Thursday, April 25, 2024
Home > ஒண்ணுமில்ல > ஒண்ணுமில்ல… பகுதி 03

ஒண்ணுமில்ல… பகுதி 03

இரண்டாவது பகுதியின் லிங்க்

சரி வெளியில் சென்று, காபி குடிக்கலாம் என்று ஐபோனை ஏர்-பார்டையும் எடுத்துக்கொண்டு கிளம்பினேன், மராத்தி-இந்தி மொழி தெரியாத மும்பையில்.

ஏர்-பார்டை எடுத்து காதில் மாட்டிக்கொண்டு, ஏ.ஆர். ரகுமான் இசையில், என் மனதிற்கு பிடித்த, “ஒரு பொய்யாவது சொல் கண்ணே, உன் காதல் நான் தான் என்று” என்ற பாடலை ஒலிக்க விட்டு அறையை சாத்திவிட்டு நடக்க ஆரம்பித்தேன்.

நான் தங்கியிருந்தது மலாட் கிழக்கு புறநகர் இரயில் நிலையத்திற்கு அருகில்.

இந்தத் தெருவில் ஏதுவும் குடிக்க வேண்டாம், இரயில் நிலையம் இருக்கும் தெருவிற்கு செல்லலாம் என்று முடிவெடுத்து அதனை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தேன்.

அதற்குள் அந்த பாடல் முடிந்து, இளையராஜாவின் இசையில், “சாய்ந்து சாய்ந்து” என்ற பாடல் ஒலிக்கத் துவங்கியது.

ரோடு கார்னரில் ஒரு பெரிய பேக்கரி இருந்தது. அங்கே அமர்ந்து காபி குடிக்கலாம் என்று கடையினுள்ளே சென்றேன்.

வீராப்பாக வந்துவிட்டேன். வந்து கடையில் எப்படிக் கேட்பது என்று தெரியவில்லை.

டீ என்றால்,“பையா… ஏக் சாய்” என்று ஸ்டைலாகச் சொல்லிவிடலாம்.

காபிக்கு எப்படி செல்வது என்று தெரியவில்லை.

மஹாராஸ்டிராவில் மாராத்தி மட்டும் தான் பேசுவார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால், இங்கே இந்தி பேசுபவர்களே அதிகமிருந்தார்கள். பெரும்பாலும் பீகார், யுபி மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களாகவே இருந்தனர்.

சூரியன் ஒளி வீசத் துவங்கியிருந்தது.

எப்படியே ஒரு வழியாக காபி ஒன்றை ஆடர் சொல்லி ஒரு கார்னர் சீட் தேடிச் சென்று அமர்ந்தேன்.

காபி வருவதற்குள் நான் ஆழ்ந்த யோசனையில் முழ்கியிருந்தேன்.

ஏன் மும்பை வந்தோம் என்று தான் முதலில் யோசித்தேன்.

ஏ.ஆர். ரகுமானின் “தள்ளிப்போகாதே” பாடல் என் காதில் ஒலித்துக் கொண்டிருப்பதைக் கூட நான் ரசிக்க முடியாமல் வெறுமையாய் இருந்தேன்.

ரெட்டப்பால ரயில் கனவு வெறும் கனவு மட்டுமல்ல.

உண்மையிலேயே, நான் தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலைச் செய்துக்கொள்ள படுத்திருந்தேன். அன்று குமார், மட்டும் கூட வரவில்லை என்றால், அன்றே நான் இறந்திருப்பேன்.

ஊரைக்கூட்டி, ஆசை ஆசையாய் திருமணம் செய்தால், அந்த திருமணம் ஒரு இரவுக்கூட நீடிக்கவில்லை என்றால் என்ன செய்வது. இரண்டாவது நாள் இரவில் எங்களுக்கும் பெண் வீட்டாருக்கும் பெரும் ரகளையே வந்துவிட்டது.

ஊரே, எங்கள் வீட்டின் முன் தான் திரண்டு இருந்தார்கள்.

