Friday, April 19, 2024
Home > சிறுகதை > பொண்ணு பாக்க போன கத – #சிறுகதை

பொண்ணு பாக்க போன கத – #சிறுகதை

(இந்தக் கதை கற்பனை என்று நினைத்தால் கற்பனை, உண்மை என நினைத்தால் உண்மை, முடிவை வாசகாராகிய தங்களிடமே விட்டுவிடுகிறேன்)

எனக்கும் காதலுக்கும் செட்டே ஆகாது. அவ்வளவு ஏன் எனக்கும் பெண்களுக்குமே செட் ஆகாது. என் வரலாறு அப்படி. என்ன காரணமே தெரியவில்லை.

ஏழு வருடம் என்னை காதலித்தவள், போடா பட்டிக்காடு என்று சொல்லிவிட்டு ஐடி வேலை தான் முக்கியம் என்று எனக்கும் எங்காதலுக்கும் டாடா காட்டிவிட்டுச் சென்றுவிட்டாள். அதிலிருந்து மீண்டு வரவே எனக்கு சில காலம் பிடித்தது.

ஒரு வழியாக அதிலிருந்து மீண்டு வந்து வீட்டில் பார்த்த பெண்ணை ஆசை ஆசையாய் மணமுடித்தேன். ஊரே கூடி வாழ்த்தியருளியது. ஆயிரம் கனவுகளுடன் எல்லோரையும் போலவும் மணவாழ்விற்குள் நுழைந்தேன். ஆனால் கட்டிக்கொண்டவள், போடா நீயும், உன் ஊரும், எனக்கு படிப்பு தான் முக்கியமாக்கும் என்று என்னை விவாகரத்து செய்துவிட்டு வெளிநாடு சென்றுவிட்டாள் பட்டம் படிக்க. மீண்டும் இடிந்துப் போனேன். இம்முறை காயம் பெரிது, அவமானம் பெரிது, இழப்பும் பெரிது. எப்படியோ மீண்டு வந்தேன்.

மீண்டும் என் மனதிற்குள் காதல் பூத்தது. நான்கு வருடமாய் என்னுடன் பயணித்தாள் ஒருத்தி, எனக்கு அவளை ஏனோ பிடித்திருந்தது. சரி அவளிடம் என்னை திருமணம் செய்துக்கொள்கிறாயா என்று கேட்டேன். என் நேரம், அவள்  “நேற்று கேட்டிருந்தால் கூட சரியென்று சொல்லியிருப்பேன். ஆனால் இன்று காலையில் தான் எனக்கு நிச்சயம் முடிந்தது. இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணம்” என்று அதிர்ச்சி கொடுத்தாள்.

நான் ஆசப்பாட்ட பொண்ணு நீ, எங்கிருந்தாலும் நல்லா இருக்கனும்மா நீ. கண்டிப்பா உன் கல்யாணத்துக்கு மட்டும் என்னைய கூப்பிடாத. உன்ன என் பொண்டாட்டியா பாக்கனும்னு ஆசபட்டேன். இன்னொருத்தன் பொண்டாட்டியா பாக்குற தைரியம் எனக்கில்ல். வாழ்க பல்லாண்டு. வாழ்க பெரும் செல்வச் செழிப் போடு” என்று மனதார அவளை வாழ்த்தி விட்டு வீடு வந்து சேர்ந்தேன்.

அவளை மறக்கவே முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். கூடவே கொரோனாவும் நோயின் பிடியில் இந்த உலகமும் வந்து சேர்ந்தது. எட்டு மணி நவரச நாயகன், நம்ம பிரதமர் மோடி, பொது ஊரடங்கை வேறு போட்டுவிட்டார். தனிமை வாட்டி வதைத்தது. அவளின் நினைவும் என்னைவிட்டு அழியாமல் இருந்தது.

இது தான் எனக்கும் பெண்களுக்கும் இருக்கும் ஹிஸ்டிரி, வரலாறு எல்லாம். எனக்கு எப்போதும்,

தேடிப்போனாலும் கிடைக்காது…

தேடி வந்தாலும் நிலைக்காது…

என்னுடைய தவிப்பை என்னுடைய நண்பன் இரும்புக்கடை இளங்கோவனிடம் மட்டுமே நான் பகிர்ந்துக்கொண்டேன்.

