Tuesday, April 23, 2024
Home > சிறுகதை > பிரா-பளம் (Bra-blom) – #சிறுகதை

பிரா-பளம் (Bra-blom) – #சிறுகதை

இன்று(01-08-21) ஞாயிற்றுகிழமை காலை 10.04 மணி. வழக்கம்போல கறி எடுத்துவிட்டு வந்து அமர்ந்திருந்தேன். என் மொபைலில் ஒரு அறிவிப்பு காட்டியது. (அட தங்கீலிஷ் மக்கா அது Mobile Notification தான்) என்னவாக இருக்கும் என்று பார்த்தேன். ஏதோ இன்று நண்பர்கள் தினமாம். அதற்காக எல்லோரும் வாழ்த்துச்செய்தி அனுப்பிக்கொண்டிருந்தார்கள். அப்படி வாட்ஸ்ஆப்பில் வந்த ஒரு செய்திக்கான அறிவிப்பை தான் நான் பார்த்தேன். வீட்டில் அம்மா சமையல் செய்து முடிக்க இன்னும் நேரமாகும் என்பதால், யூடியூப்பில் ஒரு காணொளியை பார்க்கலாம் என்று அந்த செயலியை இயக்கினேன். என்ன பார்ப்பது என்று தேடிக்கொண்டிருக்கும் போது புரூட் இந்தியா என்றொரு சேனல் கண்ணில் தென்பட்டது. அதில் ஏதும் ஒரு சுவரஸ்யமான காணொளி ஏதும் இருக்கிறதா? என்று தேடிக் கொண்டிருக்கையில் ஒரு மராத்திய நடிகையின் காணொளி கண்ணில் பட்டது. உடனே பார்த்தேன். சுமார் மூன்று நிமிடங்கள் ஓடக்கூடிய அந்தக் காணொளியைப் பார்த்து முடித்தவுடன், எனக்கு என்னுடைய பிரேக்கப் கதை நினைவிற்கு வந்தது. அந்தக் கதையே இதோ.

*******

அனிகா. என் முன்னாள் காதலி. நாங்கள் சில மாதங்கள் இணைந்து வாழ்ந்தோம் (லிவ்விங் டூகெதர்). ஆணும் பெண்ணும் ஒன்றாக இருக்கும்பொழுது சண்டைகள் வருவதென்பது சர்வ சாதாரணம். பிரக்கப் ஆகும் அளவிற்கு போன இந்த சண்டை ஆரம்பித்ததே கொஞ்சம் ஏடாகூடமான தருணத்தில் தான். இணைந்து வாழ்வதே, இருவருக்குள்ளும் ஒத்துப்போகுமா என்பதை தெரிந்துக்கொள்வதற்கே. ஏனோ என்னுடைய கதை பிரிவில் முடிந்துவிட்டது.

என்னவளுக்கு அவளின் உடல் பற்றி அவ்வப்போது சந்தேகம் தொற்றிக்கொள்ளும்.

“நான் அழகாய் இருக்கிறேனா?”

“என் முகம் கறுத்துப்போச்சா?”

“என் மாரு கொஞ்சம் பெருசா இருக்கா?”

“அவ மாரு, என்னுடயதவிட பெருசா இருக்கே”

“அவ இடுப்பு என்னமா இருக்கு”

“ஏன் என் இடுப்பு அந்த மாதிரியில்ல”

“அவ டிரஸ்ஸு செமயா இருக்கே”

“அவ என்னா கலரு”

அவள் மட்டுமில்லை. அவள் தோழிகளும், என்னுடன் பழகும் தோழியரும் கூட இப்படி தான் இருக்கிறார்கள். ஏன் இந்த பெண்கள் எப்போதும் நாம் ஆடவர்களை கவர்கிறோமா? என்பதில் இத்தனை அக்கறை எடுத்துக்கொள்கிறார்கள் என்று எனக்கு எப்போதும் புரிவதில்லை.

உதட்டுச்சாயம் எதற்கு?

கண் இமையை வார வாரம் சரி செய்வது எதற்கு?

வண்ண வண்ண தொடுகள் எதற்கு?

வகை வகையான பொட்டுக்கள் எதற்கு?

விதவிதமான வளையல்கள் எதற்கு?

