Thursday, April 25, 2024
Home > அரசியல் > #தேர்தல்2016 > ”விஜயகாந்த்” புயல் #தேர்தல்2016 – பதிவு…1

”விஜயகாந்த்” புயல் #தேர்தல்2016 – பதிவு…1

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இரண்டு வாரங்களாகத் தான் அதிகமாக இருக்கிறது. ஆனால் தேர்தல் களத்தின் தாக்கமோ டிசம்பர் மாதம் முதலே சூடு பிடிக்கத் துவங்கிவிட்டது. சரியாக சொல்வதானால், எப்போது தமிழகத்தை மழையும், வெள்ளமும் புரட்டிப் போட்டதோ அப்போது முதலே அரசியலில் களமும் சூடாக ஆரம்பித்துவிட்டது. மழைக்கு நிவாரணம் தருகிறேன் என்ற பெயரில் கட்சிகள் செய்த காட்சிகள் யாரும் அருவறுக்கத்தக்க வகையிலே அமைந்தன என்பதே உண்மை. அப்போதே அப்படி என்றால் இப்போது தேர்தல் தேதி வேறு அறிவிக்கப் பட்டுவிட்டதல்லவா… கேட்கவா வேண்டும். ஒரே குஷ்டமப்பா… சீ… கஷ்டமப்பா…

எப்போதும் தமிழகத் தேர்தல் களம் திமுக மற்றும் அதிமுக என கடந்த 40 ஆண்டுகளாக இரு கட்சிகளை  மட்டுமே சுற்றிச் சுழலுகிறது. அதுவும் கடந்த 30 ஆண்டுகளாக திமுக தலைவர் கருணாநதி மற்றும் அதிமுக தலைவர் ஜெயலலிதா ஆகியோரைச் சுற்றியே தமிழக அரசியல் களம் இருக்கிறது. ஆனால் எப்போது இல்லாத வகையில் தேர்தலுக்கு ஐந்தாறு மாதங்கள் இருக்கும் முன்பே விஜயகாந்தை சுற்றியே இத்தேர்தல் களம் சுழல ஆரம்பித்தது. அதிமுக ஒரு பக்கம் நாங்கள் தான் அடுத்த ஆட்சி என முழங்கிக் கொண்டிருக்க, திமுக பதிலுக்கு நமக்கு நாமே என்று பயணத்தை துவக்கி மக்களைக் கவர முயற்சி செய்துக் கொண்டிருந்தது.

ஆனால் ஊடகங்களும், டீக்கடை அரசியல் விமர்சகர்களும் விஜயகாந்த் எந்தப் பக்கம் போவார் என வியூகங்கள் வகுத்துக் கொண்டிருந்தார்கள். உண்மையை சொல்ல வேண்டுமானால் அவர்கள் விஜயகாந்த் முடிவு என்ன என்பதை ஊகங்களாய் நார் நாராக கிழித்து தொங்க விட்டுக் கொண்டிருந்தார்கள். அரசியலில் ஆர்வமுள்ள இரண்டு நபர்கள் சந்தித்துக் கொண்டால் கண்டிப்பாக விஜயகாந்தின் முடிவு என்னவாக இருக்கும் என பேசாமல் கலையமாட்டார்கள். கருணாநிதி சாணக்கியர், அவர் கண்டிப்பாக விஜயகாந்தை திமுகவுடன் கூட்டணி சேர வைத்துவிடுவார் என்று திமுக தொண்டர்கள் மட்டுமல்ல அதிமுக தொண்டர்களே பேசுவதைக் கேட்க முடிந்தது. அதிமுக தொண்டன் வெளியில் என்ன தான் 234/234 வெல்வோம் என்று கூறிக்கொண்டாலும் திமுகவும் தேமுதிகவும் கூட்டணி அமைத்தால் கண்டிப்பாக அதிமுக ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை என முனுகிக் கொண்டிருந்தார்கள்.

எந்தச் செய்திச் சேனல் எடுத்துக் கொண்டாலும் விஜயகாந்தின் முடிவு என்னவாக இருக்கும் என்று விவாத நிகழ்ச்சிகள் நடத்த ஆரம்பித்தார்கள். விஜயகாந்த என்ற குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது காற்றழுத்த மண்டலமாக மாறிக் கொண்டிருக்கிறது என்று வானிலை அறிக்கை வாசிக்காதது மட்டுமே பாக்கி. அந்த அளவிற்கு  திமுகவும், அதிமுகவும் அதன் ஆதரவாளர்களும், ஆதரவு ஊடகங்களும் விஜயகாந்திற்கு எதாவது ஒரு பக்கம் சாயுமாறு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்திருந்தனர். விளைவாக தேமுதிக என்று கட்சி ஊடகங்களின் பிம்பப் புயலாக மாறியது.