நான் புலம்பிய சில சாம்பிள்கள் இதோ,

“இளா. என் அனு இருக்காளே… வேற லெவல் டா. வேல தா முக்கியம்-னு காதல தூக்கிப் போட்டுட்டு. என்னா பொண்ணு மச்சா அவ”

“நான் இல்லன்னா சொத்துருவேன்-னு சொல்லுவாளே. இப்ப நான் இருக்கனா இல்லயானுக் கூட கண்டுக்க மாட்டேங்குறா. என்னா பொண்ணு மச்சி இவ. ச்சா. எழு வருசம். எல்லாம் நாசம். எப்படி எல்லாம் வாழனும்-னு பெருசா பெருசா கனவுல்லாம் கண்டோம் தெரியுமா? ஆட போட.”

“கல்யாணமே வேணாம்-னு சொல்லிட்டு இருந்தேன். அவள பாத்த ஒடனே புடிச்சிருச்சி. அப்படியே எனக்கு ஏத்த பொண்ணு. ரொம்ப போல்ட். ரொம்ப நல்ல கேரக்டர் தெரியுமா.”

“இந்த உலகத்துலயே ரொம்பவும் பாவப்பட்டவன் காதலிச்சவள கல்யாணம் பண்ண முடியாதவன் தான் மச்சா”

“அவள கல்யாணம் பண்ணின அப்புறம் தான் காதலிக்கவே ஆரம்பிச்சேன் தெரியுமா?”

“அவ என் கூட நாலு வருசம் இருந்தப்ப அவ மேல எந்த இதுவும் தோனல. ஆனா திடீர்னு ஒரு நான் அவ கண்ண பாத்தேன். அவன் கண்ணுல என்னயேவே பாத்தேன். என்னைக் கவர்ந்த கள்ளச்சி அவ”

“தினமும் அவள பாத்த அப்ப அவ மேல காதல் கீதல்னு ஏதுமில்ல. ஆனா அவ கல்யாணம் பண்ணிட்டு போனப்புறம், அவள பாக்க ஏங்காத நாளில்லை. தெரியுமா. அவள ரொம்பவும் மிஸ் பண்ணுறேன் இளா”

“அது எப்படி டா நான் காதல சொல்ற அன்னைக்கே அவளுக்கு நிச்சயம் நடக்கும். இந்தக் கடவுள் ஏண்டா இப்படி பண்றாரு. ஒரே வெறுப்பா இருக்குடா. போடா.”

இளா என்று அவனை அழைப்பேன். அவனுடனே பெரும்பாலான கொரோனா கால ஊரடங்கு நேரத்தை கழித்தேன். நான் என் காதலிகளை நினைத்து நினைத்து புலம்புவததை தினமும் மணிக்கணக்கில் கேட்பதே அவனுக்கு வேலை. அவன் காதலில் வெல்ல முடியாமல் போன சமயத்தில் நான் அவனுக்கு அறுதலாக இருந்தேன் என்ற ஒரே காரணத்திறக்காக அவன் என் எல்லா புலம்பல்களையும் கேட்க வேண்டியிருந்தது.

அவன் நல்லவன் தான். எனக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று நினைக்கிறவன் தான். அதனால் அவன் ஒரு காரியம் செய்தான். எனக்கு நல்லது நடக்க வேண்டியே அந்தக் காரியம் செய்ய முனைந்தான். ஆனால் அது எங்கள் இருவருக்குமே பெரும் நகைப்புக்குரிய சம்பவமாக மாறிப்போனது எங்கள் துர்திஷ்டம். முக்கியமாக என் துர்திஷ்டம். அந்த சம்பத்தையே கதையாய் நீங்கள் இப்போது படிக்கப் போகிறீர்கள்.

(அப்ப… நீ இன்னு கத சொல்லவே ஆரம்பிக்கலையா…? என்று நீங்கள் நினைப்பது எனக்குக் கேட்கிறது. இனியும் தாமதிக்காமல் இதோ கதைக்குள் வந்துவிட்டேன்…)