எந்த ஆடவனும் தன் எதிர்பாலினத்தைப் பார்க்கும் பொழுது இதையெல்லாம் கவனிப்பதாக தெரிவதில்லை. பெரும்பாலான ஆடவர்கள் பெண்ணின் மாரில் இருந்து தான் பெண்ணையே பார்க்க துவங்குகிறார்கள். அதிலும் கண்ணை மட்டும் பார்த்து பேசும் ஆடவர்கள் என்னும் இனம் அழியும் தருவாயில் இருக்கிறார்கள்.

அவளின் உதட்டுச்சாயம் பிடித்திருக்கிறது அதனால், நான் அவளுடன் பேசினேன். அவளின் வண்ணமையமான தோடுகள் பிடித்திருக்கிறது, அதனால், நான் அவளுடன் பழகினேன். அவளின் விதவிதமான வளையல்கல் பிடித்திருக்கிறது, அதனால், நான் அவளுடன் கலவிக்கொண்டேன் என்று இங்கே எவன் சொல்கிறான். உண்மையில் இங்கே பெண்ணின் கொங்கைகளுக்கே ஈர்ப்பு அதிகம். எந்த ஆடவனாலும் இதை மறுதலிக்க முடியுமா? பெண் ஆடவனை ஈர்க்க வேண்டும் என்ற மூடத்தனம் சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது. நாகரீகம் பெருகிவிட்ட காலத்தில் பெண் மட்டும் ஏன் ஆடவனை ஈர்க்க இவ்வளவு பாடுபட வேண்டும்?

“நான் உன்னைவிட்டு போயிட மாட்டேன். என்னைய இம்பிரஸ் செய்ய ஏன் நீ இவ்வளவு மெனக்கிடற” என்று கேட்டுவிட்டேன். அது தான் பிரச்சனையின் ஆரம்பப்புள்ளி.

பிரச்சனை பெரிதாக ஆரம்பித்தது, மெல்ல மெல்ல வளர்ந்து, எப்போதும் போல் கலவியில் முடிந்தது. ஏன் எப்போதும் சண்டைக்குப் பிறகு நடக்கும் கலவியில் இருவரும் உச்ச சுகத்தை அடைக்கிறோம்? ஒருவேளை அப்படி ஏதும் உச்ச சுகம் அடையாவிட்டால், இருவரும் பிரிந்துவிடுவோம் என்ற் பயம் இருவருக்கும் தொற்றிக்கொள்ளுமோ என்னவோ. அது மட்டும் எனக்கு எப்போதும் புரிவதேயில்லை. அதிலும், கலவிக்குப் பின் கட்டிப்பிடித்துக்கொண்டே பேசும் போது கிடைக்கும் முழுமை வேறேங்கும் கிடைப்பதில்லை. அப்படி ஒரு நாள் பேசிக்கொண்டிருக்கையில் நான் யதார்தமாக சொன்னேன்.

இப்பொதொல்லாம், நோ-பிரா என்ற பெயரில் இயக்கம் எல்லாம் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. அதுபோல், நீயும் ஏன் வீட்டில் மட்டுமாவது மார்புக்கச்சை அணியாமல் இருந்து பழக்கிகொள்ளலாமே என்று கேட்டுவிட்டேன். கூடவே இன்னும் சில கேள்விகளும் கேட்டேன்.

“நான் அப்படி தான்”

“இப்ப யாரு உன்ன என்ன சொன்ன?”

“நீ ஒரு சாக்கட… மை காட்… நீயும் இப்படி தானா கோபி…”

“அனிகா. இப்ப நான் என்ன பண்ணீட்டேன்?”

“மை பாடி மை ரைட்”

“இப்ப யாருயில்லன்னா”

“நான் எப்படி இருந்தா உனக்கொன்ன?

“மன்னிச்சுக்கோ” என்று வெள்ளைக் கொடி காட்டிவிட்டேன், அன்று அத்தோடு சண்டை முடிந்தது.

பிரச்சனை பெரிதாகப் போனது. இக்கால பெண்கள் நவீன நவ நாகரீக ஆடை உடுத்துவது, துப்பட்டா இல்லாமல் ஆடை அணிவது, ஜீன்ஸ், டீ-சர்ட் அணிவதும், கால் மேல் கால் போட்டு உட்காருவதும் தான் பெண் சுதந்திரம் என்று எண்ணிக் கொள்கிறார்களோ என்று எனக்கு அச்சமாக இருக்கிறது.

