Friday, April 19, 2024
Home > ஒண்ணுமில்ல > ஒண்ணுமில்ல… பகுதி 39

ஒண்ணுமில்ல… பகுதி 39

முப்பத்தி எட்டாவது பகுதியின் லிங்க்…

இதையெல்லாம் யோசித்துக்கொண்டிருந்த போதே, அந்தேரி போலிஸ் ஸ்டேசனுக்கு வந்து சேர்ந்திருந்தேன், அந்த இன்ஸ்பெக்டருடன்.

ஏதோ கொலைக் குற்றவாளியை அழைத்துக்கொண்டுப் போவதைப் போல் என்னை உள்ளே அழைத்துச் சென்றனர். யாரையோ திருப்திப் படுத்தவே இந்த இன்ஸ்பெக்டர் இவ்வாறெல்லாம் செய்கிறான் என்று எனக்கு இத்தனை வருட அனுபவத்தில் எளிதாகப் புரிந்தது. இந்த இன்ஸ்பெக்டருக்குப் பின்னால் இருக்கிறது யார் என்று முதலில் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு யாரிடம் உதவி கேட்கலாம் என்று என் மனம் சிந்திக்க ஆரம்பித்தது.

அப்போது தான், அருண் மேத்தா ஐ.பி.எஸ். நியாபகத்திற்கு வந்தான். அருண் என் குழும நண்பன் அர்ஜுன் மேத்தாவின் மூத்த மகன். இப்போது மும்பையில் ஏதோ ஒரு சர்கிளில் அஸிஸ்டண்ட் கமிஷனராக இருக்கிறான். ஐ.பி.எஸ். தேர்வில் வெற்று பெற்று, பயிற்சியில் தேறி, வேலைக்குச் சேரும் முன் என்னிடம் வந்து ஆசி வாங்கிக் கொண்டு சென்றான். நான் என் போனை எடுத்து, அர்ஜுன் மேத்தாவிற்கு போன் அடித்தேன்.

அவரிடன் சுருக்கமாக, என் பேத்தியின் அலுவல் சம்பந்தமாக நான் அந்தேரி போலிஸ் ஸ்டேசனில் இருக்கிறேன். என்ன கேஸ் என்று தெரியவில்லை, என் பேத்தி சம்பந்தப்பட்டதாக இருப்பதால், அவர் மகனிடம் சொல்லி என்னவென்று விசாரித்து சொல்லுமாறு கேட்டுக்கொண்டேன். என் மேல் மிகுந்த நன்மதிப்புக் கொண்ட அர்ஜுன் மேத்தா, உடனே தன் மகனுடன் அந்தேரி போலிஸ் ஸ்டேஷனுக்கு எவ்வளவு விரைவாக வர முடியுமோ அவ்வளவு விரைவாக வருவதாக சொன்னார்.

நான் அவருடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, ஒரு காவலர் வந்து என் போனைப் பிடிங்கி இன்ஸ்பெக்டரின் மேசை மேல் வைத்தார். மணி எட்டைத் தாண்டியிருந்தது. இன்னும் சோபனாவிடமிருந்து, தகவல் ஏதுமில்லை. தேவியும் இன்னும் திருப்பிக் கூப்பிடவில்லை. என் போனை வேறு பிடிங்கிக் கொண்டார்கள். எனக்கு கவலையாக இருந்தது. என் ராணியம்மாவிற்கு நான் செய்துக் கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற முடியாமல் போய் விடுமோ என்று நான் கவலைக் கொண்டேன்.

நேரம் ஒன்பது, பத்து, பதினொன்று என்று விரைவாக ஓடிக்கொண்டேயிருந்தது. மணி பதினொன்றைத் தாண்டியப் பிறகு தேவியின் போனில் இருந்து என் போனுக்கு போன் வர ஆரம்பித்தது. அவளுக்கென்று தனியொரு ரிங் டோன் இருந்ததால், தேவி தான் போனில் அழைக்கிறாள் என்று எனக்கு தீர்க்கமாகத் தெரிந்தது. ஐந்தாறு முறை அடித்தபின் ஒரு போலிஸ் காவலன் போன எடுத்து, “அந்தேரி போலிஸ் ஸ்டேசம் மே ஆவோ” என்று சொல்லிவிட்டு போனை ஆப் செய்துவிட்டான் அந்த காவலன்.

என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும், ஒரு கை பார்த்துவிடுவோம். என்று நம்பிக்கையாக இருந்தேன்.

