Thursday, April 25, 2024
Home > சிறுகதை > எனக்காக திறந்த கதவுகள்… – #சிறுகதை

எனக்காக திறந்த கதவுகள்… – #சிறுகதை

இரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தது…

நான் இன்னும் 40 படிக்கட்டுகள் இறங்க வேண்டியிருந்தது…

விமானத்திற்கு இன்னும் ஒன்றே முக்கால் மணி நேரமே இருந்தது…

இந்த இரயிலை விட்டால் அடுத்த இரயிலுக்கு இன்னும் 14 நிமிடம் காத்திருக்க வேண்டியிருந்தது…

மூச்சறக்க ஓடோடி வந்தேன்.

கதை நடந்த இடம் : சென்னை மெட்ரோ இரயில் நிலையம்.

நேரம் : ஒர் ஞாயிறு காலை 07:45 மணி

விமான நேரம் : காலை 9:30 சென்னை – மும்பை இண்டிகோ விமானம்

இனி நடந்தது…

மும்பை செல்லும் விமானத்தை பிடிப்பதற்காக சேலத்திருந்து நள்ளிரவு சேரன் விரைவு இரயிலில் சென்னை வந்துக்கொண்டிருந்தேன். இரயில் சேலத்திற்கு வரும்பொழுதே அரை மணி நேரம் தாமதமாகவே வந்தது. அன்று மழை பெய்த காரணமாக தாமதமாக வந்திருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் சேலத்திற்கு அடுத்த இரயில் நிறுத்தமான ஜோலார்பேட்டையை இரயில் குறித்த நேரத்தில் கடந்தது. ஆக இரயில் சென்னையை சரியான நேரத்தில் சென்று சேர்ந்துவிடும் என்று எண்ணி சற்றே என்னுடைய சீட்டில் படுத்து உறங்கினேன். அன்று  ஏசி 2 டயர் பெட்டியில் டிக்கெட் கிடைக்காத காரணத்தினால் ஏசி முதல் வகுப்பில் டிக்கெட் எடுத்தேன். அன்று ஏனோ தட்க்கலில் கூட பிற வகுப்புக்களில் டிக்கெட் கிடைக்கவில்லை.

காலையில் சரியான நேரத்தில் இரயில் சென்ட்ரல் இரயில் நிலையத்தை அடைந்தால் மெட்ரோவில் சென்னை விமான நிலையம் செல்லலாம், இரயில் தாமதமானால், பெரம்பூர் இரயில் நிலையத்தில் இறங்கி, புறநகர் இரயிலில் ஏறி சென்ட்ரல் மெட்ரோ அடைந்து அங்கிருந்து விமான நிலையத்திற்கு செல்லாம் அல்லது ஓலா, ஊபர் போன்ற டாக்சியில் நேராக விமான நிலையத்திற்கு செல்லலாம் என்று முடிவு செய்து, அலாரம் வைத்துவிட்டு படுத்துவிட்டேன். எல்லாம் திட்டப்படி நடக்கும் என்று நினைத்தேன்.

“போர் கண்ட சிங்கம்… வலி கொண்ட நெஞ்சம்… உடைந்தாலும் உனக்காக உயிர் வாழ்கிறேன்…” என கேட்டது.

“போர் கண்ட சிங்கம்… வலி கொண்ட நெஞ்சம்… உடைந்தாலும் உனக்காக உயிர் வாழ்கிறேன்…” என மீண்டும் கேட்டது.

அப்பா அழைத்திருந்தார். அவருக்கு என வைத்த ரிங் டோன். சட்டென்று எழுந்து பார்த்தேன். மணி காலை 6:20. நான் அலாரம் வைத்ததோ சரியாக 6:00 மணிக்கு. அலாரம் அடித்தது கூட தெரியாமல் ஆழ்ந்து உறங்கிவிட்டேன். போனை எடுத்தேன்.

“சொல்லுங்கப்பா”

“எங்க இருக்க?”

கண்ணை நன்றாக விரித்துப் பார்த்தேன். இரயில் பெரம்பூர் இரயில் நிலையத்திற்குள் நுழைந்திருந்தது.

“பெரம்பூர்-ல நிக்க போகுதுப்பா”

“என்ன செய்ய போற?”

“இங்கயே இறங்கி டாக்சியில் போலாமா-னு யோசிக்கிறேன்”

“சரி ஏர்போர்ட் போயிட்டு கூப்புடு”

“சரிங்கப்பா” என்று போனை வைத்துவிட்டேன்.