விஜயகாந்த் என்று பெயர் சூட்டப்பட்ட ‘தேமுதிக’ புயல் கரையைக் கடக்கப்போகிறது என்று மாதக் கணக்கில் வானிலை அறிக்கைகள் மாதிரி தினமும் செய்தி சேனல்களும், செய்தித்தாள்களும் மாறி மாறி செய்திகள் வழங்கிக் கொண்டிருந்தன. அவர்கள் டிஆர்பிகளுக்காக, தங்களின் செய்தித்தாள் விற்க வேண்டும் என்ற காரணத்திற்காக விஜயகாந்த் என்ற மனிதனை பிம்பமாக மாற்றினார்கள். ஒரு மாய தோற்றத்தை உருவாக்கினார்கள். இவர்களின் வியாபார போட்டியால் சாதாரண திமுக தொண்டனும் தேமுதிக வந்தால் தான் அதிமுகவை வெல்ல முடியும் என்று நினைக்க ஆரம்பித்தனர். அதிலும் கலைஞர் ஒரு படி மேல போய் “பழம் கனிந்துக் கொண்டிருக்கிறது, அது விரைவில் பாலில் விழப்போகிறது” என்று சொன்னார். இங்கே தான் விஜயகாந்தின் பலம் அதிகரிக்கத் துவங்கியது. அதிமுக அணியோ அப்படி விஜயகாந்த் திமுக பக்கம் சேர்ந்தால் நமக்கு பின்னடைவு என்று பயந்தது. முன்றாவது ஒரு அணி உருவானால் அது அரசுக்கு எதிரான ஓட்டுக்களை பிரிக்கும், அதனால் அதிமுக எளிதாக வெல்லும் என்று கணக்குப் போட்டது. அதனால் விரைவாக தனித்துப் போட்டி என்று சொல்லி தனது கதவை மூடிக் கொண்டது. அதுவே முன்றாவது அணி உருவாக முதன்மையான காரணம்.

விஜயகாந்த் தேர்தலில் வெற்றி பெறுவாரா? என்பது கேள்விக்குறி தான். ஆனால் மற்றொன்றில் அவர் வெற்றிப் பெற்றுவிட்டார். அது யாதெனில். எல்லோரையும் தன்னைப் பற்றி பேச வைத்துவிட்டார். அவர் ஒரு நல்ல தலைவர் என்ற முடிவிற்கு எளிதில் வர முடியாது. ஆனால் அவர் தான் ஒரு நல்ல வியாபாரி என்பதை நிருபித்துவிட்டார். ஒரு ரூபாய் செலவில்லாமல் தனக்கும் தனது கட்சிக்கும் விளம்பரம் தேடிக் கொண்டார். எம்ஜியார் அதிமுக ஆரம்பித்த பொழுது அவருடைய கட்சிக்கு கொள்கைகள் எதுவுமில்லை. அதே போல தான் விஜயகாந்தின் தேமுதிகவிற்கும் கொள்கைகள் என்று பெரிதாக எதுமில்லை. அதனால் தானே என்னவோ தன்னை கருப்பு எம்ஜியார் என்று அழைத்துக் கொண்டார் போல. அது கிடகட்டும். ஆனால் திமுகவும், பாஜகவும் விஜயகாந்திற்காக காத்திருந்து காத்திருந்து ஏமாந்துப் போனது தான் மிச்சம். இது தான் காலத்தின் கோலம்.

வைகோவும், திருமாவும், கம்யூனிஸ்டுகளும் மக்கள் நல இயக்கம் என்று ஆரம்பித்தார்கள். அது நாளடைவில் மக்கள் நலக்கூட்டணியானது. மிக விரைவிலே அது தன்னுடைய சுயத்தை இழந்து கேப்டன் அணி என்றானது. மீண்டும் ஒரு குழப்பு குழப்பி தேமுதிகாவும்-மக்கள் நலக் கூட்டணியும் தொகுதி உடன்படிக்கை அமைத்துக் கொண்டிருக்கிறோம் என்று அறிவித்தார்கள். அதனால் வேறு வழியின்றி மிச்ச சொச்ச கட்சிகளும், சொச்ச மிச்ச கட்சிகளும் ஒரு தொகுதிக்காக திமுக பக்கம் ஒதுங்க. பாமக தனது ஜாதி பலத்தை நிரூபிக்க தனியே களமிறங்க. பாஜகவோ தமிழகத்தில் தனக்கு என்ன பலம் இருக்கிறது என்று பரிசோதிக்க தனது தலைமையில் ஒரு கூட்டணியுடன் களமிறங்க. எங்களையும் தேர்தல் ஆட்டத்துல சேத்துகுங்க என நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக் தலைமையில் விடியல் கூட்டணி அமைய… 2016 தேர்தல் களம், வாரச் சந்தைப் போல ஆகிவிட்டது.

