Saturday, April 20, 2024
Home > ஒண்ணுமில்ல > ஒண்ணுமில்ல… பகுதி 14

ஒண்ணுமில்ல… பகுதி 14

பதிமூன்றாவது பகுதியின் லிங்க்…

நான் உள்ளே சென்றதும் ஒரு ரயில் பிளாட்பாரத்திலிருந்து கிளம்பியது. வேகமாக ஓடிச்சென்று ஏறினேன். நான் ராபினை பிரிந்த பின் பெரும்பாலும் பெண்கள் பெட்டியில் தான் பயணிப்பேன். பொதுப் பெட்டியில் பயணித்தால், அவனுடன் பழகிய நாட்கள் என் நினைவிற்கு வந்து என்னை காயப்படுத்துகிறது. ஆனால் இன்று வேறு வழியில்லாமல் ஏற வேண்டியதாகிப் போனது. ஏற்கனவே நேரமாகிவிட்டதால், இதில் ஏறிக்கொண்டேன்.

வீட்டில் இருந்தே வேலை செய்திருக்கலாம். என் ஐடி நிறுவனத்தில் அந்த வசதியை எனக்கு செய்து கொடுத்திருந்தார்கள். ஆனால் இன்று மனிதவள (ஹச்.ஆர்) மேனேஜரைப் பார்க்க வேண்டி இருந்ததால் நேரில் செல்ல வேண்டி இருக்கிறது. நான் ராபினைப் பிரிந்த பின் அந்த அலுவலகத்திற்கு இப்போது தான் முதன் முதலாக செல்கிறேன். எனக்குள் ஒரு மாதிரி இருக்கிறது. என்ன செய்வது அந்த ஹச்.ஆர் நேரில் வரச் சொல்கிறானே.

எப்போது இரயில் போகும் போது பாட்டுக் கேட்டுக்கொண்டே போவது எனக்குப் பிடிக்காது. பாட்டு கேட்பது என்றால் எனக்கு அந்த இடம் அமைதியாய் இருக்க வேண்டும். பெரும்பாலும் இரயில் பயணங்களில் அமேசான் கிண்டில் ஆப் தான் எனக்குத் துணை. ஏதாவது புத்தகத்தை அதில் நான் படித்துக் கொண்டிருப்பேன்.

இன்று ஏனோ எதுவும் படிக்கத் தோன்றவில்லை. நான் இருந்த பெட்டியில் கூட்டம் அதிகமாக இருந்தது ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அல்லது பெண்கள் பெட்டியாக இல்லாததால் எச்சரிக்கை உணர்வுடன் படிக்காமல் இருந்திருக்கலாம்.

அப்போது.

**************************

இந்த இடத்தில் ஒரு ரகசியத்தைச் சொல்கிறேன். பெண்கள் உள் மனதிற்கு தன்னை யாராவது பார்த்தால் சட்டென்று தெரிந்துவிடும். எனக்கும் அப்படித்தான். சில பெண்கள், ஆண்கள் தங்களைப் பார்க்க வேண்டும் என்ற காரணத்திக்காகவே சிரத்தை எடுத்து உடையும், ஒப்பனையும் செய்து வருவார்கள். அவர்களைப் பார்த்தாலே எனக்குப் பற்றிக்கொண்டு வரும். ஏன் தான் இப்படி அலைய வைக்கிறார்கள் என்று.

ஆனால் அதுவும் அவர்களின் உடை சுதந்திரம் தானே. நான் ஒரு பெண்ணாக இருந்துக்கொண்டு,  இன்னொரு பெண்ணின் உடை சுதந்திரத்தில் எப்படி தலையிடலாம் என்று அமைதியாய் இருந்துவிடுவேன்.

நான் ஒரு போதும் பிறர் என்னைப் பார்க்க வேண்டும், என் உடையை பாராட்ட வேண்டும், என் ஒப்பனையை பார்த்து வியக்க வேண்டும் என்று நினைத்து சிரத்தை எடுத்துக் கொண்டதே கிடையாது. எப்போதும் எனக்கு எது சவுகரியமாக இருக்கிறதோ அந்த உடையை நான் அணிந்துக்கொள்வேன்.

