Saturday, April 20, 2024
Home > கேள்விபதில் > நாய்கள் ஏன் செல்லப்பிராணிகளா? – கேள்விபதில்-3

நாய்கள் ஏன் செல்லப்பிராணிகளா? – கேள்விபதில்-3

கேள்வி: நாய்கள் வீட்டில் வளர்க்க ஏன் தடை விதிக்கக் கூடாது?

நியாயமான கேள்விதான். ஆனால் இதற்கு பதில் சொல்வது, தொங்கும் கயிற்றின் மேல் பயணம் செய்வதற்கு சமம்.

இன்றைய நிலையில் பல இளைஞர்களுக்கு வளர்ப்பு நாய்கள் தான் நெருங்கிய உறவு. முதியவர்களுக்கு வளர்ப்பு நாய்கள் தான் நடை பயிற்சியின் போது துணை வருபவை. பல பெண்களுக்கு வளர்ப்பு நாய்கள் தான் பாதுகாப்பாளர்கள். குழந்தைகளுக்கோ நாய்கள் என்றால் கொள்ளைப்பிரியம். இவை ஒரு புறம் இருக்கட்டும், இதைக் கொஞ்சம் ஆழமாய் விவாதிப்போமா?

நாய். ஒரு நான்கு கால் பிராணி. குறைந்தபட்சம் 20,000 வருடங்களுக்கு மேல் மனிதனுக்கு செல்லப் பிராணியாகவும், காவல் காக்கவும், வேட்டைக்கும் உதவி வந்துள்ளது. மனிதனுக்கும், நாய்க்கும் இருக்கும் பந்தம் மிக மிக நுட்பமானது. ஒருவகையில் மனிதனின் மூன்றாவது கண்ணாக நாய் இருக்கிறது. இன்றைய நவீன உலகில் மனிதனுக்கு அடுத்தப் படியாக அதிக உரிமைக் கொண்ட விலங்கு நாய் தான்.

மலைக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையின் ஒரு கணக்கு சொல்கிறேன். பூமியில் சுமார் 60 கோடி நாய்கள் இருக்கலாம் என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றன. 60 கோடி என்பது அமெரிக்கா(யூ.எஸ்), கனடா, ஜெர்மனி, பிரான்சு, இத்தாலி மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளின் மொத்த மக்கள் தொகையை விட அதிகம். மலைப்பாக இருக்கிறதா? இவற்றுள் 30 கோடிக்கும் மேற்பட்ட நாய்கள் கவனிப்பில்லாத, சுதந்திரமாய் திரியும் தெரு நாய்களாக இருக்கின்றன, மீதம் இருப்பவை எல்லாம் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள். சுதந்திரமாகத் திரியும் தெரு நாய்கள் தான், உண்மையிலேயே நாய்களாக இருக்கின்றன. மற்றவை எல்லாம் சுதந்திரமற்ற விலங்குகளாக வீடுகளில் சோற்றுக்கும், அன்பிற்கும் ஏங்கி, சர்க்கரை நோயும், மன அழுத்தங்கள் வந்தும் இருக்கின்றன. வீட்டில் வளர்க்கப்படும் நாய்களில் நான்கில் ஒரு நாய் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரங்களே கூறுகின்றன. காரணம், மணியடித்தால் சோறு, ஆண் நாய்களுக்கு காயடித்தல் (ஆண்மையைப் பறித்தல்), பெண் நாய்களுக்கு கூடும் நாட்களில் இருக்கும் தனிமையும் வெறுமையும், காலங்காலமாக உறவு கொண்டு வம்ச விருத்தி செய்த நாய்களுக்கு இன்று ஒரே ஒரு ஊசி மூலமாக குட்டிகள் ஈட்ட வழிவகை செய்யப்பட்டு விட்டது. இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

”நாய்களுக்கும் பாலியல் உறவு உண்டா!” என கேட்கும் நிலையில் தான் இன்றைய படித்த வர்க்கம் இருக்கிறது. கிராமங்களில் வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு எல்லா சுதந்திரங்களும் கிடைக்கிறதே, அவ்வளவு ஏன் தெரு நாய்களுக்குக் கூட உணவு கிடைப்பதில் தான் பிரச்சனையே தவிர, இல்லற சுகத்துக்கோ, நட்புகளுக்கோ எந்த சிக்கலும் இல்லையே. என்னது நாய்களுக்குள் நட்பா? என நீங்கள் வியக்குமாயின் உங்கள் மனது இன்னும் பக்குவப்பட வேண்டும் என்று தான் நான் சொல்வேன். பின் வரும் கதை கொஞ்சமேனும் பக்குவப்பட உதவும்.

