Friday, March 29, 2024
Home > ஒண்ணுமில்ல > ஒண்ணுமில்ல… பகுதி 12

ஒண்ணுமில்ல… பகுதி 12

பதினொறாவது பகுதியின் லிங்க்…

என் கதை என்னவொன்று பார்க்கும் முன் என் குடும்பப் பின்னனியைப் பற்றி நீங்கள் கொஞ்சம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

என் அப்பாவும் அம்மாவும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்கள். இருவரும் ஒரே அரசு வங்கி அலுவலகத்தில் கிளார்க்காக வேலைப் பார்த்தனர். அப்பாவின் பெயர் எழில். பெயருக்கு ஏற்றார் போல் அழகாக இருப்பார். என் தாத்தா ராமசாமியைப் போன்றே நல்ல வெள்ளை நிறம். அவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில் தான்.

அம்மாவின் பெயர் ஈஸ்வரி. அம்மாவுக்கு தமிழ்நாடு தான் பூர்வீகம். அரசு போட்டித் தேர்வில் வெற்றிப் பெற்று மும்பைக்கு வேலைக்கு வந்தவர். அவர் வேலை செய்த இடத்தில் இருந்த ஒரே தமிழ் ஆள் என் அப்பா மட்டும் தான். அதனால் தான் என்னவோ இருவரும் வெகு சீக்கிரத்தில் நட்பாகி, அது காதலாக மலர்ந்துவிட்டது. அம்மா கொஞ்சம் அப்பாவைவிட கலர் கம்மி தான் என்றாலும் அம்மாவும் நல்ல அழகாகவும், கலையாகவும் இருப்பார். நான் கொஞ்சம் அம்மா போன்றே இருப்பேன்.

அக்காலத்தில் போட்டித் தேர்வுகளில் பெண்கள் பங்கேற்பதே அரிதாக இருந்த நிலையில், என் அம்மா நல்ல மதிப்பெண் பெற்று மும்பைக்கு வேலைக்கு வந்ததே அவர் வீட்டில் பிடிக்கவில்லை. அதையும் மீறி என் அப்பாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டதால், அவர் வீட்டிற்கும் அவருக்குமான உறவு அத்துடன் அறுந்துப்போனது. என் அம்மாவிட்டு சொந்தபந்தம் என்று யாரும் இதுவரை என்னை தேடி வந்ததேயில்லை. அம்மாவும் அப்பாவை திருமணம் செய்துக்கொண்ட பிறகு சொந்த ஊருக்கு திரும்பவேயில்லை.

என் பெற்றோர் இருவருக்குமே நான் வேண்டாத குழந்தை. அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதை சில வருடங்களுக்கு தள்ளிவைக்கத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அவர்களின் ஆஜாக்கிரதையினால் நான் கருவாக உருவாக்கிவிட்டேன். என் அம்மா கருவை கலைத்துவிடலாம் என்று போராடியிருக்கிறார். அப்பாவோ கடவுள் கொடுத்த வரத்தை ஏன் கலைக்க வேண்டும் என்று கருவை கலைக்கவிடவில்லை. பாட்டி தாத்தாவும் தந்த நெருக்கடியில் தான் நான் கருவிலேயே சாகாமல் உயிர் பிழைத்தேன்.

நான் பிறந்தவுடன் அம்மாவிற்கு வங்கி உதவி மேலாளராக பதவி உயர்வு கிடைத்தது. ஆனால் அப்பா என்னைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதால் அந்த பதவி உயர்வை வேண்டாம் என்று சொல்லிவிடச் சொன்னார். அதனால் அப்போதே அம்மாவின் வேலைக்கு நான் இடைஞ்சலாக இருப்பதாக நினைத்து என்னை வெறுக்க ஆரம்பித்தார். அம்மா பிடிவாதமாக அந்த பதவி உயர்வை ஏற்று வேறு அலுவலகத்திற்குச் சென்று விட்டார். என் அப்பா வேலையை விட வேண்டியதாகிவிட்டது. அதனாலேயே இருவருக்குள்ளும் ஈகோ பிரச்சனை தலைதூக்க இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்துவிட்டனர். விவாகரத்து செயத சில வருடங்களில் அவர்கள் மீண்டும் புதுத் துணையைத் தேடிக் கொண்டனர்.

