Wednesday, April 24, 2024
Home > அரசியல் > #தேர்தல்2016 > சொல்லவேயில்ல… அமெரிக்காவிலும் தேர்தலாமே!!! – #தேர்தல்2016 – பதிவு…3

சொல்லவேயில்ல… அமெரிக்காவிலும் தேர்தலாமே!!! – #தேர்தல்2016 – பதிவு…3

அரசியல் என்பது மக்களிடம் இருந்து அந்நியப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்று புலம்பாத அறிஞர்கள் அரிது. ஆனால் உண்மையில் அரசியல்வாதிகள் தான் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கிறார்களே தவிர மக்கள் அந்நியப்படவில்லை. அமெரிக்கவா இருந்தால் என்ன? தமிழகமாக இருந்தால் என்ன? அரசியல்வாதிகள் எல்லாம் ஒரே மாதிரித் தான் இருப்பார்கள் போல. எது எப்படியோ 2016ஆம் ஆண்டின் அரசியல் நிகழ்வுகள் வரலாற்றில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. அதுவும் தமிழக கள நிலவரவும் அமெரிக்க அரசியல் நிலவரமும் ஒரே மாதிரி இருப்பது வேடிக்கைத்தான். தமிழக அரசியலுக்கும் அமெரிக்க அரசியலுக்கும் இருக்கும் ஒற்றுமைகளை தனியாக விவாதிப்போம். கவனிக்க…அரசியல். இன்றைக்கு அமெரிக்க அரசியலைப் பற்றி சிறு அறிமுகம்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நடைமுறைகள் – அறிமுகம்

அமெரிக்க அதிபர் தேர்தல் எப்படி நடக்கும், அங்கே இருக்கக் கூடிய நடைமுறைகள் என்ன என்பதன் சுருக்கமான சாரம் இதோ…

  • அமெரிக்காவில் முதலில் அதிபரை தேர்வு செய்வார்கள். அவர் தனக்கான அமைச்சரவையை தேர்தேடுப்பார். அந்த அமைச்சரவையின் முடிவுகளை மக்களால் தேர்தேடுக்கப்பட்ட பாராளுமன்றத்தால் பெரும்பான்மையில் நிறைவேற்றப்பட வேண்டும். அப்போது தான் அது சட்டமாகும். சில சமயங்களில், அதிபரின் சட்ட முன்வரைவுகள் தோற்கடிக்கப்படும் பொழுது, அதிபர் தனக்கு இருக்கு வீடோ அதிகாரத்தை பயன்படுத்தி அதனை நிராகரிக்கவும் முடியும், தான் விரும்பும் சட்டங்களை அமல்படுத்தவும் முடியும்.
  • அமெரிக்க அதிபர் என்பவர், உலகின் பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் மூன்றாவது பெரிய நாட்டின் தலைவர். அமெரிக்கா, உலகிலேயே பலமான இராணுவம் கொண்டது. அணு சக்தியால் இயங்கும் 10 விமானம் தாங்கி கப்பல்களையும், 4500+ போர் விமானங்களையும், 1000+ போர்க் கப்பல்களும், 20 இலட்சம் வீரர்களும் மற்றும் பல அதி நவீன இராணுவ தளவாடங்களும், ஏவுகனைகளும் அவரின் தலைமையின் கீழ் தான் இயங்குகிறது. கிட்டதிட்ட அமெரிக்க அதிபர் தான் உலகின் பெரியண்ணன். எந்த நாட்டில் பிரச்சனையாக இருந்தாலும் உள்ளே புகுந்து கட்ட பஞ்சாயத்து செய்வதும், அடிபணியாத நாட்டின் அரசை கவிழ்ப்பதும் அவர்களின் பொழுதுபோக்கு. அவரின் பதவிக்காலம் நான்கு  ஆண்டுகள். ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபராக பதவி வகிக்க முடியும்.
  • இன்றைய தமிழக அரசியல் களத்தில் அதிமுக, திமுக என்று இருதுருவ அரசியல் போல அமெரிக்க அரசியல் களத்திலும் குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி என இரு துருவ அரசியலே நூற்றாண்டுகளாய் கோலோச்சுகிறது. இங்கே கம்யூனிஸ்டு, தேமுதிக என கட்சிகள் இருப்பது போல அங்கேயும் டீ-பார்ட்டி, சோசியலிஸ்டுகள் என கட்சிகள் இருக்கிறது. ஆனால் நம்ம ஊரின் குட்டி கட்சிகள் போல அவையும் பெரிதாக வளரவில்லை.
  • குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி என இரு கட்சிகளிலுமே அக்கட்சி தொண்டர்களும், சில சமயங்களில் பொது மக்களும் சேர்ந்து முதன்மையாக தங்களுக்குள்ளேயே தேர்தல் ( அதனை அவர்கள் பிரைமரி என்று அழைப்பார்கள் ) நடத்தி தங்களது கட்சி சார்பாக அதிபர் பதவியிற்கு போட்டியிடப் போவது யார் என்று தேர்தேடுப்பார்கள். அப்படி தேர்தேடுக்கபடுபவரே அவர்களின் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும்.
  • அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மாகாணத்திற்கும் அதன் மக்கள் தொகை, பொருளாதாரம் மற்றும் சில காரணிகளைக் கொண்டு பிரதிநிதிகள் ஒதுக்கப்படும். கலிபோர்னியா, நியூயார்க் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த மாகாணங்களுக்கு அதிக பிரதிநிதிகளும், நவேடா, வெர்மோண்ட் போன்ற மாகாணங்களுக்கு குறைந்த பிரதிநிதிகளும் ஒதுக்கப்படுவார்கள். ஒவ்வொரு மாகாணத்திலும் நடக்கும் பிரைமரி தேர்தலிலும் பதிவாகும் வாக்குகள் அடிப்படையில் பிரதிநிதிகள் ஒதுக்கப்படும். சில மாகாணங்களில் பெரும்பான்மை பெறுபவருக்கே அனைத்து பிரதிநிதிகளும் ஒதுக்கப்படும், சில மாகாணங்களில் பிரதிநிதித்துவ அடிப்படையிலும், சில மாகாணங்களில் வேறு சில முறைகளிலும் பிரதிநிதிகள் ஒதுக்கப்படுகிறார்கள். 51% பெரும்பான்மை பிரதிநிதிகளின் ஆதரவைப் பெறும் நபரே ஒவ்வொரு கட்சியின் சார்பாகவும் அதிபர் தேர்தலில் குடியரசு, ஜனநாயக கட்சிகளின் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார்கள். ஒரு வேளை எந்த வேட்பாளரும் முதன்மைத் தேர்தலில் பெரும்பான்மை பெறவில்லை எனில் அக்கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டி வேட்பாளரை தேர்வு செய்வார்கள்.
  • அப்படி தேர்தேடுக்கப்படும் வேட்பாளர்களே நவம்பர் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில் மோதுவார்கள். சில சமயங்களில் சுயேட்சையாக சில வேட்பாளர்கள் களம் கண்டு அதிபர் தேர்தலில் ஓட்டை பிரிப்பதுண்டு. ஆனால் பெரும்பாலும் ஜனநாயக கட்சி அல்லது குடியரசுக் கட்சியை சேர்ந்தவர்களே அதிபர்களாக தேர்தேடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