போனில் பேசிக்கொண்டிருந்த போதே இரயில் நடைமேடையில் நின்றிருந்தது, நான் மேல் சீட்டிலிருந்து கீழே இறங்கி என் உடைமைகளை எடுத்துக் கொண்டிருக்கும் போதே இரயில் மெல்ல நகர ஆரம்பித்தது. எப்படியும் ஐந்து நிமிடமாவது நிற்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் ஒரே நிமிடத்தில் இரயில் கிளம்பியது. என்னால் பெரம்பூரில் இறங்க முடியவில்லை.

என் கைகடிகாரத்தைப் பார்த்தேன். மணி 6.22 என காட்டியது. இன்னும் சென்ட்ரல் 10-15 நிமிடம் தானே, பேசின் பிரிட்ஜ் இரயில் சந்திப்பில் இரயில் தாமதமானாலும், 7:00 மணிக்குள் சென்ட்ரலை இரயில் சென்றடையும் என நம்பினேன். எப்படியும் மெட்ரோ பிடித்து சரியான நேரத்தில் விமான நிலையம் சென்றடையலாம் என்று நினைத்தேன். மூன்று முறை இரயில் நின்று நின்று சென்ட்ரல் இரயில் நிலையத்தில் நிறைவாக நின்ற போழுது மணி 7:31. நான் எதிர்பார்த்தைவிட அரை மணி நேரம் தாமதம். கனமாக மழை பெய்ய ஆரம்பித்தது. இனி டாக்சியில் சென்றால் மழையில் மாட்டிக்கொள்வோம் என்று என் உள் மனம் சொல்லியது.

பேசின் பிரிட்ஜ் இரயில் நிலையத்தில் இப்படி நடைமேடை கிடைக்காமல் இரயில் நின்றதால், எத்தனை எத்தனை பேர் இரயிலையோ, விமானத்தையோ அல்லது சிலர் வாழ்க்கையையோ தொலைத்திருக்கலாம் என எண்ணினேன். அதில் நானும் ஒருவனாக இருக்க கூடாது என்று எனக்கு தெரிந்த எல்லா கடவுளையும் வேண்டிக்கொண்டேன். கடவுளுக்கு எப்போதும் போல, வேறு வேலை இருந்திருக்கும், என்னுடைய வேண்டுதலுக்கு கடவுள்களில் ஒருவர் கூட செவி சாய்க்கவில்லை.

ஓடினேன் ஓடினேன் ஓடினேன்.

சென்னை மெட்ரோவிலிருந்து விமான நிலையம் வரை டிக்கெட் எடுத்துக்கொண்டு இரண்டாம் நடைமேடையை நோக்கி ஓடினேன். சரியாம 7:45 மணிக்கு இரயில் கிளம்பிவிடும் என்று ஒலிபெருக்கியில் அறிவித்துக் கொண்டிருந்தார்கள். மணி 7:44 என்று காட்டியது என் கடிகாரம். இன்னும் 40 படிகட்டுகள் இருந்தது. லிப்டில் சென்றால் அடுத்த இரயிலுக்குத் தான் செல்ல முடியும். நகரும் படிகட்டும் மெல்ல தான் நகரும் என்பதால் என் உடைமைகளை தூக்கிக் கொண்டு படிகளைத் தாண்டினேன். சரியாக இரயிலுக்குள் காலடி வைக்க சில அடிகள் மட்டுமே இருக்கும் பொழுது நடைமேடையில் நின்றுக்கொண்டிருந்த இரயிலின் தானியங்கிக் கதவு மூடியது.

விமானத்திற்கு இன்னும் ஒன்றேமுக்கால் மணி நேரமே மட்டுமே இருக்கிறதே, அடுத்த இரயிலும் வர இன்னும் 14 நிமிடங்கள் காத்திருக்க வேண்டுமே, ஒருகால் விமானத்தை விட்டுவிடுவேனோ என்ற அச்சமும் ஒரு நொடி வந்து போனது. என் உடைமைகளை கீழே வைத்துவிட்டு ஐயோ என்பதனை போல மேலே பார்த்தேன்.

மூடிய கதவுகள் மெல்ல திறந்தது. என்னால் நம்பமுடியவில்லை.

ஆம்.

மெட்ரோ இரயிலின் மூடிய கதவுகள் எனக்காக திறந்தது. சட்டென்று உடைமைகளை எடுத்துக்கொண்டு இரயிலுக்குள் ஓடினேன். மீண்டும் மெல்ல கதவை மூடிக்கொண்டு இரயில் விமான நிலையத்தை நோக்கி கிளம்பியது.