இத்தேர்தல் நமக்கு மட்டுமல்ல சில கட்சிகளுக்கும் சில செய்திகளைக் கொடுக்கப் போகிறது. அவை என்ன என்று பார்ப்போம்.

  1. திமுகவிற்கு இது வாழ்வா? சாவா? என்று முடிவு சொல்லும் தேர்தல் கிடையாது.  நேரு, காமராஜர் முதல் இன்றைய லட்டர்பேட் கட்சிகள் வரை கருணாநதி அரசியல் செய்துவிட்டார். அவரும் இத்தேர்தல் மூலம் நிரூபிக்க வேண்டியது ஒன்றுமில்லை. உண்மையில் இத்தேர்தல் ஸ்டாலினுக்கான தேர்தல். இதில் அவர் வெற்றிப் பெற்றே ஆக வேண்டும். இல்லாவிடில் திமுக இருக்கும். ஆனால் அதில் ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் இருக்காது. ஸ்டாலினுக்குத் தான் இது வாழ்வா? சாவா? தேர்தல்.
  2. அதிமுகவைப் பொறுத்த வரை அதன் பலமும் ஜெயலலிதா தான், பலவீனமும் ஜெயலலிதா தான். இன்றைய இந்தியப் பாராளுமன்றத்தில் மூன்றாவது மிகப் பெரிய கட்சி, பிரதமரே வீடு தேடி வந்து பார்க்கும் அளவிற்கு செல்வாக்கு பெற்ற தலைவர் என அடுக்கிக் கொண்டே போனாலும் இத்தேர்தலில் வெற்றி பெற அதிமுக கடுமையாக போராட வேண்டியிருக்கும். இந்த தேர்தலில் திமுக தோற்றால் அது 2021-ல் மீண்டும் எழுந்து நிற்கும். ஆனால் அதிமுக தோற்றால் 2021-ல் ஜெயலலிதாவால் பழைய வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியுமா என்பது சந்தேகம் தான். ஆக இது தனக்கான வாழ்வா? சாவா? தேர்தல் என்பது யாருக்கு தெரிகிறதோ இல்லையோ, கண்டிப்பாக அதிமுக தலைமைக்கு தெரியும்.
  3. தேமுதிகவிற்கு இந்த தேர்தல் ஒரு பொருட்டே அல்ல என்று தான் நினைக்கிறேன். விஜயகாந்த் பதவி வெறி, பண வெறி பிடித்தவர் என்றால் அவர் நிச்சயம் திமுக பக்கம் சேர்ந்திருக்க வேண்டும். அதே சமயம் அவருக்கு ராஜசபா உறுப்பினர், மந்திரிப் பதிவி என பாஜக எவ்வளவு வலை விசியும் அவர் அவர்களை எந்திரி என்று சொல்லிவிட்டார் நாசுக்காக. அப்படி இருந்தும் தேமுதிகவும்-மக்கள் நலக் கூட்டணியும்-தமாகவும் ‘தொகுதிப் பங்கீடு’ செய்துக்கொள்ள ஒரு காரணம் இருக்கிறது. 2014 தேர்தல் முடிவின் படி தேமுதிகவிற்கு வெறும் 5% மட்டுமே ஓட்டு வங்கியுள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது (தோராயமாக) அதனை அதிகப் படுத்திக் கொண்டு, 2019 தேர்தலில் தன்னுடைய பேர வலிமையை கூட்டிக் கொள்ள வேண்டும் என்பதே தேமுதிகவின் நிலைப்பாடாக எனக்குப் படுகிறது. தேமுதிக வாங்கும் ஒவ்வொரு ஓட்டும் அதற்கு போனஸ் தான்.
  4. பாமகவின் தன்னுடைய ஜாதிய ஓட்டுக்களில் தேமுதிக பெரிய ஒட்டையைப் போட்டுவிட்டது என்று நம்புகிறது. காரணம் பாமக எங்கெல்லாம் வலிமையாக உள்ளதோ அங்கெல்லாம் தேமுதிகவும் வலிமையாக இருக்கிறது. மேலும் அதிகபட்சமாக பாமக 5% வாக்கு வங்கியுள்ள கட்சியாக 2014 வரை தன்னைக் காட்டிக் கொண்டு வந்திருக்கிறது. 2021 தேர்தல் கருணாநதி, ஜெயலலிதா ஆகியோர் இல்லாத ஒரு களமாகத் தான் இருக்கும். அப்போது நாம் வீரிய சக்தியாக இருக்க வேண்டுமானால் இப்போதே 234 தொகுதிகளிலும் கட்சியின் சின்னத்தையாவது கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே அவர்களின் முதல் குறிக்கோள். சாதியக் கட்சி என்று தன் மீது பதிந்துள்ள கரையை அகற்ற பல சமூக மக்களுக்கு தேர்தலில் வாய்ப்புப் கொடுத்து அதனை மாற்றிக் கொள்ள முயற்சிக்கிறது. பார்ப்போம்.
  5. நாம் தமிழர் கட்சி மிகவும் விசித்திரமாக இருக்கிறது. அவர்களின் சில கொள்கைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்ள தக்க வகையிலே தான் இருக்கின்றன. அவர்களுக்கு இது முதல் தேர்தல். ஆகவே இது அவர்களுக்கு ஒரு பிரண்டிங் வாய்ப்பு. திமுக ஆரம்பித்து 17 வருடங்கள் கழித்துத் தான் ஆட்சியைப் பிடித்தது. அது போலவே இந்த தேர்தலில் இல்லாவிட்டாலும் அடுத்தடுத்த தேர்தலிலாவது தாங்களும் வெற்றி பெறுவோம் என்று நம்பும் கட்சி இது. வாழ்த்துக்கள்.