அர்ஜுன் மேத்தா என்னுடன் பேப்பர் போடும் வாழ்க்கையை ஆரம்பித்தவர். என் நெருங்கிய நண்பர். அக்காலங்களில் அரசியல் பிரமுகர்கள் எங்களைத் தேடி வர முக்கியக் காரணமுள்ளது. நாங்கள் பேப்பர் போடுவதற்காக எல்லா தெருக்களுக்கும் சென்று வருவோம். எந்த தெருவில் யார் அதிகம் இருக்கிறார்கள், எந்த தெரு பாதுக்காப்பானது, முக்கியமாக எந்தத் தெருவில் பிரச்சனைகள் நிறைந்தது, ஒளிந்துக்கொள்ள வசதியான தெரு என எல்லாம் எங்கள் இருவருக்கும் அத்துப்படி. எனக்குப் பிறகு எங்கள் குழுவை வழி நடத்தியது அர்ஜுன் மேத்தா தான். ஆனால், அவன் மகன் ஐ.பி.எஸ். ஆனப் பிறகு எங்கள் குழுமம் முழுவதுமாக சிதைந்துவிட்டது. மேலும், மும்பையும் முழுவதுமாக மாறிவிட்டது. அடாவடிகள் குறைந்துவிட்டன. ரவுடிசங்களும் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்துவிட்டது.

இன்றைக்கு முக்கியப் பதவிகளில் இருக்கும் தலைவர்கள் பலருக்கு, அவர்களுடைய கஷ்ட காலங்களில் நாங்கள் அடைக்கலம் கொடுத்திருக்கிறோம். அதற்குப் பிரதிபலனாக எங்கள் இருவருக்குமே எம்.எல்.ஏ சீட் கொடுப்பதாக இரு பெறும் கட்சிதலைவர்களும் சொன்னார்கள். நாங்கள் மறுத்துவிட்டோம். ஒரு முறை, முக்கியக் கட்சித் தலைவரின் மகனுக்கு ஆபத்துக் காலத்தில் அடைக்கலம் கொடுத்ததற்கு கைமாறாக ஒரு எம்.எல்.ஏ சீட் எனக்குத் தருவதாகச் சொன்னார். வேண்டாம், ஐயா என்று எவ்வளவு மறுத்தும், மலாட் பகுதியின் சீட் என் பொறுப்பு என்று சொல்லிவிட்டார்.

கடைசியில் எங்கள் குழுமத்தில், இந்த மண்ணின் மைந்தனான, சுனில் என்கிற சுனில் குப்தாவிற்குக் கொடுத்தோம். இன்று வரை இந்த மலாட் பகுதியின் எம்.எல்.ஏ சுனில் குப்தா தான். கடந்த முறை அந்தக் கட்சி ஆட்சியில் இருந்தவரை அவன் அமைச்சராகவும் பதவி வகித்தான். தப்புத்தப்பாக தமிழில் பேசி என்னிடம் திட்டுவாங்குவான். தேவி அவனை மாமா என்று தான் கூப்பிடுவாள். அவள் வயதிற்கு வந்தப் போது, அவன் தான் அவளுக்கு குடிசைக் கட்டினான். அப்போதே அவன் எம்.எல்.ஏ தான். ஊரையே திரட்டிக் கொண்டுவந்து தமிழ் முறைப்படி சடங்குகளையும், தெரட்டியையும் முன் நின்று நடத்தினான். தேவி சொல்லி நான் ஏதும் கேட்கவில்லை என்றால், இப்போதுக் கூட இவனிடம் தான் புகார் வாசிப்பாள். தேவியைப் பொறுத்த வரை, என்னைத் தவிர்த்து, சுனில் தான் அவளுக்கு இருக்கும் ஒரே சொந்தம்.

தேவிக்கு, அவளின் அப்பா-அம்மா சொத்திற்காக மட்டும் சண்டைப் போடுவதும், இவளை இருவருமே கண்டுக்கொள்ளாமல் இருப்பதும், சுத்தமாகப் பிடிக்கவில்லை. என் மகனின் திருமணப் போட்டோ ஒன்றை வீட்டில் மாட்டி வைத்திருப்பேன். கோபம் வந்தால், தேவி உடைப்பது அதனைத்தான். அவள் ஒவ்வொரு முறை உடைக்கும் பொழுதும், நான் மீண்டும் அதே இடத்தில் அதே போட்டோவை வைப்பேன். வீணாகச் செலவுச் செய்கிறேன் என்று ராணிக்கூட என்னை அடிக்கடி திட்டிக்கொண்டிருப்பாள்.

எங்கோ ஆரம்பித்த நினைப்பு, எங்கெங்கோ பயணிக்கிறதே என்று யோசித்துக்கொண்டிருந்த வேளையில் ஒருவன் இன்ஸ்பெக்டர் அறையிலே வந்தமர்ந்தான்..

நாற்பதாவது பகுதியின் லிங்க்…

– மீண்டும் சந்திப்போம் நாளை இரவு 08.00 மணிக்கு…

எழுத்து – பட்டிக்காடு