ஒரு ஊரில் கவிதா என்ற ஒரு பெண் இருந்தாள். அந்த ஊரின் பணக்காரர்கள் இருக்கும் பகுதியில் தான் அவள் வீடும் இருந்தது. அவள் வீட்டிலும் செல்வத்திற்கு குறைவில்லை தான். அவளுக்கு தேவைக்கான அனைத்து வசதிகளும் அவள் வீட்டில் கிடைத்தது. அன்பாக அவளைப் பார்த்துக் கொள்ள வேலைக்கு ஆட்கள் கூட அவள் வீட்டில் இருந்தனர். ஆனாலும் எதோ ஒரு குறை. என்னவென்று சொல்ல முடியவில்லை. கவிதா அந்தப் பகுதியிலேயே மிகமிக அழகானவள். அவளைக் கொத்திக் கொண்டுப் போக பல ஜோடிக் கண்கள் அவளையும், அவள் வீட்டையும் நோட்டமிட்ட படியே இருக்கும். அவள் வெளியே வந்துவிட்டால் போதும், அவள் பின்னேயும் முன்னேயும் அவளை கவர காத்துக்கிடப்பார்கள் என்றால் பார்த்திக் கொள்ளுங்களேன். ஆனால் அவளுக்கோ கருப்பனை கவர என்ன செய்யலாம் என்ற யோசனை.

கருப்பன், அவள் வீட்டு காவல்காரனுடன் கூட அடிக்கடி வருபவன். காவல்காரன் வயதானவர் என்பதால் யாரும் கருப்பன் அவனுக்கு துணையாக வருவதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கருப்பன் பார்க்க சுமாராக இருப்பான். கருப்பன் அவள் வீட்டிற்கு அடிக்கடி வர ஆரம்பித்தான். கவிதாவிற்கு, அவன் மேல் இருந்த ஈர்ப்பு நாள் பட நாள் பட அதிகமானது. அவனுக்கும் அவள் மேல் ஒரு இது தான், ஆனால் எஜமான் வீட்டுப் பெண்ணைப் போய் எப்படி? என்ற தயக்கத்தில் இருந்தான். அவளிடம் அவன் எதையும் வெளிக்காட்டவே இல்லை. இப்படியே போய்க் கொண்டிருந்த பொழுதில், ஒரு நாள் வீட்டில் கவிதாவை மட்டும் இருக்கச் சொல்லிவிட்டு அவள் வீட்டினர் ஒரு திருமணத்திற்காக வெளியூர் சென்று இருந்தனர். அன்றைக்கு கடுமையான குளிரின் காரணமாக வீட்டின் வாசலிலே தான் கருப்பன் படுத்திருந்தான். வீட்டினுள் எதோ சத்தம் கேட்டு, கருப்பன் உள்ளே சென்றான். அங்கே கவிதா தனிமையில் இருக்க, இருவருக்கும் காதல் துளிர்விட்டது. அந்த துளிர், வளர்ந்து, இல்லற உறவாக மாறியது. கவிதா மனதிற்குள் இருந்த அந்த ஏதோ ஒரு குறையும் நீங்கியது. இவர்களின் காம காவியத்தை காவல்காரன் பார்க்க, அதனை அப்படியே தனது எஜமானரிடம் ஒப்பித்தான். ரொம்ப விசுவாசமானவன் போல. ஆனால் எஜமானரோ ஒன்றும் சொல்லவில்லை. அவர் முகத்தில் எந்த விதமான சலனமும் இல்லாததால் காவல்காரன், தன் வேலையைப் பார்க்கப் போய்விட்டான்.

அடுத்த நாள், கவிதாவிற்கு சமமாக கருப்பன் நடத்தப்பட்டான். எஜமானரே கருப்பனுக்கு விருந்தளித்தார். கவிதா கண்ணில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கேடுத்தது. தமது உறவிற்கு அங்கிகாரம் கிடைத்ததாகவே நினைத்தாள். அன்றுடன், கருப்பன் வருவது நின்றுவிட்டது. காவல்காரன், புதியவனுடன் வர ஆரம்பித்தான். கவிதாவின் வாழ்வில் அதற்குப் பிறகு நிறைவே ஏற்படவில்லை. சிலகாலம் கழித்து, ஒரு நாள் இரவில் கவிதாவிற்கு வாரிசுகள் பிறந்தன, இரண்டு ஆண் பிள்ளைகள். அப்படியே கருப்பனைப் போன்றே இருந்தனர். எஜமானர் வீட்டில் கொண்டாட்டங்கள் களைக்கட்டின. அடுத்த நாள் காலை வந்துப் பார்த்த காவல்காரன் அப்படியே உறைந்து நின்றான்.

