Wednesday, April 8, 2020
Home > ஒண்ணுமில்ல > ஒண்ணுமில்ல… பகுதி 08

ஒண்ணுமில்ல… பகுதி 08

எழாவது பகுதியில் லிங்க்

பதற்றத்தில், “ஒண்ணுமில்லை” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து நகர முயன்றேன்.

ஒண்ணுமில்லைனு சொன்னதற்கு அந்தப் பெரியவர், “தம்பி. நீங்க தமிழா” என்று கேட்டு எழுந்து என் அருகில் வந்து அவர் கடைக்கு அருகில் இருந்த மர பெஞ்சில் என்னை அமர வைத்தார்.

முதன் முறையாக முப்பை வந்தப்பிறகு ஒரு அந்நியர் என்னிடம் தமிழிலில் பேசுகிறார். அவர் என்னிடம் தமிழில் பேச பேச எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மும்பையுடனான எனது நெருக்கம் அந்த பெரியவர் மூலமாகவே எனக்குள் இன்னும் அதிகமானது. அவரது கடையில் தமிழ் நாளிதழ்களும் இருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தினத்தந்தி மற்றும் தினகரனின் மும்பை பதிப்பு நாளிதழ்கள் அவரிடமிருந்து பெற்றுக்கொண்டேன். கூடவே இரு ஆங்கில நாளிதழ்களையும் வாங்கிக் கொண்டேன்.

“ஆமாங்க ஐயா. தமிழ்நாடுல இருந்து வேல விசயமா வந்திருக்கேன். இங்க ஓட்டல தங்கியிருக்கேன்” என்றேன் அந்தப் பெரியவரிடம்.

“தமிழ்நாட்டுல எங்க”

“சேலமுங்க”

“அப்படியா”

“ஆமாங்க”

“நம்மளுக்கு பூர்வீகம் எங்கங்க”

“எனக்கு கோயமுத்தூரு பக்கத்துல சூலூருங்க. நான் சின்ன பையனா இருக்கும் போதே அப்பா கூட குடும்பத்தோட இங்க வந்துட்டோமுங்க.” என்றார்.

“அட நம்ம கொங்கு பகுதியா நீங்களும். ரொம்ப நல்லதா போச்சிங்க. இங்க தான் ஒரு வாரம் தங்க போறேன். கூட பேச்சுத்துணைக்கு ஆள் இல்லையேனு கவல பட்டேன். நல்ல வேல நீங்க இருக்கீங்க.”

“ஐயா நம்ம பேருங்க”

“இராமசாமி. சூலூர் இராமசாமி”

“நம்ம பெரியார் ஐயா பேருங்களா”

“ஆமா தம்பி. எங்க அப்பா பெரியாரோட தீவிர ஆதரவாளர். அதனால தான் அந்த பேர எனக்கு வச்சாரு.”

“நல்லதுங்க”

“தம்பி. நம்ம ஊரு பக்கமா போயிட்டிங்க. காபி தண்ணி சாப்படாம உங்கள் அனுப்ப மனசு வாரலீங்க.” என்று சொல்லிவிட்டு எனக்கும் அவருக்கும் டீ சொன்னார்.

“ஐயா. டீ ரொம்ப நல்லா இருக்குதுங்க”

“தம்பி. இது இரானி சாய். நல்லா டேஸ்டா இருக்கும்” என்று அந்த டீக்கடையின் அருமை பெருமைகளைப் பற்றி பேச ஆரம்பித்தார்.

“தம்பிக்கு கல்யாணம் ஆகிடுச்சுங்கலா” என்று ஒரு கேள்வியைக் கேட்டார்.

எனக்கு கடுப்பாக இருந்தது. அண்ணன் கல்யாணம் செஞ்சிக்கிட்ட சொந்ததுல இருந்து தீபானு ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி. அவ. எனக்கு கல்யாணத்துல இஷ்டமில்லனு சொல்லிட்டு, அவ பாட்டுக்கு வெளிநாட்டுக்கு கிளம்பிப் போயிட்டா. அதை அவரிடம் சொல்ல எனக்கு விருப்பமில்லை.