ஆனால், கடும் மழைக் காரணமாக, சீரான மின்சாரம் கிடைக்காமல், ஒரே நிமிடத்தில் இரயில் பாதியிலேயே நின்றது. அப்போது தான் அதற்கு முதல் நாள் இரயில் இரண்டு மணி நேரமாக மின்சார பிரச்சனைக் காரணமாக பாதியில் நின்ற செய்தியை செய்தித்தாளில் படித்தேன். மீண்டும் விமானத்தை பிடித்த மாதிரி தான் என்று நினைத்துக்கொண்டேன். நல்ல வேளையாக இரண்டு நிமிடத்தில் இரயில் கிளம்பியது. சரியாக 8:15 மணிக்கு இரயில் விமான நிலையத்தை வந்தடைந்தது.

இன்னும் 15 நிமிடங்களில் என் பயண உடைமைகளை சமர்பிக்க வேண்டும் இல்லையேல் விமானத்தை பிடிக்க முடியாது. சரியாக 8.29 மணிக்கு அதாவது ஒரு நிமிடம் முன்பாக என் உடைமையை சமர்பித்தேன். அங்கே இருந்த பணிப் பெண் சொன்னாள், “செம டைமிங்” என்று.

சோதனை சாவடிக்கு சென்று என் முதுகுப்பையை வைத்தேன். ஆனால் அதிலிருந்த மடிக்கணியை எடுத்து தனியாக ஒரு தட்டில் வைக்க வேண்டும் அதனை மறந்துவிட்டேன். சோதனை செய்துக்கொண்டிருந்த அதிகாரி அவரின் மேலதிகாரியிடன் என் பையை கொடுத்து விசாரிக்க சொல்லிவிட்டார். அங்க என் முதுகுப்பையை முழுவதுமாக சோதனை செய்வதற்குள், விமானத்தில் பயணிகள் ஏற ஆரம்பித்துவிட்டார்கள். விசாரனை செய்துக்கொண்டிருந்த அதிகாரி என் விமான பயண தகவல்களைக் கேட்டுவிட்டு, விரைவாக சோதனையை முடித்து அனுப்பினார். எப்படியோ சரியான நேரத்தில் விமானத்தில் ஏறினேன். என்னுடைய இருக்கை எண்ணான 23Bயில் சென்று அமர்ந்துக்கொண்டேன். ஏறிய சில நிமிடங்களில் விமானத்தின் கதவுகள் மூடப்பட்டது. விமானம் புறப்பட தயாரானது. மழையும் கனமாக பெய்ய ஆரம்பித்தது.

அப்போது வரை அந்தப் பயணம் என் வாழ்க்கையே மாற்றப்போகிற பயணம் என்று எனக்கு தெரியவில்லை.

“இன்ஜின்-ல் இப்படி தான் புகை வருமா?” என்று கவலையான குரலில் ஒரு பெண்ணின் குரல் கேட்டது.

நான் விமான இன்ஜினை எட்டிப் பார்த்தேன்.

“மழைபெய்யறதுனால இன்ஜின் சூடாகும் போது தண்ணீ ஆவி ஆவுறது நமக்கு புகையா தெரியுது” என்றேன்.

“நான் நிறையவாட்டி பிளைட்டுல போயீ இருக்கேன். ஆனா இப்ப தான் மழ பெய்யற அப்ப போறேன்”

“ஏங்க நான் இப்ப தான் இரண்டாவது வாட்டி போறேன்”

“பய படுத்தாதீங்க”

“அப்படி எல்லாம் இல்லங்க, சும்மா கேட்டேன்” என்றாள்.

பேசினாள் பேசினாள் பேசினாள். பேசிக்கொண்டே இருந்தாள். மென்பொருள் நிறுவனத்தில் ஏதோ ஒரு வேலைக்கு ஆட்கள் எடுக்கும் பிரிவில் இருப்பதாக சொன்னாள்.

அரை மணி நேரமாக ஓடுபாதையில் நின்று கொண்டிருந்த விமானம் மெல்ல புறப்பட்டது. எங்களுக்குள்ளான உரையாடலும் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்தது.

அவள், இன்று என் மனைவி திவ்யா-வாக.

அன்று மெட்ரோவில் எனக்காக திறந்த கதவு, எனக்கு கொடுத்தது, புது வாழ்வை.

உங்களுக்கான கதவு எப்போது வேண்டுமானாலும் திறக்கலாம்.

அதுவரை காத்திருங்கள். நிச்சயமாக ஒரு கதவு திறக்கும்.

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Sowtham
Sowtham
1 year ago

🙂 for everyone the right door always remains waiting..

நமக்கான கதவுகள் தாழ் திறவாமல் காத்திருக்கும்..
தடை பல கடந்து சென்று நின்றாலே நம்மை ஆட்கொள்ளும்..!