அப்போது எனக்கு இரண்டு வயதுக்கூட பூர்த்தியாகவில்லை. இருவருமே என்னை வேண்டாம் என்று சண்டைப் போடுவதைப் பார்த்த என் தாத்தவும் பாட்டியும் என்னைக் கூட்டிக் கொண்டு மாலட் பகுதியில் இருக்கும் தாத்தவின் பழைய விட்டிற்கு குடியேறிவிட்டனர். அங்கே காலையில் அவர் பேப்பர் விற்பதும், மாலையில் அதே இடத்தில் காய்கறிக் கடை நடத்தியும் வருகிறார். கடந்த ஐம்பது வருடங்களாக அவருக்கு அதுதான் தொழில்.

அப்பா அம்மா முகம் கூட என் மனதில் பதியவில்லை. அன்று முதல், என் பாட்டியும் ராணியம்மாவும், தாத்தா ராமசாமியும் தான் என்னை வளர்த்தார்கள். என் தாத்தாவிற்கு என் அப்பா மட்டும் தான் ஒரே வாரிசு. பாட்டி தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். தாத்தாவிற்கு சொந்தம் என்பதால் அவருக்கு பாட்டியை சிறு வயதிலேயே கட்டிவைத்துவிட்டனர்.

என் அப்பாவையும் அம்மாவையும் நான் நினைவு தெரிந்த நாள் முதல் போட்டோவில் தான் பார்த்திருக்கிறேன். வீட்டு ஹாலில் அப்பா அம்மாவின் கல்யாண போட்டோ ஒன்று எப்போதும் இருக்கும். அதில் தான் நான் இருவரையும் பார்த்திருக்கிறேன். என் அப்பா அம்மாவுடன் எனக்கு எந்தவித தொடர்பும் கிடையாது. நானும் அவர்களைத் தேடிச் சென்றதில்லை. அவர்களும் என்னைத் தேடி வந்ததில்லை. என் தாத்தாவும் தன் மகனை ஒரே அடியாக ஒதுக்கிவிட்டார். பாட்டி இருக்கும் வரை நானும், தாத்தாவும் இல்லாத சமயங்களில் எப்போதாவது பாட்டியை வந்து பார்த்துவிட்டுச் செல்வார். எனக்கு இருபது வயது இருக்கும் போது, கேன்சரால் பாட்டி மரணமடைந்துவிட்டார். அவரின் மரணத்திற்குக்கூட என் அப்பாவும் அம்மாவும் வரவில்லை. அதுவரை அவர்கள் மீது இருந்த கொஞ்சனெஞ்ச பாசமும் இல்லாமல் போய்விட்டது.

பாட்டி இறந்ததற்குப் பிறகு, தாத்தாவும் நானும் தான். அவருக்கு நான் துணை. எனக்கு அவர் துணை. நான் ராபினுடன் லிவ்விங் டூகெதராக சொல்லப்போகிறேன் என்றதும் மறுப்போதும் சொல்லவில்லை. மாறாக வாழ்த்தி என்னை வழி அனுப்பி வைத்தார். அந்த உறவு முடிந்தவுடன் நான் தாத்தாவுடனே வந்துவிட தான் எண்ணினேன். ஆனால், அவர் தான் என்னை கொஞ்ச நாள் தனியாக இருந்துப் பழகிக்கச் சொன்னார். யாரையும் நம்பி நீ இருக்கக் கூடாது என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். தாத்தா என்றால் எனக்கு உயிர். இப்போது எனக்கு சொந்தம் என்று சொல்லிக் கொள்வதற்கு இருக்கும் ஒரே நபரும் அவரே.

இதுவே என் குடும்பப் பின்னனியின் சுருக்கம்.

எனது அப்பாவும் அம்மாவும் இப்போது சில நேரங்களில் ஒரு விசயத்திற்காக ஒன்று கூடுகிறார்கள். ஆனால் அது அவர்களது அன்பு மகளுக்காக அல்ல. அவர்கள் ஒன்று கூடுவது எதற்காக என்றால்…

பதிமுன்றாவது பகுதியின் லிங்க்…

– மீண்டும் சந்திப்போம் நாளை இரவு 08.00 மணிக்கு…

எழுத்து – பட்டிக்காடு