொரு மாணவி, பாதிக்கப்பட்ட மாணவியிடம், இவனை எதிர்த்து நம்மால் என்ன செய்ய முடியும். ஒரு வேளை நாம் இவனை எதிர்ந்து கூச்சல், கூப்பாடு போட்டாலும் அவனுக்கு ஒன்றும் தண்டனைக் கிடைத்துவிடப் போவதில்லை. ”பெண்ணுங்க வெளியில வந்துட்டா பசங்க பாக்கத்தான் செய்வாங்கனு” எதாச்சும் பாட்டி சத்தம் போட்டாலும் போடும். தேவையில்லாமல் நமக்குத் தான் அசிங்கம் என்று பேசிக் கொண்டு வந்தார்கள். அதனைக் கேட்ட பாதிக்கப்பட்ட மாணவியும் ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தாள். அந்த மாணவியின் கண்களைப் பார்த்தேன். எதும் செய்ய முடியவில்லையே என்ற கோபமும், ஆதங்கமும் அவளின் கண்களில் கண்ணீர் வர வைத்துக் கொண்டிருந்தன. அந்த மாணவிக்கு எதாவது உதவ வேண்டும். என்ன செய்யலாம்? எப்படி செய்யலாம்? எதேனும் வழி கிடைக்குமா? என்று யோசித்திக் கொண்டிருந்தேன்.

அந்த மாணவிகளும் முடிந்த அளவிற்கு அந்த வாலிபனைப் பார்க்காதவாறு இருக்க முயற்சி செய்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் துர்திஷ்டம் பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால், அவர்களால் அந்தப் பக்கமாக திரும்பி நிற்கக் கூட வாய்பில்லாமல் போய்விட்டது. அந்த மாணவிகளின் கவனத்தைக் பெற அந்த வாலிபனும் எதேனும் குரங்கு சேட்டைகளை செய்தவாறே இருந்தான். அப்போது அந்த மாணவிகள் எண்ணைப் பார்த்தார்கள். நானும் அவர்களைப் பார்த்தேன். அவர்களின் கண்களில் எங்களுக்கு எதாவது உதவ முடியுமா? என்று கேட்பதைப் போல ஒரு ஏக்கத்தை உணர்ந்தேன். அது எனக்குள் ஒருவிதமான தைரியத்தைக் கொடுத்தது.

அந்த மாணவிகள் என்னைப் பார்த்துக் கொண்டிருந்த போதே என் முன் சீட்டில் அமர்ந்திருந்த அந்த வாலிபனின் பின் மண்டையில் எனது வலது கையால் ஓங்கி ஒரு தட்டுதட்டினேன். அவன் சட்டேன்று திரும்பி, என்னை முறைத்தான். அந்த மாணவிகளையும் பார்த்தான். அனுபவபட்டவன் போல, அவனுக்கு விசயம் புரிந்தது. அமைதியாகிக் கொண்டான். அந்த மாணவிகளையும் கொஞ்ச நேரம் பார்க்காமல் இருந்தான். கால் மணி நேரம் கடந்திருக்கும், பேருந்தும் அந்த மாணவிகள் இறங்க வேண்டிய வலையப்பட்டியை நெருங்கி இருந்தது.

அப்போது அவன், மீண்டும் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்திருந்தான். அவனை மீண்டும் தலையில் அடிக்க போனேன். அப்போது அந்த பாதிக்கப்பட்ட மாணவி சற்று பொறுங்கள் என சைகை காட்டினாள். இது நடந்த பொழுது அந்த வாலிபனின் கவனம் ஜன்னலுக்கு வெளியே இருந்தது. சிறிது நேரத்திலேயே, மீண்டும் அந்த மாணவியை உற்றுப் பார்த்தான். அந்த மாணவியின் கண்களில் ஒரு உத்வேகம் தெரிந்தது. இன்னும் சில நிமிடங்களில் அவள் இறங்கப் போகும், வலைப்பட்டி, வரப் போகிறது அதற்குள் எதோ செய்யப் போகிறாள், என்பதனை ஊகித்தேன். அவள் சைகைக் காட்டியது இனி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்வதைப் போல இருந்தது.