இது போல இன்னும் பல நடைமுறைகள் இருக்கின்றன. இணையத்தில் கூகுளாண்டவரிடமும், வீக்கிப்பீடியாவிடமும் கேளுங்கள்.  நிறைய தகவல்கள் கிடைக்கும்.

இம்முறை போட்டியில் யார்? யார்?

ஜனநாயக கட்சி

ஜனநாயக கட்சி சார்பில் டிரம்ப், குரூஸ் மற்றும் கைசேச் ஆகிய மூன்று பேரும் இன்றைய தேதியில் முதன்மை தேர்தல் களத்தில் உள்ளவர்கள். அவர்களுள் டிரம்பிற்கு மட்டுமே முதன்மை தேர்தலில் 51% பெரும்பான்மை பிரதிநிதிகள் ஆதரவு கிடைக்கும் வாய்ப்புள்ளது. மற்ற இருவரும் டிரம்ப் பெரும்பான்மை பெறவில்லை என்றால் தமக்கு வாய்ப்பு கிடைக்கும் என களத்தில் இருப்பவர்கள். அவர்களுள் டிரம்ப் மற்றும் குரூஸ் ஆகிய இருவருக்கும் ஜனநாயக கட்சிக்கும் பெரிய நீண்ட நெடிய பந்தம் கிடையாது, அவர்கள் கட்சிக்கு புதியவர்கள். மேலும் கட்சியின் பல கொள்கைகளுக்கு மாற்றுக் கருத்து தெரிவிப்பவர்கள். அவர்கள் அதிபர் வேட்பாளராக வருவது கட்சியின் தலைமைக்கு பிடிக்கவில்லை. ஆனாலும் தொண்டர்களின் பெரும்பான்மையான ஆதரவு அவர்கள் இருவருக்கும் தான் இருக்கிறது. அதிலும் டிரம்ப் கண்டிப்பாக அதிபர் வேட்பாளராக வரக்கூடாது என்று கங்கனம் கட்டிக் கொண்டு ஜனநாயக கட்சித் தலைமை வேலை செய்தாலும் அவரே தடுக்க முடியவில்லை. அனேகமாக அவரே கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக களமிறங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. காரணம், அவருக்கு இருக்கும் ஆதரவு வட்டம் அப்படி.

குடியரசு கட்சி

குடியரசு கட்சியின் ஒபாமா தான் இப்போதய அமெரிக்க அதிபராக இருக்கிறார். ஆனாலும் அவர் இரண்டு முறை அதிபராக பதவி வகித்துவிட்டதால் இனி அவரால் போட்டியிட முடியாது. அவரின் முதல் பதவிக்காலத்தில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஹிலாரியும், செண்டர்சும் களத்தில் உள்ளனர். இவர்களுள் இளைஞர்களின் பெரும்பான்மையான ஆதரவு 74-வயதான செண்டர்க்கு தான் உள்ளது என்று நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். ஆனாலும் அவர் முதன்மைத் தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பில்லை. காரணம், குடியரசுக் கட்சியில் பல இளைஞர்கள் தங்களை சேர்த்துக் கொள்ளாததால் இளைஞர்கள் அக்கட்சியின் முதன்மை தேர்தலில் ஓட்டளிக்க முடியவில்லை.

 நவம்பர் தேர்தலில் மோத வாய்ப்புள்ளவர்கள்

நவம்பர் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில் போட்டியிட குடியரசுக் கட்சியில் ஹிலாரிக்கும், ஜனநாயக கட்சியில் டிரப்ம்பிற்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது. குடியரசுக் கட்சியில் முதன்மைத் தேர்தலில் ஹிலாரியின் வெற்றி கிட்டத்திட்ட உறுதியாகிவிட்டது. ஜனநாயக கட்சியில் டிரம்ப் நிலைமை தான் இன்னும் சரிவர தெரியவில்லை. அவரை முதன்மை தேர்தலில் வெல்ல விடக்கூடாது என அவரின் போட்டியாளர்கள் கூட்டணி அமைத்து திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் டிரம்ப்பும், ஹிலாரியும் தான் நவம்பர் மாத தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளவர்கள்.

– இன்னும் நிறைய இருக்கே???