சேரி பக்கத்திலிந்து வந்த கருப்பனின் வாரிசுகள் தான் அவை என்று அவன் கண்டுகொண்டான். கவிதா, கருப்பனை தேடினாள். காவல்காரனைப் பார்த்தாள். அவன் கண்ணீருடன் கவிதா முன் குற்ற உணர்ச்சியுடன் தலைக்குனிந்து நின்றான். மனதில் அன்று விருந்தளித்த தினத்தை ஒரு நோடி நினைத்துப் பார்த்தான். சேரித் தெரு நாய், கருப்பன், மேல் வீட்டு நாய் கவிதாவுடன், உறவுக் கொண்டான் என்ற ஒரே காரணத்திற்காக எஜமானர், கருப்பனைக் கொல்ல விருந்தில் மருந்து கலந்து கொடுத்ததும், கருப்பனுக்கு கடைசி மரியாதை செய்ததும், காவல்காரனின் கண் முன்னே வந்து மறைந்தன. பெரும் தவறுக்கு துணை நின்றோமே என காவல்காரனுக்கு மூச்சடைத்தது. கண்களில் மேலும் கண்ணீர் கசிந்தது, கவிதாவைப் பார்த்தான். கவிதா, தனது குட்டிக் கருப்பன்களுக்கு பாலுட்டிக் கொண்டிருந்தாள், எஜமானரோ அவள் தலையை கோதிவிட்டுக் கொண்டே இரு குட்டி நாய்களுக்கு ஆயிரங்களில் விலைப் பேசிக் கொண்டிருந்தார். தன் குட்டிகள் விலைப் பேசப்படுவது தெரியாத கவிதாவின் கண்களிலும் கருப்பனை நினைத்து கண்ணீர் கசிந்திருந்தது.

இந்தக் கதை ஒரு உண்மைக்கதை. விரும்பியவளுடன் உறவுக் கொண்டதற்காக இவ்வுலகில் எத்தனை கருப்பன்கள் கள்ளிப்பாலுக்கு இரையாகி இருப்பார்கள். அதனைவிட கொடுமையானது யாதெனில் எத்தனைக் கோடி கவிதாக்கள் உடலுறவில்லாமலே இறந்து போகிறார்கள். அவையும் பாவம் தானே. ஒரு மனித பெண்ணையோ ஆணையோ உடலுறவில்லாமல் தான் வாழ வேண்டும் என்று கட்டளையிட்டால் அது நியாயமா? PETA, BLUE CROSS போன்ற அமைப்புகளே இது போன்ற நாய்களுக்கு எப்போது நீங்கள் குரல் கொடுக்கப் போகிறீர்கள்.

உங்களிடம் ஒன்று கேட்கிறேன், ஜெர்மன் செப்பேர்டு நாய்கள் ஜெர்மனியில் வளர வேண்டியவை, அவற்றை இந்தியா போன்ற நாடுகளில் வளர்பதே நாய்களின் உரிமை மீறலாகப் படுகிறது. இந்தியாவில் வீட்டில் வளர்த்த நாட்டு வகை நாய்கள் எல்லாம் இன்று தெரு நாய்களாகவும், வெளிநாட்டு நாய்கள் யாவும் செல்லமான வீட்டுப் பிராணிகளாகவும் மாறிவிட்டதே. இது நாட்டு நாய்களின் உரிமை மீறல் பிரச்சனையாக தெரியவில்லையா? இவற்றிற்கு பின்னே மாபெரும் வணிக அரசியல் ஒளிந்திருக்கிறது. அதனை ஏன் யாரும் கேள்வி கேட்பதில்லை?

முடிவாக, வீட்டில் நாய் வளர்ப்பதற்கு தடைவிதித்தால் நான் கண்டிப்பாக திகைத்துத் தான் போவேன். அதனை எதிர்க்க மாட்டேன். இம்முடிவு என்னையும் தான் கடுமையாக பாதிக்கும். ஆனால் தடைக்கு நிச்சயம் சாத்தியமில்லை. அது தேவையுமில்லை.

(ஜல்லிக்கட்டுக்கு மட்டும் ஓயாமல் உச்ச நீதிமன்ற படியேறும் “முற்போக்குவாதிகளே”, நாய்களிடம் மட்டும் ஏன் காட்டுகிறீர்கள் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மையை. )

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Balachandar K
8 years ago

Arumaiyana pathivu. Sinthikka vendiya visiyam.