பிறகு ஒரு நாள், மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது. மீண்டும் சண்டை வளர்ந்தது.

சண்டையின் நடுவே மீண்டும் பிரா பற்றி பேச்சு வந்தது.

அன்று நான் கேட்ட கேள்விக்கு அவள் சொன்னாள், “என் தோழியர் நான் மார்புக்கச்சை அணியாமல் போனால், என்னை கேலிப் பேசுவார்கள்” என்று.

“யார் என்ன பேசினால் என்ன? இது சுத்த பிற்போக்கு தனமாக இருக்கிறது” என்றேன்.

“என் மார்புகள் ஆடும், சில காலங்களில் என் மார்புகள் தொங்கிப் போகும்” என்றாள்.

“அப்படியெல்லாம் ஆகாது”

“உனக்கு எப்படி தெரியும்? அவ சொல்லியிருப்பா”

“எவ?”

“அவ தான் என் சக்காளத்தி, உன் முன்னாள் காதலி, திவ்யா”

“தேவையில்லாம இப்ப அவள எதுக்கு இழுக்குற”

இப்படியாய், பிரச்சனை பெரியதாக போய், பிரேக்கப்பில் முடிந்தது தனிக்கதை.

ஆனால், மார்ப்புக்கச்சை அணிவதும் அணிய வேண்டாம் என்று முடிவெடுப்பதும் ஒரு பெண்ணின் தனிப்பட்ட முடிவு. அதில் தலையிட எவருக்கும் உரிமையில்லை, அது இன்னொரு பெண்ணே ஆனாலும் சரி. இது தான் என் வாதமாக இருந்தது. யார் என்ன சொன்னாலும், ஒரு பெண் தன் முடிவை தானே எடுப்பது தானே பெண் சுதந்திரம்.

இங்கே ஒரு பெண், திருமணத்திற்கு முன்பே கூட ஒரு ஆடவனுடன் உடலையை பகிர்ந்துக்கொள்ளும் முடிவைக் கூட எடுத்துவிட முடிகிறது. ஆனால், வாழ்க்கை முழுவதும் எவனுடன் படுக்கையையும், உடலையும் பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்ற திருமண இணையை தேர்வு செய்யும் உரிமை, எத்தனை பெண்களுக்கு இங்கே கிடைத்திருக்கிறது. இன்னும், உடை அணிவது, திருமணம் செய்துக்கொள்வது, குழந்தை பெற்றுக்கொள்வது போன்ற அடிப்படையான விசயங்களில் பெண்களால் பெண்ணுக்கு கொடுக்கப்படும் அழுத்தம் என்பது சொல்லி மாளாது. அந்த அழுத்ததிலிருந்து பெண் மீளமுடியாதது.

இங்கே பத்தினியாய் இருப்பதை விட, பத்தினியாய் இருப்பதாக காட்டிக்கொள்வதற்கே அதிகம் மெனகெட வேண்டியிருக்கிறது பெண்களால், அதுவும் உடன் இருக்கும் பெண்களுக்கு.

********

அந்த மராட்டிய நடிகை சப்பாத்தி சுடும் காணொளியை பதிவிட்டிருக்கிறார். அதில் அவர், மார்புக்கச்சை அணியவில்லை. அதனை சுட்டிக்காட்டி, அந்த மராட்டிய நடிகைக்கு, ஒரு பெண், நீங்க ஏன் மார்புக்கச்சை அணியவில்லை, உங்கள் மார்புகள், சப்பாத்தி செய்யும் பொழுது அதிகமாக ஆடுகிறது, நீங்கள் மார்புக்கச்சை அணிந்திருந்தால், அவ்வாறு ஆடாதே என்று பதிவிட்டிருக்கிறார். அதற்கு அந்த நடிகை சொன்ன பதிலும், அந்த பதில் இணையத்தில் ஏற்படுத்திய தாக்கமும் ஒரு துவக்கம் தான்.

இன்னும் எதிர்பார்க்கிறேன் தோழிகளே…!