“இன்னு இல்லீங்க” என்றேன்.

“பாக்க ஜம்முனு இருக்கீங்க. சீக்கிரமே நல்லபடியா முடிஞ்சுடும். கவல படாதீங்க” என்றார் ஆறுதல் சொல்வதைப் போல. அப்படியே அவரது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் கனிவாக பேசி வியாபாரம் செய்து வந்தார். காலையில் நாளிதழ் விற்கிறாராம். மாலையில் இதே இடத்தில் காய்கறி விற்கிறாராம். எப்படியும் அவருக்கு 70 வயதிற்கு மேலிருக்கும்.

இந்த மாதிரி பெரியவர்களிடம் பேசும்பொழுது, நாம் வாழ்க்கையைப் பற்றி நிறைய கற்றுக் கொள்ளலாம். அவர்களுடைய அனுபவத்திலிருந்து நமக்கு நிறைய தகவல்கள் கிடைக்கும். சில தகவல்கள் நமக்கு ஆச்சரியமூட்டுவதாகக் கூட இருக்கும். இன்னும் சில தகவல்கள் நம் தினசரி வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆனால் ஒரே ஒரு பிரச்சனை. சிலநேரங்களில் அவர்களின் தற்பெருமைகளை பேசுவார்கள் அல்லது சரமாரியாக அட்வைஸ் மழை பொழிவார்கள். நாம் அதனை பொறுத்துக்கொண்டால் போதும். நமக்கு நிறைய தகவல்கள் கிடைக்கும்.

“ஐயா பெரியவரே. உங்ககிட்ட நான் கேட்டேனா” என்பதனைப் போன்று முகம் சுழித்தேன்.

நான் முகம் சுழிப்பதைத் தெரிந்து அவரே வேறு சில விசயங்களைப் பற்றி பேச ஆரம்பித்தார். நானும் அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டே, நாளிதழ்களை புரட்ட ஆரம்பித்தேன். தமிழ் நாளிதழ்களில் பெரும்பாலும் தமிழ்நாட்டுச் செய்திகளே ஆக்கிரமித்து இருந்தன. ஆங்கில நாளிதழில் பெரும்பாலும் விளம்பரம், விளையாட்டு, வியாபாரம் போன்ற செய்திகளே இருந்தன. ஆக இந்த நாளிதழ்கள் மூலமாக எனக்கு எந்த விவரமான தகவல்களும் கிடைக்கவில்லை. மும்பையைப் பற்றி தெரிந்துக்கொள்ளும் வாய்ப்பு வீணாகிவிடுமோ என்ற எனக்குள் கவலை எழுந்தது.

அப்போது அந்தப் பெரியவரிடம் உதவி கேட்டால் என்ன என்று எனக்குள் வினா எழுந்தது. நான் மனதில் நினைத்தது அவருக்கு எப்படித் தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை.

அவரே தொடர்ந்தார்.

“தம்பி. இன்னிக்கு எங்க போகப் போறீங்க”

அப்பாடா அவரே கேட்டுவிட்டார். அவரிடமிருந்து அருகில் சுற்றிப் பார்க்கவேண்டிய இடங்களைக் தெரிந்துக் கொண்டேன். நாளைப் பார்க்க வருகிறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்துக் கிளம்பினேன்.

“தம்பி. உங்க பேரு.” என்று அவர் கேட்க.

அதற்குள் எனக்கு போன் அடிக்க. நான் போன் பேசிக்கொண்டே அவரிடம் டாடா காட்டிவிட்டு கிளம்பிவிட்டேன்.

(இதனைப் படித்துக் கொண்டிருக்கும் வாசகர்களுக்கே இன்னும் என் பெயரை சொல்லவில்லை, அதற்குள் எப்படி இந்தப் பெரியவரிடம் சொல்லுவேன்)

இனி மும்பையை சுற்றிப் பார்க்க கிளம்ப வேண்டியது தான்.

ஒன்பதாவது பகுதியின் லிங்க்

– மீண்டும் சந்திப்போம் நாளை இரவு 08.00 மணிக்கு…

எழுத்து – பட்டிக்காடு

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of