Thursday, April 25, 2024
Home > ஒண்ணுமில்ல > ஒண்ணுமில்ல… பகுதி 28

ஒண்ணுமில்ல… பகுதி 28

இருபத்திஎழாவது பகுதியின் லிங்க்…

தேவியின் நினைவிலே அன்றைய இரவு கழிந்ததில் என்னால் காலையில் எழ முடியவில்லை. மருந்துகளின் வீரியம் குறைந்து எனக்கு சற்றே வலி தெரிய ஆரம்பித்தது. சோம்பலாக எழுந்து மொபலைத் தேடினேன். வழக்கம்போல சார்ஜ் இல்லாமல் இருந்தது. சார்ஜரை எடுத்து சார்ஜ் போட்டுவிட்டு, முகம் கழுவி, காலைக்கடனை முடித்துவிட்டு, பல் துலக்கி, குளித்து தயாராகி இன்று தாஸுடன் என்று பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியலை எடுத்து சரிப் பார்த்துக்கொண்டேன். தாஸ் பத்து மணிக்கு என்னை வந்து அழைத்துக்கொள்வதாக நேற்று இரவே சொல்லிவிட்டுச் சென்றிருந்தார்.

சரியான தூக்கமில்லாதது என் முகத்தைப் பார்த்தவுடன் தெரிந்துக்கொள்ளலாம். முகத்தில் அவ்வளவு தூக்க கலக்கம். இரவு குமாருடன் பேசிவிட்டு தாமதமாகத் தான் அந்த சிக்கன் ரைஸை உண்டேன். அதனால், இன்று காலையில் எனக்கு பெரிதாக பசியில்லை. இருந்தாலும் மாத்திரை சாப்பிட வேண்டுமே, அதனால், ஒரு டீ குடித்துவிட்டு வரலாம் என்று தோன்றியது. டீ குடிக்கக் கிளம்பிய தருணத்தில் ராமசாமி ஐயா நியாபகம் வந்தது. அவரை இந்த நிலையில் போய் பார்க்கலாமா என்று சற்றே யோசித்தேன். தலையில் கட்டு, இடது கையில் மாவுக் கட்டு என்று இருக்கும் கோலத்தில் அவரைப் பார்க்க தயக்கமாக இருந்தது.

அவரைப் பார்க்க வேண்டாம் என்று முடிவு செய்து, அந்த ஈரானி சாய் கிடைக்கும் கடைக்குச் சென்றேன். பாலாடையுடன் ஈரானி சாய் நன்றாக இருக்கும், அடுத்த முறை முயற்சித்துப் பார்க்கச் சொல்லி ராமசாமி ஐயா சொல்லியிருந்தார்.

அங்கே இருக்கும் டீ மாஸ்டரிடம் திக்கித் திணறி, பாலாடையுடன் ஒரு ஈரானி சாய் வேண்டும் என்றேன். டீ போட்டு அந்த பாலாடையை எடுத்து குவளையில் அவர் போடும் விதமே ஒருவித கலை நயத்துடன் இருந்தது. குவளையை அந்த டீ மாஸ்டர் என்னிடம் நீட்டியப் பொழுது அதனை ஏதோ கோவில் பிரசாதம் போல நினைத்து வாங்கிக் கொண்டேன். வாங்கியதும் முகர்ந்துப் பார்த்தேன். அட அட என்ன மனம் இந்த ஈரானி சாய். ஒவ்வொரு துளியாக ரசித்து ரசித்து அந்த ஈரானி சாயைக் குடித்தேன். அமிர்தம் எப்படியிருக்கும் என்று நான் சுவைத்துப் பார்த்ததில்லை. ஆனால என்னைப் பொறுத்த வரை, எனக்கு இந்த ஈரானி சாய் தான் அமிர்தமாகத் தோன்றியது. அவ்வளவு சுவை. இதனை படித்துக்கொண்டிருக்கும் வாசகர்களே, எங்கயாவது ஈரானி சாய் கிடைத்தால், அதுவும் பாலாடையுடன் கிடைத்தால் அதனைப் அருந்திப் பாருங்கள், ஏன் நான் இந்த ஈரானி சாயைப் பற்றி இவ்வளவு புகழ்கிறேன் என்று தங்களுக்குப் புரியும்.

