Saturday, October 1, 2022
Home > ஒண்ணுமில்ல > ஒண்ணுமில்ல… பகுதி 42

ஒண்ணுமில்ல… பகுதி 42

நாற்பத்தி ஒன்றாவது பகுதியின் லிங்க்…

இன்னும் சில நிமிடங்களில் நான் பயணிக்கும் விமானம் கோவை விமான நிலையத்தில் தரையிறங்க போகிறது. என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறார்களோ என்று தெரியவில்லை. என் நண்பர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்பது மட்டும் நிச்சயம். பல நாட்களாக திட்டமிட்ட ஒரு காரியம் நடக்காமல் போனால் கோபம் வருவது இயல்புதானே.

நான் விமானத்தை தவறவிட்டுவிட்டேன், எப்போது மற்றுவிமானம் பிடித்து கோவை வருவேன் என்று தெரியாது. ஆதனால், நீங்கள் வீட்டிற்குச் செல்லுங்கள் என்று சொன்ன போதும் மூவரும் மறுத்துவிட்டார்கள். அதிலும் தயா சொன்னான், “சார். எப்பவேனா வாங்க. அது வர நாங்க இங்கயே இருக்கோம்.” அவனுக்கு பயந்தே இவ்வளவு விலைக் கொடுத்து விமான டிக்கெட் எடுத்து கோவைக்குத் திரும்புகிறேன். அதுவும் என்றென்றும் மறக்க முடியாத நினைவுகளுடன். நான் மும்பை சென்றபொழுது இருந்த மனநிலையைவிட இப்போது இருக்கும் மனநிலை கொண்டாட்டமானது.

ஆனால் இதையெல்லாம் என் நண்பர்களிடம் சொல்வதா? வேண்டாமா? இந்த குழப்பத்திற்கு என்னிடம் விடையேயில்லை.

“மும்பைக்குப் போன, போன வேலய மட்டும் பாத்துட்டு வர்றது தானே” என்பான் தயா.

“அப்ப நீ வேல விசயமா போகல” என்பான் கோபி.

“நானும் கூட வந்திருக்கலாம்” என்பான் குமார்.

இவர்களை எப்படி சமாளிக்கப்போகிறேன் என்று யோசித்துக்கொண்டிருக்கும் பொழுதே விமானம் கோவையில் தரையிரங்கியது. அவ்வளவு தான் இன்னும் சில நிமிடங்களில் கேள்விக்கனைகளால் என்னை துளைக்கப்போகிறார்கள். ஆத்தா இவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும் படி என் குலதெய்வத்தை வேண்டிக்கொண்டேன்.

விமானத்திலிருந்து இறங்கி என் பைகளை எடுத்துக்கொண்டு வெளியேறினேன். வரவேற்பு  பகுதியில் மூவரும் எனக்காக காத்திருந்தார்கள். அவர்கள் அருகே சென்றேன். கோ ஏர் விமானத்தில் 12 மணிக்கு மும்பையிலிருந்து கிளம்பி, மதியம் 1.45 மணிக்கு கோவையில் தரையிரங்கினேன். பைகளை எடுத்துக்கொண்டு வெளியே வருவதற்குள் மணி 2.15 ஆகிவிட்டது.

காலையில் ஏதும் சாப்பிடாததால் கடுமையாக பசித்தது. கோவத்திலிருக்கும் இவர்களிடம் பசிக்கிறது என்று சொன்னால் இன்னும் கோவப்படுவார்கள் என்பதனால் ஏதும் சொல்லவில்லை. பைகளை எடுத்துக்கொண்டு பார்க்கிங்கில் இருக்கும் வண்டிக்குச் சென்றோம். அதுவரை இவர்கள் அமைதியாக இருந்தார்கள். என்ன செய்ய காத்திருக்கிறார்களோ என்று நினைப்பதற்குள் முதுகில் கோபி ஓங்கில் அடித்தான். அப்படியே என்னை குனிய வைத்து கும்மாங்குத்து குத்திவிட்டார்கள்.

“டேய் போதும் டா”

“அடேய் வலிக்குது டா”

“அப்படி என்ன டா பண்ணீட்டேன்”

“வேணாம் டா”

“பாவம் டா நானு”

“விடுங்க டா”

என எப்படி எப்படியோ கதறியும் அவர்கள் ஆசை தீரும் வரை அடித்து என்னை துவம்சம் செய்தார்கள். பிறகு அவர்களே களைத்திப் போய் என்னை விட்டுவிட்டார்கள்.