முடிவாக இத்தேர்தலில்… இரண்டு முக்கியமான நிகழ்வுகள் அரங்கேறப் போகின்றன.

ஒன்று… திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி தவிர்த்து மற்ற எல்லா கட்சிகளும் வாங்கும் வாக்குகள் எல்லாம் மாற்றத்திற்கான வாக்குகள் ஆகாது. ஆனால் அவற்றில் பெரும்பான்மையான வாக்குகள் மாற்றத்தை எதிர் நோக்கும் வாக்குகள். ஆக ஒரு வேலை வெற்றி பெறும் கூட்டணியை விட மாற்றத்தை எதிர் நோக்கும் வாக்குகள் அதிகமாக இருக்குமாயின் அது நிச்சயம் 2021-ல் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதற்கான சமிக்கையாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.

இரண்டு… பெரிதாக ஊடக விளம்பரம் கிடைக்கும் விஜயகாந்திற்கு இந்த தேர்தல் ஒரு பிரகாசமான வாய்ப்பு. இதுவரை சும்மா இருந்தவரை ஒரு ரியல் ஹிரோ ஆக்கும் வேலையை செய்யும் ஊடகங்கள், ஒரு ரீல் ஹிரோவான விஜயகாந்தை ரியல் ஹிரோவாக மாற்ற அந்த ஊடக பிம்பங்கள் உதவுமா? என்பது மிகப் பெரிய கேள்வி. அனேக மக்கள் விஜயகாந்தும், தேமுதிகவும் இந்த தேர்தலில் தோற்பார்கள் என்று தான் பேசிக் கொள்கிறார்கள். எல்லாம் அவருக்கு எதிராகத் தான் இருக்கிறது. அவரது கட்சி 10 சதவீத வாக்குகளை பெருமாயின் அதுவே மிகப் பெரிய சரித்திர நிகழ்வாகப் பார்க்கப்படும். விஜயகாந்த வாங்கும் ஒவ்வொரு வாக்குமே அதிமுக அல்லது திமுக என எதோ ஒரு கட்சியை கடுமையாக பாதிக்கப் போகிறது. விஜயகாந்த் தமிழகம் முழுவதும் புயல் வேகத்தில் சுறாவளிப் பிரச்சாரம் மேற்கொள்வதாக சொல்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் அந்தச் சுறாவளி புயல் மே-16ல் கரையைக் கடந்துவிடும். மே-19ல் அந்தப் புயலினால் ஏற்பட்ட சேத விவரம் தெரிந்து விடப் போகிறது. மக்களுக்கு அதிக சேதாரமில்லாமல் இருந்தால் சரி.

– புயலுக்கும் பின் அமைதி…