அப்போது அந்த வாலிபனைப் பார்த்து அந்த மாணவி, “அண்ணா!!!, தாகமா இருக்கு… குடிக்க கொஞ்சம் தண்ணீர் கொடுண்ணா” என்று சத்தமாக கேட்டாள். அண்ணா என்ற அந்த சத்தம், அவன் காதில் மாட்டியிருந்த ஹெட்போனையும் மீறி அவனை நிலைகுலையச் செய்தது. அவன் சுற்றும் முற்றும் பார்த்தான். நாங்கள் எல்லோரும் அவனையே பார்த்துக்கொண்டிருந்தோம். அவனை அறியாமலே பதற்றத்தில் அவன் தன்னிடம் கையில் இருந்த திறக்காத ஒரு புதிய கின்லே தண்ணீர் பாட்டிலை எடுத்து அந்த மாணவியிடம் கொடுத்தான். கோழியின் கழுத்தை திருகுவதுப் போல அந்த மாணவி அந்த புதிய பாட்டிலைத் திறந்து அதில் இருந்த தண்ணீரைக் குடித்தாள். அவளின் தோழியும் கொஞ்சம் தண்ணீரைக் குடித்துவிட்டு அந்த வாலிபனிடம் கொடுக்கத் துணிந்தாள். அவளின் “அண்ணா” சத்ததைக் கேட்டு அவன் அருகில் அமர்ந்து உறங்கிக்கொண்டிருந்த பெரியவர் எழுந்திருந்தார். அவர் மாணவி அவனுக்கு தந்த அந்த பாட்டிலை வாங்கி மீதம் இருந்த தண்ணீரையும் குடித்துவிட்டு அந்த வாலிபனிடம் வெறும் பாட்டிலைக் கொடுத்தார். அந்த பாட்டிலை அவன் வாங்கி தூக்கி எறிய ஜன்னல் பக்கம் திரும்பியவன் பேருந்து திருச்சி சென்று சேரும் வரை இந்தப் பக்கம் திரும்பவேயில்லை.

இந்த இடத்தில் நான் நடந்த எல்லாவற்றையும் அசைப்போட்டுப் பார்த்தேன். முதன் முதலில் அந்த வாலிபன் அந்த மாணவியைப் பார்த்த பொழுது அதனைக் அவர்கள் கேலியாக எடுத்துக் கொண்டதும், பிறது என்ன இவன் நமக்குத் தொல்லைத் தருகிறான் என்று முகத்தைக் திருப்பிக் கொள்ள முயன்றதும், அது முடியாமல் அவனையும் எதுவும் செய்ய முடியாமல் கூனிக் கூறுகி நிராயுதபாணியாக நின்றதும், அவர்களுக்காக நான் அவன் தலையில் சிறு தட்டுதட்டியதும், மீண்டும் அவன் வாலட்ட முனைந்ததும், உதவிக்கு ஆள் இருக்கிறது என்ற தைரியம் அந்த பெண்ணிற்கு கிடைத்ததும், அவள் அவனை நிலைகுலையச் செய்ததுமென எல்லாம் என் கண் முன்னால் வந்து மறைந்தது.

இந்தியாவில் ஆண்களால் பாதிக்கப்படும் எண்ணற்ற பெண்கள் அனைவருக்கும் எதேனும் தைரியத்தை யாரேனும் கொடுத்தால் அவர்களும் அந்த ஆண்களை எதிர்த்து கடைசி வரை போராடுவார்களே. அது தானே நம் நாட்டுக்கு இன்றைய முக்கியத் தேவை.அந்தப் பேருந்துப் பயணம் எனக்கு ஒரு நல்ல அனுபவத்தைக் கொடுத்தது. கள யதார்ததை உணர உதவியது.

கடைசியில் அந்த மாணவி, வலயப்பட்டியில், பேருந்து நின்ற பொழுது, கீழே இறங்கும் முன் நன்றிகளுடன், “என்னைப் பார்த்து சிரித்தாள்.

– சும்மா ஜீவ்வுனு இருந்தது…