ஒரு குவளையைக் குடித்துவிட்டு மற்றொரு குவளை வேண்டும் என்றே அந்த டீ மாஸ்டரிடம். அவர் என்னை பார்த்துச் சிரித்துக்கொண்டே, இன்னும் கலை நயத்துடன் அந்த ஈரானி சாயை தயார் செய்துக்கொண்டிருந்தார்.

அதற்குள், குமார் போன் அடித்தான்.

“ம். சொல்லு குமாரு”

“ஒடம்பு இப்ப எப்படி இருக்கு”

“பரவாயில்ல. சின்ன சின்ன காயங்கிறதனால பெரிசா வலி தெரியல”

“மாத்திர ஏதும் சாப்பிட்டய”

“இப்ப தான் டீ குடிக்க வந்திருக்கேன். இனிமே தான் சாப்பிடனும்”

“சரிடா. அந்த கைடு தாஸு எப்ப வரேன்னு சொல்லியிருக்கிறார்”

“பத்து மணிக்கு வரேன்னு சொல்லியிருக்காரு டா”

“சரிடா. நான் அப்புறமா உனக்கு திரும்ப கூப்பிடறேன்” என்று சொல்லி குமார் போனை வைத்துவிட்டான்.

எனக்கு அடிப்பட்டதை வீட்டில் சொல்ல வேண்டாம் என்று அவனிடம் சொல்லி வைத்திருக்கிறேன். வீட்டில் தெரிந்தால் ஒப்பாரியே வைத்துவிடுவார்கள். நேரமே சரியில்லை, அந்தக் கோவிலுக்குப் போகனும், இந்தக் கோவிலுக்குப் போகனும், அந்தப் பரிகாரம் பண்ணனும், இந்தப் பரிகாரம் பண்ணனும் என்று ஒரு மாதத்திற்கு என்னை அலைய வைத்துவிடுவார்கள். அவர்களையும் குற்றம் சொல்ல முடியாது, கொஞ்ச நாட்களாக எனக்கு நடந்துக் கொண்டிருக்கும் சம்பவங்கள் அப்படி. வாழ்க்கை என்னை வச்சு செய்கிறதா? இல்லை வாழ்க்கையை நான் வச்சு செய்கிறேனா? என்று எனக்கே சில நேரங்களில் சந்தேகம் வந்ததுண்டு.

எதுவாக இருந்தாலும், நானே ஊருக்கு வந்து சொல்லிக் கொள்கிறேன் என்று குமாரிடம் சொல்லிவிட்டேன். அவனும் நான் ஏதும் இன்னும் சொல்லவில்லை, இனியும் சொல்லப் போவதில்லை என்றான். அவன் என் வார்த்தையை மீறி ஏதும் வீட்டில் சொல்ல மாட்டான் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

இதனையெல்லாம் நான் யோசித்து முடிப்பதற்குள், எனது அடுத்த ஈரானி சாய் ஒரு குவளையில் தயாராக இருந்தது. அதனை வாங்கி நுகர்ந்துப் பார்த்தேன். ஈரானி சாயின் மனம் இன்னும் தூக்கலாக இருந்தது.

முதல் துளியை ரூசிப்பதற்குள், “தம்பி” என்று, ஒரு குரல் கேட்டது, கூடவே, என் தோளில் யாரோ தட்டுவதைப் போலிருந்தது.

இருபத்திஒன்பதாவது பகுதியின் லிங்க்…

– மீண்டும் சந்திப்போம் நாளை இரவு 08.00 மணிக்கு…

எழுத்து – பட்டிக்காடு