Saturday, October 1, 2022
Home > ஒண்ணுமில்ல > ஒண்ணுமில்ல… பகுதி 38

ஒண்ணுமில்ல… பகுதி 38

முப்பத்தி எழாவது பகுதியின் லிங்க்…

அந்த இன்ஸ்பெக்டர் என்னருகில் வந்து, “சார், உங்களையும் விசாரிக்க வேண்டும். நீங்க இப்ப எங்கக் கூட ஸ்டேசன் வரைக்கும் வரனும்” என்றான்.

“உடை மாற்றிக்கொண்டு வரலாமா? இல்லை அப்படியே வர வேண்டுமா?” என்று நக்கலாகக் கேட்டேன்.

கடுப்புடன், “சரி. போய் மாத்திக்கிட்டு வாங்க” என்றான்.

நான் மீண்டும் மீண்டும் தேவிக்கு போன் அடித்தேன். அவள் போனை எடுக்கவில்லை. இவள் இந்த நேரத்தில் இப்படி போன் எடுக்காமல் இருக்கிறாளே என்று கொஞ்சம் கோபம் வந்தது. சரி, தேவியின் தோழி சோபனாவிடம் இந்த தான் அந்தேரி போலிஸ் ஸ்டேசனுக்கு விசாரனைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளேன் என்று தேவியிடன் தகவல் கொடுத்து அவளை அங்கு அழைத்துக்கொண்டு வந்துவிடும்மா என்று சொன்னேன்.

அவர்களின் ஜீப்பில் ஏறினேன்.

எனக்கு பழைய நியாபகங்கள் வந்தது. நான் பார்க்காத போலிஸா? இல்லை நான் பார்க்காத பிரச்சனைகளா? பாபர் மசூதி இடிப்பு, மும்பை குண்டு வெடிப்பு, வெளி மாநிலத்தவர் வெளியேற வேண்டும் என்று ஏற்பட்ட கலவரம், மும்பை மாரத்தியர்கே என்று கிளம்பிய கலவரம் என மும்பை மாநகரம் கொழுந்துவிட்டு எரிந்தப் பொழுதொல்லாம், என்னையும், என்னுடன் இருப்பவர்களையும் விசாரனை என்ற பெயரில் பல நாட்களுக்கு போலிஸார் இம்சித்துள்ளனர்.

போலிஸார் எங்களை இம்சித்ததற்கு ஒரு முக்கியக் காரணமுள்ளது. அந்தக் காலத்தில் நானும், என்னுடன் இருப்பவர்களும் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரணாக நின்றோம். எங்கள் மலாட் பகுதியில் கலவரம் பெரிய அளவில் வெடிக்காமல் பார்த்துக்கொண்டோம். மேலும் பிரச்சனையான சமயங்களில் பல அரசியல் தலைவர்களும் எங்களிடம் அடைக்கலம் தேடி வந்தனர். கட்சிப் பாகுபாடின்றி எங்களைத் தேடி பல அரசியல் தலைவர்கள் வந்துள்ளனர். எனக்கும் அவர்களின் கொள்கைகள் மீது சில சமயங்களில் விமர்சனங்கள் இருப்பினும், அவர்களின் அரசியல் வேறு, அவர்களின் உண்மை முகமும், பழக்கவழக்கமும் வேறு என்பதனைக் கூட கண்கூட கண்டிருக்கிறேன்.

அதனால் தான், நான் திராவிட பற்றாளனாக இருந்தும், எந்தக் கட்சியிலும் சேரவில்லை. மலாட் பகுதியில் எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், எங்களிடம் தான் வருவார்கள். எங்கள் குழுவில் நான் தான் மூத்தவன். அதுவும் தமிழன். என்னுடைய திராவிட கொள்கைகள் காரணமாகவும், வயதின் காரணாகவும், விருப்பு வெறுப்பின்றி செயல்படும் பாணியாலும் எங்கள் குழுமத்தில் நான் எடுக்கும் முக்கிய முடிவுகளில் யாரும் தலையிட மாட்டார்கள்.