யார் என் உடை சுதந்திரத்தில் தலையிட்டாலும் எனக்கு கடும் கோபம் வந்துவிடும். உடைக்கு ஏற்றார் போல மெலிதான ஒப்பனை செய்துக் கொள்வேன். பெரும்பாலும் சல்வாரும், லெக்கின்னும் தான் எனக்கு பிடித்த உடை. எப்போதாவது துப்பட்டா போட்டுக்கொள்வேன்.

பெண்கள், டில்லி பாலியல் வன்முறை சம்பவத்திற்குப் பிறகு கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டியிருக்கிறது. இந்த இந்திய திருநாட்டில் இப்போதெல்லாம் பெண்ணாய் பிறந்துவிட்டாலே பாதுகாப்பு என்பதேயில்லை.

பெண் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவள் மீது தவறேயில்லை என்றாலும், முதல் குற்றச்சாட்டு பெண்கள் மீது தான். பெரும்பாலும் இங்கு பெண் தான் குற்றவாளி என பெரும்பாலான மக்களின் பொது புத்திக்கு தோன்றுகிறது.

சமூகம் எல்லா சடங்குகளையும், பெண்கள் மீதே திணித்து வைத்திருக்கிறது. பெண்களைத் தான் தெய்வமாக கொண்டாடுகிறார்கள். பெண்கள் பெயரிலே தான் ஆறுகளையும் இருக்கிறது.  அவ்வளவு ஏன் பெரும்பாலான் குடும்பங்கள் பெண்களைத் தான் தங்களின் கெளரவமாகக் கருதுகிறார்கள். ஆனாலும் பெண்களுக்கு இந்தத் திருநாட்டில் பாதுகாப்பு என்பது எட்டாக்கனி தான். இதையெல்லாம் பார்த்து எனக்கு வெறுப்பாக வரும். ஆனால், தனி ஒரு பெண்ணாய் என்னால் என்ன செய்ய முடியும். அப்படி ஏதும் என்னால் மாற்றம் கொண்டு வர முடிந்தால், அது எனக்கு பெரிய பாக்கியமாக இருக்கும். அப்படி ஒரு வாய்ப்பிற்காக நான் காத்திருக்கிறேன்.

மும்பைப் போன்ற பெரிய நகரத்தில் இருக்கும் ஒரு நடுத்தர குடும்பத்து பெண்ணான எனக்கே இந்த மாதிரி எண்ணங்கள் என்றால், நாடு முழுவதும் பரந்துவிரிந்துள்ள கிராமங்களில் என் நாட்டு பெண்கள் படும் துயரை நினைத்தால் என் மனம் பதறுகிறது.

இந்த நாட்டில், மாதவிடாயுடன் ஒரு பெண் சமையல் செய்தால், அந்த பெண், அடுத்த ஜென்மத்தில் நாயாகப் பிறப்பாள் என்றும், அந்த் உணவைச் சாப்பிடும் ஆண், எருமையாக பிறப்பான் என்று சாமியார்கள் இந்த 21ஆம் நூற்றாண்டிலும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் நம் நாட்டில் இவ்வளவு நாய்களும், எருமைகளும் சாலைகளில் திரிகின்றனர் என்று சொல்கிறார்கள் இந்த பழங்காலத்து ஆன்மீகவாதிகள். அதற்கு பெண்களும் கைத்தட்டுகிறார்கள். அவர்களின் அறியாமை என்னை கவலைப்பட வைக்கிறது.

தந்தைப் பெரியார் ஒரு முறை சொன்னாராம், பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்று. இதையெல்லாம் பார்க்கும் போது எனக்கும் அப்படித்தான் தோன்றும். ஆனாலும், அடுத்த ஜென்மம் என்று இருந்தால் அதிலும் நான் பெண்ணாகவே பிறக்க விருப்புவேன்.

***********************

யாரோ என்னையே பார்ப்பது போன்ற உணர்வு, எல்லா பெண்களுக்கும் ஏற்படுவதைப் போல எனக்குள்ளும் ஏற்பட்டது.

நான்…

பதினைந்தாவது பகுதியின் லிங்க்…

– மீண்டும் சந்திப்போம் நாளை இரவு 08.00 மணிக்கு…

எழுத்து – பட்டிக்காடு