Friday, March 29, 2024
Home > கேள்விபதில் > காதலர் தினக் கொண்டாட்டங்கள் தவறா?- கேள்விபதில்-5

காதலர் தினக் கொண்டாட்டங்கள் தவறா?- கேள்விபதில்-5

கேள்வி: நாளுக்கு நாள் காதலர் தினக் கொண்டாட்டங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இது தவறா? அதேபோல் காதலர் தினக் கொண்டாட்டங்களுக்கான எதிர்ப்புகளும் வலுத்த வண்ணம் இருக்கின்றன. இது தவறா?

இது தவறா? அது தவறா? என் ஆராயும் முன் இவற்றுள் எதோ ஒன்று தான் சரியாக இருக்கும் என வழக்கமான பிம்பங்களை விட்டொழிவோம். உடனே இரண்டும் சரி என்ற முடிவிற்கும் வந்துவிடாதீர்கள். ஆழமான புரிதல் வேண்டிய இடத்தில் இருக்கிறோம். அதற்கான தேடலின் ஒரு பகுதியாகத் தான் இக்கட்டுரை இருக்கப் போகிறது. இக்கட்டுரை வெறும் பனிப்பாறை உச்சியின் விளிம்புதான். காதலர்களுக்கான தினம் என்பதனைத் தாண்டி இதில் இருக்கும் பல்வேறு நுட்பமான அரசியலையும் ஆராய வேண்டி இருக்கிறது.

உண்மையிலேயே காதலர் தினம் காதலர்களுக்கான தினமா? என்பதிலேயே பலத்த சந்தேகங்கள் எழுகின்றன. ஒருவர் ஏன் காதலர் தினத்தை கொண்டாட வேண்டும்? அதே சமயம் ஒருவர் ஏன் காதலர் தினத்தை எதிர்க்க வேண்டும்?

எனக்கு தெரிந்த பலக் காதலர்கள் காதலர் தினத்தைக் கொண்டாடுவதே கிடையாது. அவர்களிடம் ஏன் கொண்டாடவில்லை என்றுக் கேட்டால், நாங்கள் தான் தினமும் காதலில் திளைத்து ஒவ்வொரு நோடியையும் கொண்டாடுகிறோமே எங்களுக்கு எதற்கு காதலர் தினம் என்று பதில் கேள்வி தான் வருகிறது. மேலும் அவர்களின் பார்வையில் காதலர் தினம் என்பது ஒரு நினைவூட்டி. விரிவாக சொல்வதென்றால், காதலை சொன்ன நாள், காதலை எற்றுக் கொண்ட நாள், முதல் முதலில் முத்தம் கொடுத்த நாள் என இப்படி எல்லாவற்றையும் ஏதாவது தினமாக மட்டுமே நினைவில் வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நீங்கள் காதலிக்கிறீர்கள் என நினைவுப் படுத்தும் மற்றும் ஒரு நினைவூட்டியே காதலர் தினம். இது ஒரு சிலருடைய கருத்து மட்டும் தான். காதலர் தினத்திற்காக மாதக்கணக்காக யோசித்து அசத்துபவர்களையும் நான் தாண்டி வந்திருக்கிறேன். இன்னும் சிலரோ காதலர் தினத்தன்று தான் காதலை சொல்லப் போகிறேன் என்று சுற்றிக் கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். இன்னும் சிலர் இருக்கிறார்கள் அவர்கள், காதலர் தினத்தன்று சொதப்புவதற்கே காத்திருப்பார்கள்.

ஆக, காதலர் தினம் என்பது எல்லோரும் எற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாக இல்லை என்பது மட்டும் நிதர்சனம். திபாவளி, பொங்கல், ரம்ஜான் போன்று விரும்புகிறவர்கள் கொண்டாடுகிற ஒரு நிகழ்வு தான் காதலர் தினம். அப்படியான பட்சதில் அதற்கு ஏன் இவ்வளவு விளம்பரங்கள்,  சர்ச்சைகள், எதிர்ப்புகள். இவை எதுவும் காரணமில்லாமல் இல்லை. அதனை ஆராயாமல் நாம் கருத்துக் கந்தசாமியாக அரை வேக்காட்டுத்தனமாக கருத்துச் சொல்லவும், விவாதிக்கவும் பல மணி நேரம் செலவளிக்கிறோம். நமக்கு தான் அவசரம் என்பது பிறவி குணமாயிற்றே. சில மணித்துளிகள் அமைதியாக இருந்தாலே நடப்பவை எல்லாம் புரிபடும். மேலும் அவசரப்பட்டே அடிவாங்கிப் பழகிப் போய்விட்டோம். பொறுமை என்ற வார்த்தை நமது முன்னோர்களுடனே போய்விட்டதே. எல்லா நிகழ்வுகளையும் நேரம் ஒதுக்கி உள்வாங்கிக் கொண்டாலே போதும் தான். ஆனால் நமக்கு தான் வாட்ஸ்ஆப், மூகநூலில் அரட்டை அடிக்கவும், நமது நண்பர்களின் ‘நிலைமையைப்’ (Status Upadate) பார்த்து பொறாமைப் படுவதற்கும் தவிர்த்து வேறு எதற்குமே ‘டயம்’ இல்லையே.

