Saturday, April 20, 2024
Home > ஒண்ணுமில்ல > ஒண்ணுமில்ல… பகுதி 34

ஒண்ணுமில்ல… பகுதி 34

முப்பத்தி மூன்றாவது பகுதியின் லிங்க்…

“அந்தேரி போலிஸ் ஸ்டேசம் மே ஆவோ” என்று ஒரு ஆண் குரல் கேட்டது. என்னவென்று கேட்பதற்குள் போனை கட் செய்துவிட்டான் அந்த ஆசாமி.

மீண்டும் தாத்தாவின் எண்ணிற்குப் போன் அடித்தப் பொழுது போன் ஸ்விட் ஆஃப் என்று வந்தது.

சோபனாவைப் பார்த்தேன். யார் போனில் பேசியிருப்பார்கள். ஒருவேளை போலிஸாராக இருக்குமோ? இல்லை வேறு யாராவதாக இருக்குமோ? எத்றகாக அந்தேரி போலிஸ் ஸ்டேசனுக்கு வரச் சொல்கிறார்கள்?

“அத தான் டி நானும் சொல்ல வந்தேன். தாத்தா அந்தேரி போலிஸ் ஸ்டேசனில் இருக்கிறாராம்” என்றாள் பாவமாக லஸியைக் குடித்துக்கொண்டே. வந்த விசயத்தை ஒழுங்காகச் சொல்லாமல் என்னை திடுக்கிடச் செய்தவளைப் பார்த்து எனக்கு நியாயமாக கோபம் தான் வர வேண்டும்.

ஆனால், சோபனாவின் உதட்டிற்கு மேலேயிருந்த லஸி மீசையைப் பார்த்தவுடம், இந்த களபேரத்திலும் எனக்கு சிரிப்பு தான் வந்தது.

“சரி வா போலிஸ் ஸ்டேசன் போகலாம்” என்றேன் அவளைப் பார்த்து சிரித்துக்கொண்டே. ஒலா புக் செய்து அதில் பயணித்தோம்.

அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று உள்மனம் கணக்குப் போட்டது.

என் கல்லூரியில் நெருங்கிய நண்பனான சசிகுமாரின் அப்பா, வக்கீல் சுரேந்தர் அவர்கள் சட்டென்று என் நியாபகத்திற்கு வந்தார். உடனே அவருக்குப் போன் அடித்தேன். இன்னும் அரைமணி நேரத்திற்குள் தனது ஜீனியரை அங்கு அனுப்பி வைப்பதாகச் சொன்னார். கொஞ்சம் நம்பிக்கைப் பிறந்தது. இருந்தாலும் என் மனம் திருப்தியாயில்லை.

அடுத்து எனக்கு நினைவிற்கு வந்தது, தாத்தாவின் பால்ய நண்பரும், மலாட் தொகுதியின் இந்நாள் எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான சுனில் குப்தா அவர்கள் என் நியாபகத்திற்கு வந்தார். நான் மாமா என்று அவரை மட்டும் தான் அழைப்பேன். அவருக்கும் தமிழ் ஒரளவிற்குத் தான் தெரியும் என்றாலும், எங்கள் வீட்டிற்கு வந்தால், விடாமல் தமிழில் தான் பேசுவார். அதிலிருக்கும் தவறுகளைச் சுட்டிக்காட்டி தாத்தா அவரை கிண்டலடிப்பதை அவர் மடியில் உட்கார்திருந்தே நான் பல முறை ரசித்திருக்கிறேன்.

அவருக்கும் போன் அடித்தேன். தானே இன்னும் சில நேரத்தில் அந்தேரி காவல் நிலையத்திற்கு வந்துவிடுகிறேன் என்றார்.

எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று தைரியம் பிறந்தது.

ஆனால் ஒரு கேள்விக்கும் மட்டும் எனக்கு விடையே கிடைக்கவில்லை.

எதற்காக தாத்தாவை போலிஸ் பிடித்துச்சென்றிருக்கும்? என்று என் மனம் தவியாய் தவித்தது. என் அப்பாவும், அம்மாவும் ஏதோனும் கேஸ் கொடுத்திருப்பார்களோ என்று நினைத்தேன்.

பாட்டி நன்றாக இருக்கும் வரை, தாத்தா, குப்தா மாமாவுடன் நிறைய பொதுப் பிரச்சனைகளில் தலையிட்டு இருக்கிறார். பாட்டிக்கு உடல் நிலை மோசமான பிறகு, தாத்தா எந்தப் பிரச்சனையிலும் தலையிட்டு நான் பார்த்ததில்லை. ஒரு வேளை பழைய பகை ஏதோனும் தாத்தாவைத் தேடி வந்திருக்குமோ?

என் மனம் குரங்கு மாதிரி இங்கும் அங்கும் அலைப்பாய்ந்துக் கொண்டேயிருந்தது. என்னவாக இருக்கும் என என் சிந்தனை முழுவதும் அதிலேயே இருந்தது.

“எதுக்கு டீ தாத்தாவ போலிஸ் புடிச்சிருக்கு” என்று சோபனா கேட்டாள்.

“தெரியலயே டி”

“இரு. இன்னும் கொஞ்ச நேரத்துல போலிஸ் ஸ்டேசனுக்கு போயிடுவோம். நேரிலயே போய் என்ன பிரச்சனைனு பாத்துரலாம்”

மும்பை டிரப்பிக்கில் சிக்கி சின்னாபின்னமாகி அந்தேரி நோக்கி ஒலா வண்டியில் ஊர்ந்து சென்றுக் கொண்டிருந்தோம். எப்போதும் கால் மணி நேரத்தில் கடக்கும் இந்தப் பகுதியை முக்கால் மணி நேரமாகியும் எங்களால் கடக்க முடியவில்லை.

இவ்வளவு நேரமும் தாத்தாவின் போனுக்கு நான் அழைத்துக்கொண்டேயிருந்தேன். போன் ஸ்விட்ச் ஆஃப் என்று மட்டுமே பதில் வந்தது.

அந்தேரி காவல் நிலையத்தை அடையும் முன் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. தாத்தாவைக் கைது செய்வதாக இருந்தாலும், மலாட் போலிஸ் தானே கைது செய்திருக்க முடியும்? அந்தேரியில் காவல் நிலையம் வரைக்கும் என்ன வேலையிருக்கிறது. எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. அப்பா அம்மா போலிஸில் ஏதேனும் கேஸ் கொடுத்திருந்தாலும், அதுவும் அந்தேரி பகுதியில் வராதே? அப்படியானால் தாத்தாவை அவர்கள் தொந்தரவு செய்யவில்லை. பிறகு யாராக இருக்கும்?

கடந்த 24 மணி நேரத்தில் என் வாழ்க்கையில் மட்டும் ஏன் இவ்வளவு திருப்பங்கள், இவ்வளவு அலைச்சல்கள் என நினைத்துக்கொண்டிருந்த பொழுதே அந்தேரி காவல் நிலையத்தை அடைந்திருந்தோம்.

முப்பத்தி ஐந்தாவது பகுதியின் லிங்க்…

– மீண்டும் சந்திப்போம் நாளை இரவு 08.00 மணிக்கு…

எழுத்து – பட்டிக்காடு