Friday, March 29, 2024
Home > ஒண்ணுமில்ல > ஒண்ணுமில்ல… பகுதி 26

ஒண்ணுமில்ல… பகுதி 26

இருபத்திஐந்தாவது பகுதியின் லிங்க்…

குமார் அழைக்கிறான் என்று காட்டியது என் போன்.

இன்று இந்த சிக்கன் ரைசஸை சாப்பிட்ட மாதிரி தான் என்று தோன்றியது. எடுத்தால் கத்துவான் என்று தெரியும். வேண்டும் என்றே இரயில் இருந்து நான் குதித்தேன் என்று சொன்னாலும் சொல்லுவான். ரெட்டபால சம்பவத்திற்குப் பிறகு நான் என்னவெல்லாம் செய்கிறேன் என்று அவன் தீவிரமாக கண்காணித்துக் கொண்டிருக்கிறான்.

யோசிக்காமல், காலையில் இரயில் ஒரு பெண்ணைப் பார்த்தேன். அதே பெண்ணை மறுபடியும் மதியம் இரயில் பார்த்தேன். அவளைப் பின் தொடர்ந்துச் சென்றேன். அவளை அழைத்தேன், அவள் என்னை செருப்பால் அடித்துவிட்டாள். அதனால் தான் இந்த இந்த காயங்கள் என்று சொல்லிவிடலாம் என்று தான் தோன்றியது.

ஒரு பெண்ணிடம் செருப்பால் அடிவாங்கிய கதை தெரிந்தால், அந்தப் பெண் யார் என்றுப் பார்க்க வேண்டும் என்று அவனும் மும்பைக்கு கிளம்பி வந்தாலும் வந்துவிடுவான். கிராதகன். என் நண்பன் தான். ஆனால், நான் என்றோ செய்த தவறிற்காக இன்னும் என்னை சந்தேகக் கண்ணோடு என்னை அவன் பார்ப்பது எனக்கு ஒருவித பதற்றததை உண்டாக்குகிறது. தாலிக்கட்டிய பெண்டாட்டி விட்டுவிட்டு போனபோதோ, எழு வருட காதலி என்னை விட்டுப் பிரிந்த போதே எனக்கு வராத இந்தப் பதற்றம். இந்த குமாரின் அன்புக் கலந்த அக்கறையால் எனக்கு வருகிறது.

இன்று ருத்திரதாண்டவன் ஆடப் போகிறான் என்ற பயத்திலே நான் போனை எடுத்தேன்.

“ஹலோ சொல்லு குமாரு”

“என்னத்த சொல்ல”

“என்னடா. ஏதும் பிரச்சனையா”

“அத நான் கேட்கனும் தேவா. உனக்கு என்ன பிரச்சனைனு”

“இரு நாளைக்கு நேர்ல வந்து கேக்குறேன்”

“என்னது மும்பை வரப் போறியா? என்ன திடீர்னு”

“நடிக்காத டா. மும்பை போயும் உன் வேலய காட்டுறயா. இரு உன்னைய நேர்ல வந்து வச்சிக்கிறேன்.”

“டேய். எதுக்கு இப்படி கத்துற”

“உன் மேல கடும் கோவத்துல இருக்கேன்”

“என்ன நடந்ததுனு தெரியாம பேசாத”

“அதான் தெரியுமே. நீ ஓடற இரயில்ல இருந்து கீழ விழுந்துட்டனு”

“நான் செல்றத கேட்கறதா இருந்தா கேளு. இல்லனா நான் போன வெச்சிடறேன்”

“சரி சொல்லு” என்றான் கொஞ்சம் கடுப்புடன்.

நான் என் கைடு தாஸிடம் சொன்ன அதே கதையை திரும்ப அவனிடம் அதே மாதிரி சொன்னேன். அவன் பொறுமையாக கேட்டுக்கொண்டன். கடைசியில் லாஜிக்காக ஒரு கேள்விக் கேட்டேன். நான் இரயில் இருந்து கீழ விழறதா இருந்தா, நான் ஏன் தாஸ உதவிக்குக் குப்பிட போறேன் என்று அவனை மடக்கிவிட்டேன். அதன் பிறகே அவன் கோபமெல்லாம் குறைந்தது.

“சரி. நான் உன்னைய நம்புறேன்”

“அத ஏண்டா இவ்வளவு கோபமா சொல்ற”

“பின்ன. உனக்கு அடிப்பட்டு இருக்குல. எனக்கு கவலயா இருக்கு. இப்படியா கவனமில்லாம இருப்ப”

“ஐயா சாமி. திரும்ப ஆரம்பிக்காத.”

“ஸ்விக்கில சிக்கன் ரைஸ் ஆடர் போட்டு, அது வந்து அரைமணி நேரமாச்சி, இந்நேரம் ஏசி குளிருக்கு அது ஆறிப்போயிருக்கும். நான் அத சாப்பிட போறேன். நீ முதல்ல போன வை” என்றேன் கொஞ்சம் போலித்தனமான கோபத்தில். அவனும் அதற்கு மேல் ஏதும் பேசாமல் போனை வைத்துவிட்டான்.

நான் எனது சிக்கன் ரைஸை சுவைத்து சாப்பிட்டுவிட்டு உறங்கச் சென்றேன். ஆனால் எனக்கு தூக்கம் சுத்தமாக வரவில்லை.

ஏன், தேவி என்னை அடித்தாள் என்ற கேள்வி என்ன சிந்தனையை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது. இவ்வளவு பெரிய மும்பையில், தமிழனான நான் எப்படி அவளைக் கண்டுப்பிடிக்கப் போகிறேன். அப்படியே கண்டுபித்தாலும், அவள் என்னிடம் பேசுவாளா? அல்லது அவள் மீண்டும் என்னை அடிப்பாளா? என்று என் சிந்தனை முழுவதும் தேவியைச் சுற்றியே இருந்தது. எவ்வளவுப் புரண்டுப் புரண்டுப் படுத்தாலும் உறக்கமே வரவில்லை.

அன்றைய இரவு தேவியின் நினைவுடனே கழிந்தது.

இருபத்திஎழாவது பகுதியின் லிங்க்…

– மீண்டும் சந்திப்போம் நாளை இரவு 08.00 மணிக்கு…

எழுத்து – பட்டிக்காடு