காதலர் தினம் என்று ஒன்று ஏன் கொண்டாடப் படுகிறது என்பதற்கு பல விதமான ஆதாரமற்ற கதைகள் வலம் வந்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் அதற்கான கட்டுரையல்லவே இது. சரி இதிலிருக்கும் பொருளாதார-மத அரசியலுக்கு வருவோம்.

சில பொருளாதாரப் புள்ளிவிவரங்கள்:

  • அமெரிக்க, ஐரோப்ப, ஆஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாடுகளிலே கூட வெறும் 54% சதவித மக்கள் தான் காதலர் தினத்தைக் கொண்டாடுகிறார்கள். (கொசுறு தகவல்: அவை எல்லாமே கத்தோலிக்க கிருஸ்தவர்கள் பிரதானமாக வாழும் நாடுகள். அவையாவும் பிப்ரவரி 14ஐ காதலர் தினமாக கொண்டாடுபவர்கள். அவர்களைத் தான் நாம் பின்பற்றுகிறோம், எல்லாம் அடிமை ஆட்சியின் எச்சங்கள். இரஸ்யன் ஆர்த்தோடாக்ஸ் வகையராக்கள் எல்லோருக்கும் ஜுலை 6ஆம் தேதி தான் காதலர் தினமாம். என்ன ஒரு குழப்பம். சகிப்புத்தன்மை காவலர்களே, முதலில் எந்த நாள் காதலர் திருநாள் என்ற பிரச்சனைக்கு முடிவு சொல்லுங்களேன்.)
  • 2015 ஆம் ஆண்டு அமெரிக்க கண்டத்தில் மட்டும் இந்திய மதிப்பில் சுமார் 1 இலட்சம் கோடி அளவிற்கு பொருட்களும் பரிசுகளும் பகிரப் பட்டுள்ளன. அன்று ஒரு நாள் மட்டும் சுமார் 20 கோடி ரோஜா பூக்கள் அமெரிக்க கண்டத்தில் விற்பனையாகியுள்ளன.
  • காதலர் தினத்தன்று ஆண்கள் தான் 75% செலவு செய்கிறார்கள். பெண்கள் 25% தான். ஆண்கள் சராசரியாக 10,000 ரூபாய் செலவு செய்கிறார்கள். பெண்கள் சராசரியாக 5,000 ரூபாய் மட்டுமே செலவு செய்கிறார்கள்.
  • 85% பெண்கள் வாழ்த்து அட்டைகளைத் பிரதான பரிசாக கொடுக்கிறார்கள். ஆண்களில் 73% பூக்களைத்  தான் பிரதான பரிசாக கொடுக்கிறார்கள்.
  • 2016ஆம் ஆண்டு உலகம் முழுவதிலும் இந்திய மதிப்பில் சுமார் 2 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு காதலர் தினத்தன்று வர்த்தகம் நிகழ்ந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • ஆக, காதலர் தினம் என்பது ஒரு வணிக திருநாள் என்பதை மறந்துவிடாதீர்கள் மக்களே. அதனை பரவலாக்கும் வேலையைத்தான் மீடியாக்கள் செய்கின்றன. (விளம்பரங்கள் மூலம் காசு பார்க்கலாம்ல!). சினிமா உட்பட அனைத்து வகை மீடியாக்களும் காதலை துக்கிப் பிடிக்கக் காரணம் புகழ் மற்றும் காசு.

