Thursday, April 18, 2024
Home > ஒண்ணுமில்ல > ஒண்ணுமில்ல… பகுதி 30

ஒண்ணுமில்ல… பகுதி 30

இருபத்திஒன்பதாவது பகுதியின் லிங்க்…

மணி பத்தை நெருங்கையில் தாஸ் போன் அடித்தார், “சார். வந்துட்டேன்” என்றார்.

நான் அந்த டீக்கடையை அடையாளம் சொல்லி அங்கே வந்து என்னை அழைத்துக்கொள்ளுமாறு கேட்டுகொண்டேன்.

தாஸ் என்னை பிக்கப் செய்ய வரும் வரை இன்றைக்கு நான் செல்லும் இடங்களைப் பற்றி அவரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். அதற்குள் தாஸ் வந்துச் சேர்ந்தார்.

வந்தவர், ராமசாமி ஐயா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். ஐயாவும், தாஸின் குடும்பத்தைப் பற்றி நலம் விசாரித்தார்.

“நல்ல பையன் நம்ம தாஸு. தைரியமா போங்க தம்பி. எல்லாத்தையும் அவன் பார்த்துப்பான்.” என்றார் என்னிடம்.

“கையில, தலையில அடிப்பட்டிருக்கு, கொஞ்சம் ஜாக்கிரதையா குட்டிக்கிட்டு போகனும் தாஸ். நம்ம கெஸ்ட்.” என்றார் தாஸிடம்.

இந்த தாஸிற்கு எப்படி ராமசாமி ஐயாவை தெரியும். ஐயாவிற்கு எப்படி தாஸின் குடும்ப விவரங்கள் வரை தெரிந்திருக்கிறது என்று எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது.

நான் வண்டி ஏறும் வரை தாஸிடம் ஏதும் கேட்டுக்கொள்ளவில்லை.

வண்டி, மும்பையின் போக்குவரத்து நெரிசலில் மெதுவாக ஊர்ந்துச் சென்றது.

“சார். நீங்க ராமசாமி ஐயாவோட கெஸ்டுனு முன்னாடியே சொல்லியிருக்கலாம்-ல” என்றார் தாஸ்.

எப்படி ஆரம்பிப்பது என்று குழம்பி இருந்த எனக்கு தாஸே அந்த விசயத்தை ஆரம்பித்தது எளிதாக இருந்தது. இங்க வந்து தான் ராமசாமி ஐயா எனக்குப் பழக்கம், அவரும் கொங்கு பகுதியை சேர்ந்தவர் என்பதால் என் மேல் அவர் சற்று பாசமாக இருக்கிறார் என்றேன்.

“ராமசாமி ஐயா எவ்வளவு பெரிய ஆளு தெரியுமா?” என்று அவரின் வாழ்க்கை வரலாற்றை சொல்ல ஆரம்பித்தான்.

தாஸ், சொன்னதைக் கேட்டு எனக்கு சிரிப்பு, சிரிப்பாக வந்தது. நாயகன் படத்தையும், தலைவா படத்தையும் கொஞ்சம் சேர்த்து, இன்னும் கொஞ்சம் கற்பனையுடன், இரத்தம் தெறிப்பில்லாமல், ஒரு கதைச் சொன்னார்.

சிரிப்பை அடக்கிக் கொண்டேன். அதற்கு மேல் ராமசாமி ஐயா பற்றி நானும் ஏதும் கேட்கவில்லை, தாஸும் ஏதும் சொல்லவில்லை.

அதற்குப் பிறகு, இன்றைக்குப் பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றியும், அங்கே சந்திக்கப்போகும் ஆட்களையும் பற்றி தாஸிடம் விசாரித்துக்கொண்டேன். மேலும், வெள்ளிக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை பார்க்கப்போகும் இடங்களைப் பற்றி அவரிடம் கேட்டுத் தெரிந்துக்கொண்டேன். அதனை குறித்து வைத்துக்கொண்டேன்.

திங்கள் இரவு சூரத் செல்ல வேண்டும் என்றும், வியாழன் அன்று விடியற்காலைத் தான் மீண்டும் மும்பை திரும்புவோம் என்றார். அதற்காக டிக்கெட்டும் எடுத்து வைத்துவிட்டதாக சொன்னார்.

குமார் சார் தன்னிடம் சொல்லிய எல்லா கம்பெனிகளுக்கும் தான் அழைத்துச்செல்லப் போவதாகவும் என்னிடம் சொன்னார். அவர் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டேன்.

எனக்கு என்னவோ, தொழில் நிமித்தமாக மும்பை வந்த மாதிரியே தெரியவில்லை. மும்பையை சுற்றிப்பார்க்கவே வந்ததைப் போல இருந்தது. மும்பையில் என்னை மாதிரி சிறு நகரத்து ஆட்கள் பார்த்து ஆச்சரியப்படுமளவிற்கு நிறைய பார்க்க இடங்கள் இருந்தது.

மும்பை என்னை வசீகரித்தது. அதன் மேல் நான் காதல் கொண்டேன் என்று தான் சொல்ல வேண்டும்.

***************************

அலுவல் சம்பந்தமாக அலைந்ததில் ஒரு வாரம் போனதே தெரியவில்லை. வியாழன் விடியற்காலையில் தான் சூரத்தில் இருந்து மீண்டும் மும்பை வந்துச் சேர்ந்தோம்.

“நல்லா தூங்கி எழுந்திரிங்க சார். நாம இன்னும் மலாட் பகுதியில் இரண்டு கம்பெனிக்குப் போகனும். நீங்க எழுந்துட்டு போன் போடுங்க. நான் அரை மணி நேரத்துல வந்துடறேன் சார்” என்று என் ஓட்டல் அறையில் என்னை விட்டுவிட்டு, என்னிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

***************************

வியாழக்கிழமை நாங்கள் எதிர்பார்த்ததைவிட சீக்கிரமே வேலை முடிந்தது. எனக்கு நள்ளிரவு 11.50க்குத் தான் மீண்டும் கோவைக்கு பிளைட். அதுவரை ஏர்போட் அருகில் இருக்கும் அந்தேரியில் இருக்கும் ஏதாவது ஒரு பப்பிற்கு செல்லலாம் என்று தோன்றியது.

என் லக்கேஜை எடுத்துக்கொண்டு தாஸை 10.30 மணிக்கு ஏர்போர்டிற்கு வரச்சொல்லிவிட்டு, நான் அந்தேரிக்கு ஆட்டோ ஏறினேன். அங்கே இருந்த ஒரு பிரபல பப்பிற்குள் நுழைந்தேன்.

– மீண்டும் சந்திப்போம் நாளை இரவு 08.00 மணிக்கு…

எழுத்து – பட்டிக்காடு