Thursday, March 28, 2024
Home > கேள்விபதில் > ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும் தானா இணையம்? – #கேள்விபதில் – 1

ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும் தானா இணையம்? – #கேள்விபதில் – 1

     அடுத்து என்ன எழுதுவது என்று குழப்பம். எழுத முடிவு செய்து, ஒரு மாதம் கூட முழுமையாக முடியவில்லை அதற்குள்ளாக இப்படி ஒரு குழப்பமா? எழுத பல தலைப்புகள் தயார் செய்தபின் ஏதோ ஒரு தடுமாற்றம். மனதில் பதற்றம் வேறு. என்னை நானே பல கேள்விகள் கேட்டுக்கொண்டேன். என்னை நானே சுயப்பரிசோதனை செய்துக்கொண்டேன். முடிவாக எனக்குள் சிறிது தெளிவு பிறந்தது. அப்போது ஒரு எண்ணம் மனதில் உதித்தது. ஏன் எனது தளத்தில் கேள்வி-பதில் பகுதி துவங்கக்கூடாது என்று.

     எப்படி எனக்குள் எழுந்த பல கேள்விகளுக்கு எனக்குள்ளே பதில் தேடினேனோ, அதேபோல நமது சமூகத்தில் நடப்பதை கேள்விகளாக மாற்றி சமூகத்தின் முன்வைத்தால், சமூகத்தில் இருந்தே தெளிவு பிறக்கும் என்பதே பட்டிக்காட்டின் நம்பிக்கை. வாசகர்களின் கேள்விகளும் வரவேற்கப்படும். இனி ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மாலை 6 மணி முதல் கேள்வி-பதில்களுடன், பட்டிக்காடு இணையதளம் வாசகர்களுக்காக காத்திருக்கும்.

கேள்வி பதில் – 1

கேள்வி: இணையத்தில் ஆங்கிலம் தான் உலகளாவிய மொழியா? ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும் தானா இணையம்?
பதில்: இணையத்திற்கு சாவி போன்று இருப்பது ஆங்கில மொழி தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் 2015ஆம் ஆண்டு இறுதியில் ஒரு ஆச்சரியமான ஆராய்ச்சி முடிவு ஒன்று வெளியானது. ஆங்கில மொழியின் உலகளாவிய ஆதிக்கத்தில் இருந்து இணையம் மெல்ல மெல்ல தன்னை விடுவித்துக்கொண்டு வருகிறது என்பது தான் அந்த ஆராய்ச்சியின் சாரம். வரலாற்றில் முதல் முறையாக 2015ல் தான் இணையத்தில் 50% சதவீதத்திற்கு அதிகமாக ஆங்கிலம் தவிர்த்த பிற மொழி இணைய தளங்கள் பயன்பாட்டில் இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது என்ன? அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த செய்தியா? என்று வினாவும் முன் இந்த பத்தியை முழுவதுமாக படித்துவிடுங்கள். 1990களில் இணையத்தில் ஆங்கிலத்தின் பங்கு 95% சதவீதமாகவும், 2000களில் இது 80% சதவீதமாகவும் குறைந்து, இப்பொழுது 2015ல் 50% சதவீதத்திற்கும் குறைவாக மாறியுள்ளது. மேலும், இந்த ஆராய்ச்சியில் சமூக வலைதளங்கள் கணக்கில் சேர்க்கப்படவில்லை. அவற்றை சேர்த்திருந்தால் நிச்சயம் ஆங்கிலத்தின் பங்கு வெகுவாக குறைந்திருப்பதை கண்டிருப்போம்.

     இணைய உலகம் மெல்ல மெல்ல ஆங்கில ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டுக்கொண்டு வருகிறது. ஆனால் 250 கோடி மக்கள்தொகை கொண்ட இந்திய, சீன நாட்டு மொழிகளின் இணைய ஆதிக்கம் வெறும் 4.5% முதல் 5.0% சதவீதமே. இந்தி, உருது, தமிழ், தெலுங்கு, மாராத்தி போன்ற அனைத்து இந்திய மொழிகளின் பங்களிப்பு சேர்த்து வெறும் 1.5% சதவீதம் தான். ஆங்கிலத்தை தாய் மொழியாக கொண்டவர்கள் வெறும் 45 கோடி மக்கள் தான், ஆனால் அவர்கள் வலைப்பதிவுகள் வழியாகவும், இணைய தளங்கள் வழியாகவும், சமூக வலைத்தளங்கள் வழியாக எழுதிக்குவிக்கிறார்கள். அதனால் தான் இணையத்தில் அவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. அவர்களுக்கு இணையம் பரவலாக கிடைத்தது 1990களில், நம்மை போன்ற எழ்மை நாடான இந்தியாவிற்கு இணையம் பரவலாக கிடைத்ததே 2009ற்கு பிறகு தானே.

     நம் மக்களும், முக்கியமாக இளைஞர்கள், எழுதிக்குவிப்பார்கள் என்று நம்புவோம். ஆக இணையத்தில் இந்திய மொழி நுகர்வுக்கு மிகப்பெரிய வளர்ச்சி காத்திருக்கிறது. இதனை சரியாக பயன்படுத்த அரசாங்கம் எப்போதும் போல எதுவும் செய்யாது, அது கிடக்கட்டும். ஆனால் நிச்சயமாக நுகர்வதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள். அதே சமயம், Tanglish பாணியில் சமூக வலைத்தளங்களில் நிறைய கருத்துக்கள் பகிரப்படுகின்றன என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை. இதற்கு பல புறக்காரணங்கள் இருந்தாலும், இந்த பாணி மிகவும் வண்மையாக கண்டிக்கத்தக்கது. ஆனால் தாய் மொழியில் பேச மட்டும் தெரிந்தால் போதும் என்று சமூகத்தில் ஒரு கூட்டம் சுற்றிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு வேண்டுமானால், Tanglishல் ஆவது தமிழ் மொழி பயன்பாட்டில் இருக்கிறதே என்று வெட்டிப் பேச்சு பேச அந்த எழுத்துக்கள் பயன்படும். அதனால் தமிழ் மொழிக்கும், தமிழ் இணையத்திற்கும் எந்த பயனுமில்லை என்பதே எதார்த்தம்.

   தமிழ் இணையத்திற்கு வசந்த காலம் வெகு தொலைவில் இல்லை. அதேசமயம், இணையத்தில் தமிழ் மொழியானது நடை பழகி வருகிறது.  இனி, ஆங்கிலம் தெரிந்தவர்களுக்குத் தான் இணையம் என்னும் சர்வாதிகாரமும் ஏகாதிபத்தியமும் மெல்ல சாகும். பல்வேறு மொழிகளுக்கான சமத்துவமாகவும், ஜனநாயகமும், இணையம் விரைவில் மலரும். அதில் தமிழ் மொழியின் பங்கும் நிச்சயம் இருக்கும்.

     –      கேள்விகள் பிறக்கட்டும்…