நான் எப்போதும் எல்லோருடைய கருத்துகளுக்கும் செவி சாய்ப்பேன். எல்லோரையும் சமமாக பாவித்து, அவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதத்தில் நடந்துக்கொள்வேன். அதனால் தான் மலாட் பகுதியில் இன்னும் மரியாதையுடன் என்னால் இன்று வரை வாழ முடிகிறது. எங்களைக் கட்டப் பஞ்சாயத்து கோஷ்டி என்று முத்திரைக் குத்தி பலமுறை பொய் வழக்குகளில் எங்களை சிக்க வைக்க போலிஸாரும், எதிர் கோஷ்டிகளும், சில அரசியல்வாதிகளும் எவ்வளவோ முயன்றிருக்கிறார்கள். ஆனால் எல்லோர் முகத்திலும் கரியைப் பூசிவிட்டு பீனீக்ஸ் பறவைப் போல மீண்டு வந்திருக்கிறோம்.

என் மனைவிக்கு கேன்சர் என்று தெரிந்தவுடன், பொது வேலைகளில் ஈடுபடுவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டேன். என் மனைவி உடல் நிலை மோசமாக, மோசமாக, என் பேத்தியை கவனிக்கும் பொறுப்பும் என்னையே வந்துச் சேர்ந்தது. அப்போதும் என் மகனை அழைத்து பேசிப் பார்த்தேன், அவன் என் பேச்சையே கேட்பதாக தெரியவில்லை. முதலில் காதலித்து ஒரு தமிழ் பெண்ணைத் திருமணம் செய்துக்கொண்டவன், குழந்தைப் பிறந்த சில காலங்களில் மனைவியை பிரிந்தான். இருவரும் குழந்தையை வளர்க்க மறுத்திவிட்டதால், என் மனைவியின் வற்புறுத்தலின் காரணமாக தேவியை நாங்களே வளர்க்க முடிவு செய்தோம்.

தேவி வயதிற்கு வந்த சில மாதங்களில், என் மனைவிக்கு கேன்சர் உறுதி செய்யப்பட்டது. இன்னும் அதிகபட்சம் ஆறு மாதம் தான் என்றார்கள் மருத்துவர்கள். ஆனால், என்னுடைய கவனிப்பிலும், தேவியின் அனுசரிப்பிலும் என் மனைவி எட்டு ஆண்டுகள் வாழ்ந்தாள். அந்த எட்டு ஆண்டுகளில் நான் பொது காரியங்களில் தலையிடுவதை பெறுமளவு தவிர்த்துவிட்டேன். என்னுடன் இருந்த எல்லோரும் அப்படியே விலக ஆரம்பித்தனர். நானும் கண்டுக்கொள்ளவில்லை. அவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவது எனக்குப் பெருமையாகத் தான் இருந்தது. அவர்களே எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வுக்கான ஆரம்பித்தனர். என்னுடைய தேவையும் அவர்களுக்கு இல்லாமல் போனது.

ராணியம்மா, என் மனைவியின் பெயர். ராணி போல வாழ்ந்திருக்க வேண்டியவள். கேன்சர் நோயால் துடிதுடித்து, கடுமையான வலியை எதிர்க்கொண்டு என்னைவிட்டு மறைந்தாள். அவளின் கடைசி ஆசை தேவிக்கு நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க வேண்டும் என்பதே. சாகும் முன் என்னிடம் சத்தியம் வாங்கிக் கொண்டாள். நானும் தேவிக்கு நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக்கொடுப்பேன் என்று சத்தியம் செய்துக்கொடுத்தேன். என் மனைவி என் மடியிலேயே உயிரைவிட்டாள். அருகில் தேவி ராணியம்மாவைக் கட்டியணைத்து பாட்டி பாட்டி எழுந்திரு பாட்டி என்று அழுதது என் நினைவிலேயே நிற்கிறது. இதனை எல்லாம் நினைத்து என் கண்கள் கலங்கியிருந்தது.

எவ்வளவு தைரியமான ஆணாக இருந்தாலும், எவராலும் தன் மனைவியின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாது. என்னாலும் தான்.

இதையெல்லாம் யோசித்துக்கொண்டிருந்த போதே, அந்தேரி போலிஸ் ஸ்டேசனுக்கு வந்து சேர்ந்திருந்தேன், அந்த இன்ஸ்பெக்டருடன்.

முப்பத்தி ஒன்பதாவது பகுதியின் லிங்க்…

– மீண்டும் சந்திப்போம் நாளை இரவு 08.00 மணிக்கு…

எழுத்து – பட்டிக்காடு