பல்லுப்போன கிழவன், கிழவி முதல், கையில் துள்ளி விளையாடும் நண்டு சிண்டு வரை அன்றைக்கு எங்கள் வீட்டு முன் தான்.

டீவி சீரியல்களை விட எங்கள் வீட்டு கதை தான் ஊரெல்லாம்.

பஞ்சாயத்து கூடியது.

எங்கள் வீட்டு சார்பாக பேச பெரும் படையே நின்றிருந்தது.

ஆனால், பெண் வீட்டு சார்பாக பேச, என் மாமனார் மட்டுமே வந்திருந்தார்.

எங்கள் வீட்டு சார்பாக ஒவ்வொருவராக பேச ஆரம்பித்தனர். என் அண்ணனியின் சொந்தக்காரப் பெண்ணைத் தான் எனக்கு திருமணம் செய்து வைத்திருந்தனர்.

என் அண்ணன் என்ன செய்வது எனறு தெரியாமல் அமைதியாக இருந்தான்.

அப்போது தான் நான் மாடியிலிருந்து கீழே பஞ்சாயத்து நடக்கும் இடத்திற்கு வந்தேன்.

எல்லோரும் பேசி முடித்தவுடன், என் மாமனார் பேசினார்.

“என் பொண்ணு தப்பு செஞ்சிட்டா. அதுக்கு நான் மன்னிப்புக் கேட்டுகிடறேன். பஞ்சாயத்து என்ன சொன்னாலும் நான் கட்டுப்படறேன்” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

யாரும் எதிர்பார்பதற்கு முன், என் மாமனார் ஊராரின் காலில் விழப்போனார்.

நான் சட்டென்று அவரை தடுத்து நிறுத்தி, “வேண்டாம் மாமா. வாங்க உங்க வீட்டுல நான் வந்து விடறேன்” என்று சொல்லி வலுக்கட்டாயமாக அவரை அழைத்துக்கொண்டு அவர் வண்டியை நான் எடுத்து அவரை அவர் வீட்டில் விட கிளம்பினேன்.

ஊரே என்னை விசித்திரமாகப் பார்த்தது. கொஞ்சம் சலசலப்புகள் எழுந்து அடங்கியது.

குமாரும் என்னுடைய காரை எடுத்துக்கொண்டு என்னை பின் தொடர்ந்தான்.

அவரை வீட்டில் விட்டு கிளம்பி வரும் வழியில் தான் அந்த ரெட்டப்பால சம்பவம் நடந்தது.

குமார் தம் அடிப்பதற்காக அங்கே வண்டியை நிறுத்தினான். எனக்கு நிக்கோடின் வாசம் ஒத்துவராது என்பதனால் அவன் கொஞ்சம் தள்ளி நின்னு தம்மடிக்கச் சென்றான்.

அப்போது தூரத்தில் ரயில் வருவது தெரிந்தது. நான் தண்டவாளத்தை நோக்கி நடந்து, தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்திருந்தேன்.

தம்மடிக்கும் முசுவில் என்னை குமார் கவனிக்கவில்லை.

இரயில் கிட்ட வந்த பின்பு தான் அவன் என்னை கவனித்தான்.

இன்னும் சில நொடிகள் தான் எல்லாம் தீர்ந்துவிடும் என்று நினைத்திருந்தேன்.

அதற்குள் குமார் ஓடி வந்து, அவன் உயிரையும் பணையம் வைத்து என்னை பிடித்து இழுத்து ஓரமாகத் தள்ளினான். இரயில் எங்களை கடந்துச் சென்றது.

இருவரும் பெருமூச்சு விட்டோம்.

எழுந்ததும் இரண்டு அறைவிட்டான்.

மீண்டும் ஒரு தம்மை எடுத்துப் பற்ற வைத்தான்.

அதற்குள்…

“பையா காபி” என்று சர்வர் என் யோசனையை கலைத்தான்.

– மீண்டும் சந்திப்போம் நாளை இரவு 9.00 மணிக்கு…

எழுத்து – பட்டிக்காடு