சில மத அரசியல் அலசல்கள்:

  • காதலர் தினம் என்பது பிரதானமாக கிருஸ்தவர்களின் புனித நாள். கிருஸ்தவம் பரவலாக இல்லாத நாடுகளில் காதலர் தினத்திற்கு முக்கியத்தும் கொடுக்கப் படுவதில்லை, இந்தியா உட்பட. இது தான் யதார்த்தம்.
  • காதலர் தினத்தை இந்துக்களும், முஸ்லிம்களும் எதிர்க்க சொல்லும் காரணம் பண்பாடு, கலாச்சாரம் என்பதைத்தான் ஆனால் இவை இரண்டுமே என்றொன்றும் மாறிக் கொண்டிருப்பது தானே. பிறகு ஏன் அவர்கள் எதிர்க்கிறார்கள். காதலர் தினத்தை எதிர்ப்பதால் கிடைக்கும் மீடியா வெளிச்சமே பிரதான காரணம். (பெரும்பானவர்கள் அதற்குத்தான் காதலர்தினத்தை எதிர்க்கிறார்கள்.) காதலர் தினத்தை எதிர்க்க எதிர்க்க அதன் பரவலும் அதிகரித்தே வருகிறது என்பது நிதர்சனம்.
  • உலகேங்கும், “ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே மதம்” என மாற்ற ஒரு கிருஸ்தவ கும்பல் உலாவிக் கொண்டிருப்பதாக ஒரு பேச்சு உள்ளது. இதுவும் காரணமில்லாமல் இல்லை, உலகம் முழுவதும் ஒரே மொழி, ஒரே மதம் என்று வந்துவிட்டால், அதன் முடிவாய் இருக்கும் சந்தை யாரும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு பெரிதாக இருக்கும். உலகின் ஆதிக்கம் ஒரு சில நிறுவனங்களின் வசம் வந்து சேரும் என்ற யதார்த்தம் இருக்கிறதே. அதற்கும் காதலர் தினத்திற்கும் என்ன சம்பந்தம் என கேட்கிறீர்களா? கொஞ்சம் மூளையை கசக்குங்கள் பதில் கிடைக்கும்.

எப்படிப்பட்ட காதலர் தினத்தை எதிர்க்க வேண்டும்?

  • மதத்தை முன்னிருத்தும் காதலர் தினம் சமூகத்திற்கு நல்லதல்ல. அதுவும் இந்தியா போன்ற நாட்டில் பிரச்சனைகளை வளர்த்துவிட அது போதுமே.
  • பணம் செலவழித்துத் தான் காதலர் தினம் கொண்டாட வேண்டும் என்றால் அது நமக்கு வேண்டாம்.
  • பொருட்களை முன்னிலைப் படுத்தித் தான் காதலர் தினம் கொண்டாட வேண்டும் என்பது மூடத்தனம். காதல் என்ற கருத்தை உணர்ச்சியை முன்னிலைப் படுத்தாத காதலர் தினம் நமக்கு தேவையில்லை.
  • ஆபாசமும், காமமும் முன்னிலைப் படுத்தும் காதலர் தினம் நமக்கு வேண்டாம்.
  • காதலைக் கொண்டாடும் தினத்தை வரவேற்போம். காதலர்களைக் கொண்டாடும் தினத்தை எதிர்ப்போம்.

எப்படிப்பட்ட காதலர் தினத்தைக் கொண்டாட வேண்டும்?

  • காதலர் தினம் என்பதை குடும்பத்துடன் கொண்டாட வேண்டும். காதலன், காதலி, நண்பர்கள், கணவன், மனைவி, குழந்தைகள், அப்பா, அம்மா, சொந்தம் பந்தம் என நம் மேல் அன்பு செலுத்தும் எல்லோருடனும் காதலர் தினத்தைக் கொண்டாடுவோமாக.

முடிவாக, காதலர் தினத்தைக் கொண்டாட விரும்புவர்கள் கொண்டாடட்டும். எதிர்க்க நினைப்பவர்கள் அறவழியில் எதிர்க்கட்டும். நீங்கள், எந்தப் பக்கமாக இருந்தாலும் காதலிக்க மட்டும் மறந்துவிடாதீர்கள். காதலர் தினத்தை விட காதல் மிக முக்கியமானது. காதலின்றி இவ்வுலகில் எதுவுமில்லை.

– பதில்களைத் தேடுவோம்…

மேலும் படிக்க:

  1. காதலர் தினத்திற்கு முன்னால்
  2. இந்தியாவில் 1991ற்கு பிறகு தான் காதலர் தினம்
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Kokila
Kokila
8 years ago

Hmm super

Kokila
Kokila
8 years ago

Yosika vaicha visyam.nijam kadhalipavargaluku indha kondatam endru thaniya edhum theva padradhula.ela nalumae konadatam dhan. Aana idha edhirkanumana .?adhum thevayanu dhan thonudhu..yosika vachadhu nejama.awesome