Thursday, April 25, 2024
Home > ஒண்ணுமில்ல > ஒண்ணுமில்ல… பகுதி 04

ஒண்ணுமில்ல… பகுதி 04

மூன்றாவது பகுதியின் லிங்க்

அதற்குள்…

“பையா காபி” என்று சர்வர் என் யோசனையை கலைத்தான்.

என் ஏர்-பாடில் பருத்திவீரன் படத்திலிருந்து, “ஏலே ஏலே ஏலேலே” என்ற பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.

இந்தப் பாடலுக்கும், சூடான காபியிற்கும், இதமான மும்பை குளிருக்கும் கெமிஸ்டிரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி மனம் கொஞ்சம் லேசானது.

காபியை சுவைத்தவாறே, சுற்றும் முற்றும் பார்த்தேன். எல்லோரும் வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.

நம்ம ஊரைப் போன்று பள்ளிக் கல்லூரி வாகனங்களை அங்கே காணவில்லை. சிறார்கள் மட்டுமே அரிதாக வந்த பள்ளி வாகனங்களில் பயணித்தனர்.

மற்ற எல்லா மாணவர்களுக்கும் மும்பை புறநகர் ரயில் தான் உயிர் நாடி போல. எல்லா கடைகளில் அவர்களின் கூட்டம் தான். ரயிலை பிடிப்பதற்கு முன், ஏதேதோ வாங்குவதற்காக மாணவர்கள் அந்தக் கடைகளில் அலைந்துக் கொண்டிருந்தார்கள்.

நேரம் ஆக ஆக நான் காபி குடித்துக்கொண்டிருந்த பேக்கரியில் கூட்டம் அதிகமாகிக் கொண்டே வந்தது. நெரிசல் அதிகமானதால், கிளம்பலாம் என்று எனக்குத் தோன்றியது.

சரி கொஞ்ச நேரம், மலாட் புறநகர் இரயில் நிலையம் வரை நடந்துவிட்டு அதன் பின் ஓட்டலுக்கு செல்வோம் என்று முடிவெடுத்து பேக்கரியில் காபிக்கு பணம் கொடுத்துவிட்டு கிளம்பினேன்.

அப்போது என் ஏர்-பார்டில், முண்டாசுப்பட்டியிலிருந்து, “காதல் கனவே தள்ளிப்போகாதே போகாதே” என்ற பாடல் ஒலிக்கத் துவங்கியிருந்தது.

என் மனதிற்கு மிகவும் பிடித்தமான பாட்டு. இந்தப் பாட்டு கேட்கையில் எப்போதும் என் முகத்தில் புன்னகையிருக்கும். இது அவளுக்கும் பிடித்தமான பாட்டு.

இந்தப் பாட்டை கேட்கையில் அவளை நான் நினைத்துப் பார்க்காத நாளில்லை. ஒவ்வொரு முறையும் இந்தப் பாட்டைக் கேட்கும் போது என் மனம் வலிக்கும். அந்த வலியை நான் எப்போதும் ரசிப்பேன். அது ஒரு அளவில்லாத போதை. காதலில் தோற்றவனுக்கும் மட்டும் தான் அந்த போதை புரியும். அந்த போதையில் வீழ்ந்துவிட்டு மீண்டு வர வாய்ப்பேயில்லை.

பிடித்த பாட்டு, பிடித்த இடம், பிடித்த வண்ணம், பிடித்த ஊர் என டிசைன் டிசைனாக அவளின் நியாபகம் வந்து என்னை அவ்வப்போது காயப்படுத்தும். அதனை என்னால் தவிர்க்கவும் முடியாது. அதே சமயம் அதன் வலியை நான் மனதார விரும்பவும் செய்தேன்.

அவளை நான் அவ்வளவு விரும்பினேன். அவளும் என்னை விரும்பினாள். ஆனால், நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டு என்னைவிட்டு போய்விட்டாள்.

சரி எல்லாம் முடிந்துப் போய்விட்டது. அதன் பிறகு எனக்கு திருமணமே முடிந்து, அதுவும் பஞ்சாயத்தாகி, என் வாழ்க்கையில் நான் நெடுந்தூரம் கடந்து வந்துவிட்டேன். இனியும் அவளை நினைத்து உருகி என்ன பயன் என யோசித்துக்கொண்டிருந்த போதே, நான் மலாட் புறநகர் ரயில் நிலையம் வந்து சேர்ந்திருந்தேன்.

அங்கேயே ஒரு ஓரத்தில் நின்று சில நிமிடங்களுக்கு என்ன நடக்கிறது என்று ஆர்வமிகுதியில் பார்த்துக் கொண்டிருந்தேன்.

இன்னொரு புறம், விட்டுவிட்டு போனவளை நினைத்து என்ன பயன், என்று அவளின் நினைவுகளை மறக்க போரடிக் கொண்டிருந்தேன்.

என் ஐபோன் ஒலித்தது. என் எம்.ஐ. பேண்டில் “தாஸ் மும்பை கைடு” என்று காட்டியது.

எதற்கு இவர், இந்த நேரத்தில் அழைக்கிறார் என்று போனை எடுத்தேன்.

“பிரதர். மை வைப் நாட் பீலிங் வெல். ஐ யம் டேக்கிங் ஹெர் டூ ஹாஸ்பிட்டல். ஷல் ஐ பிக் யூ அட் 2.00 இன் த ஆப்டர்னூன்” என்றார் தாஸ்.

அவரிடம் சரி என்று சொல்லிவிட்டு, மணியைப் பார்த்தேன். மணி 7.00 தான் ஆகியிருந்தது. மதியம் இரண்டு ஆவதற்கு இன்னும் ஏழு மணி நேரம் இருக்கிறது, இந்த நேரத்தில் என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டே நான் தங்கியிருந்த ஓட்டலை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தேன்.

சரியாக அந்த நேரத்தில், என் ஏர்-பார்டில், “வெள்ளி நிலவே… வெள்ளி வெள்ளி நிலவே…” என்ற பாடல் ஒலிக்கத் துவங்கியது. அந்தப் பாடலின் காட்சிகள் என் கண் முன்னால் வந்து சென்றது.

உடனே என் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது.

அருமையான ஐடியா என்று நினைத்து, ஓட்டலை நோக்கி நடக்க ஆரம்பித்தேன் மனதில் பழைய நினைவுகளை அலசிக்கொண்டே.

– மீண்டும் சந்திப்போம் நாளை இரவு 8.00 மணிக்கு…

எழுத்து – பட்டிக்காடு