“இப்படியாடா அடிப்பீங்க”

“அடிச்சீங்கல… இப்ப பசிக்குது. ஒழுங்கு மரியாதையா ஹோட்டல் கண்ணப்பாவுக்கு வண்டிய விடுங்க”

கண்ணப்பா ஹோட்டல் எங்களுக்கு பிடித்தமான அசைவ உணவகம். எப்போது கோவை வந்தாலும் வேலைகள் எல்லாம் முடிந்தபிறகு கண்ணப்பாவில் ஒரு பிடி பிடிக்காமல் ஊருக்குத் திரும்புவதில்லை.

கண்ணப்பாவில் இடம் கிடைத்து உட்காருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. எல்லோரும் அவரவருக்கு பிடித்ததை ஆடர் சொல்லிவிட்டு என்னைப் பார்த்தார்கள்.

எனக்கு புரிந்துவிட்டது.

நான் ஏன் விமானத்தை தவறவிட்டேன் என்ற கதையை கேட்கிறார்கள் என்பதே அந்த பார்வைகளின் அர்த்தம்.

சொல்லித்தான் ஆக வேண்டும். என்னால் இன்னும் உண்மையை சொல்வதா? அல்லது சில பகுதிகளை மறத்துச் சொல்வதா? என்ற முடிவுக்கு வரமுடியவில்லை.

“டேய். இப்ப சொல்றையா இல்லயா” என்றான் குமார்.

“இருடா. சாப்பாடு வரட்டும். பசிக்குதுல்ல. என்னா அடி” என்றேன்.

“ரொம்ப பண்ணாத மூடிக்கிட்டு சொல்லுடா மண்டையா” இது தயா.

நடந்ததை சொல்ல துவங்கினேன்.

“நேத்து நினைச்சதவிட வேல சீக்கிரம முடிஞ்சிடிச்சி. தாஸ ராத்திரி 10.30க்கு என் லக்கேஞ்லாம் எடுத்துட்டு வர்ற சொல்லிட்டு” என ஆரம்பிக்கும் போதே குமார் குறுக்கிட்டான்.

“இத தான் நேத்தே போன்-ல சொல்லிட்டயே. ஏன் பிளைட்ட விட்ட அத முதல்ல சொல்லு” என்றான்.

திவ்யாவை ரயிலில் பார்தது முதல் அடி வாங்கியது வரை நடந்த சம்பவங்களை மறைத்துவிடலாம் என்று தோன்றியது.

“பப்-ல ஒரு பொண்ண பாத்தேன்”

“ஓஓஓஒ” என்றார்கள் கோரஸாக.

“தமிழ் பொண்ணுதான்.”

“ஹும்கும். அட போடா” என்றார்கள்.

“சரி நீ சொல்லு”

“அவ கூட பேசிக்கிட்டு இருந்ததுல நேரம் போனதே தெரியல”

“அவ கிளம்பறேனு சொன்ன, நானும் அவ கூடவே கிளம்பினேன், மணி பார்த்தேன், 11.30 ஆகிடுச்சு, ஏர்போர்ட் போறதுக்குள்ள பிளைட் போயிடுச்சு”

“அவ்வளவு தானா?”

“நாங்க கூட நீ ஏதோ பெரிசா செஞ்சிருப்பனு நினைச்சோம்”

சாப்பிட்டு கிளம்பினோம். வீடு வந்து சேரும் வரை என்னை வைத்து செய்தார்கள். நான் அவஞ்சர்ஸ் படம் பார்க்கவில்லை என்று என்னை சீண்டிக்கொண்டேயிருந்தார்கள். நானோ திவ்யாவுடன் படம் பார்த்துவிட்டேன் என்று அவர்களிடம் சொல்லவா முடிவும்? அவர்கள் திவ்யா யார் என்று கேட்பார்கள். எனக்கு தேவையா? அதனால் அமைதியாக இருந்துவிட்டேன். ஊருக்குச் சென்றவுடன், நேரம் அமையும் பொழுது குமாரிடம் மட்டும் சொல்லலாம் என்று நினைத்துக்கொண்டேன்.

(இந்த கோபி, தயா, குமாருகிட்ட எல்லாம் அப்புறமா சொல்லலாம். இவ்வளவு நேரமா இந்த கதையை படிக்கிறோமே, எங்ககிட்ட சொல்லு என்று நீங்கள் சொல்வது எனக்கு கேட்கிறது. வாசகர் விருப்பத்திற்கேற்க அந்தக் கதை இதோ)

நாற்பத்திமூன்றாவது பகுதியின் லிங்க்… விரைவில்

எழுத்து – பட்டிக்காடு